Published:Updated:

`கமல் என் படத்தில் நடிக்க வேண்டும்... அல்லது..?!" - ஞானவேல் ராஜாவின் புகார்

ஞானவேல் ராஜாவின் புகாருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் கமல்?!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல் நடிப்பில் உருவான 'உத்தம வில்லன்' படத்தை 2015-ம் ஆண்டு மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் ரிலீஸ் செய்தனர். லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கிய 'உத்தம வில்லன்' படத்தை லிங்குசாமிக்கு முதல் பிரின்ட் அடிப்படையில் தயாரித்துக் கொடுத்தார் கமல். இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்னை ஏற்பட்டபோது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம் 'அடுத்து உங்களுக்கு ஒரு படத்தை முதல் பிரின்ட் முறையில் நடித்து இயக்கித் தருகிறேன். அதன் பட்ஜெட் 40 கோடி என்றால், நீங்கள் 30 கோடி கொடுத்தால் போதும். மிச்சம் 10 கோடி ரூபாயை இப்போது கொடுங்கள்' என்ற வாக்குறுதியை கமல் அளித்திருந்ததாகச் சொல்கிறார்கள்.

பணம் பெற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் கமல் ஹாசன் நடிக்கவில்லை. தற்போது சிம்பு நடித்துவரும் 'மப்ஃடி' படத்தைத் தயாரித்துவரும் ஞானவேல் ராஜா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குச் சென்று புகார் கொடுத்திருக்கிறார். " 'உத்தம வில்லன்' பட பிரச்னையின்போது எனக்கு 10 கோடி தருவதாக வாக்குறுதி கொடுத்தார் கமல்.

  ஞானவேல் ராஜா
ஞானவேல் ராஜா

இதுவரை என்னுடைய தயாரிப்பில் அவர் நடிக்கவும் இல்லை, முன்பே ஒப்புக்கொண்டதைப்போல 10 கோடி பணத்தைத் திருப்பித் தரவும் இல்லை. இந்த விவகாரத்தில் கவுன்சில் தலையிட்டு எனக்குச் சேரவேண்டிய 10 கோடி ரூபாயைப் பெற்றுத் தரவேண்டும்" என்று சொல்லியிருக்கிறார் ஞானவேல் ராஜா. இவருடைய புகாரின் அடிப்படையில் விளக்கம் அளிக்குமாறு கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். இதுகுறித்து ஜே.எஸ்.கே சதிஷீடம் பேசினோம். ''ஆமாம். புகார் வந்திருக்கிறது. விசாரிக்க ஆரம்பித்திருக்கிறோம்'' என்றார்.