Published:Updated:

40 வருட சம்பள பாக்கி... காத்திருந்து கொடுத்த தயாரிப்பாளர்... நெகிழும் நடிகை!

Oorvasi Sarada with S.Janaki
Oorvasi Sarada with S.Janaki

`நிகழ்ச்சி முடிஞ்சதும் நாங்க பேசிட்டிருந்தப்ப, கையில ஒரு கவரைத் தந்தார். அந்தச் சமயத்துல `பழைய பாக்கி' குறித்த பேச்செல்லாம் எதுவும் இல்ல. எனக்குதான் அவர் சம்பளப் பாக்கி வச்சதே ஞாபகத்துல இல்லையே.’

தயாரிப்பாளர் ஒருவர் தன் படத்தில் நடித்த நடிகைக்குத் தர வேண்டிய சம்பளப் பாக்கியை ஞாபகத்தில் வைத்திருந்து, நாற்பது வருடங்கள் கழித்துத் தந்திருக்கிறார்.

``சம்பளப் பாக்கியை செட்டில் செய்து விட்டுப் படத்தை வெளியிடட்டும்' என ரிலீஸ் சமயத்தில் கிளம்புகிற பஞ்சாயத்துகளைத்தானே கோலிவுட்டில் பார்க்க முடியும், இது வேற லெவலா இருக்கே..'' என விசாரித்தோம். தகவல் சரிதான். அந்தத் தயாரிப்பாளர் மல்லுவுட்டைச் சேர்ந்த வி.வி.ஆண்டனி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் வந்த பழம்பெரும் நடிகை `ஊர்வசி' சாரதாவிடம்தான் சம்பளப் பாக்கியைக் கொடுத்திருக்கிறார் ஆண்டனி.

Oorvasi Sarada
Oorvasi Sarada

சாரதாவிடம் பேசினேன்.

`` `புஷ்ய ராகம்'னு அந்தப் படம். மலையாளத்துல வெளிவந்தது. நான், ஶ்ரீவித்யால்லாம் நடிச்சிருப்போம். சரியா 1979-ல் ரிலீஸாச்சுன்னு அன்னைக்கு அவர் சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் சம்பளப் பாக்கி வச்சதும் இப்ப யோசிச்சுப் பார்த்த பிறகுதான் லேசா ஞாபகத்துக்கு வருது. அதேநேரம், அந்தப் படத்துக்கான ஷூட்டிங் ஞாபகங்கள்லாம் கொஞ்சம் கொஞ்சம் நினைவுல இருக்கு. வயசு ஆயிடுச்சில்லையா தம்பி'' என்றவர், ``ஆனா என்னை விட அதிக வயசு ஆண்டனிக்கு. ஆனா மனுஷன் மறக்காம ஞாபகத்துல வச்சிருந்திருக்கார் பாருங்க. அப்புறம், உழைப்புக்குப் பேசின ஊதியத்தைத் தந்துடணும்'கிற அவரோட அந்த நேர்மைக்கும் ஒரு சல்யூட் அடிக்கணும்'' என்றவர், ஆண்டனியைச் சந்தித்தது குறித்துத் தொடர்கிறார்..

``மலையாளத்துல நான் நடிச்ச ஒரு படத்துக்கு இது ஐம்பதாவது ஆண்டு. அதைக் கொண்டாடற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. என்னையும் கூப்பிட்டிருந்தாங்க. கொச்சியில நடந்த நிகழ்ச்சிக்குச் சில தினங்களுக்கு முன்னாடி போயிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு ஆண்டனியும் வந்திருந்தார். `சினிமா சார்ந்த நிகழ்ச்சி'ங்கிறதால எல்லாரையும் போல வந்திருப்பார்னு நினைச்சேன். ஆனா பிறகுதான் தெரிஞ்சது, நான் அந்த நிகழ்ச்சியில கலந்துக்கறேன்'னு தெரிஞ்சதாலேயே வந்திருக்கார். அதுவும்போக எனக்கு வச்சிருந்த கடனை அடைக்கணும்கிற ஒரே நோக்கத்துடனேயே அந்த விழாவுக்கு வந்திருக்கார்னு!

Oorvasi Sarada
Oorvasi Sarada

நிகழ்ச்சி முடிஞ்சதும் நாங்க பேசிட்டிருந்தப்ப, கையில ஒரு கவரைத் தந்தார். அந்தச் சமயத்துல `பழைய பாக்கி' குறித்த பேச்செல்லாம் எதுவும் இல்ல. எனக்குதான் அவர் சம்பளப் பாக்கி வச்சதே ஞாபகத்துல இல்லையே. `என்னது'னு கேட்டதுக்கு, `நம்ம படத்தோட பழைய ஸ்டில்ஸ், வச்சுக்குங்க'ன்னார். சரினு வாங்கிட்டு தங்கியிருந்த ஹோட்டல்ல வந்து பிரிச்சுப் பார்த்தா கவருக்குள் பத்தாயிரம் ரூபாய் பணம் இருக்கு.

`என்ன இது'னு பதறிப் போய் அவருக்கு போன் போட்டப்பதான் சொல்றார், ''புஷ்யராகம்' படத்துல நீங்க நடிச்சதுக்கான சம்பளத்துல 2,000 ரூபாய் நான் பாக்கி வச்சிருந்தேன். இப்ப அந்தத் தொகையின் மதிப்பு பல மடங்கு அதிகம்தான். ஆனாலும் என்னால இப்ப முடிஞ்சதைத் தந்திருக்கேன்'னார்.

Oorvasi Sarada with VV Antony
Oorvasi Sarada with VV Antony

`புஷ்ரயராகம்' படத்துக்குப் பிறகும் சில படங்களை அவர் தயாரிச்சிருக்கார். அந்த நேரத்துலயே எனக்கு செட்டில் செய்துடணும்னு நினைச்சதாகவும், என்னைத் தொடர்பு கொள்ள முடியாமப் போயிடுச்சுன்னும் சொல்லி வருத்தப்பட்டார். கொச்சி விழாவுல நான் கலந்துக்கறேன்னு தெரிஞ்சதும் வயசையும் பொருட்படுத்தாம, என்னோட சம்பளப் பாக்கியை செட்டில் செய்யறதுக்காக வந்திருக்கார். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களெல்லாம் அப்ப இருந்திருக்கார் பாருங்க!''

என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் சாரதா

சினிமா விமர்சனம்: அசுரன்
அடுத்த கட்டுரைக்கு