Published:Updated:

``நானா கொரோனாவைவிட கொடிய வைரஸ்... வேலு பிரபாகரன் படத்துல இதுதான் நடந்தது!" - ஜேஎஸ்கே பேட்டி

ஜே.எஸ்.கே தயாரித்த வேலு பிரபாகரனின் காதல் கதை
ஜே.எஸ்.கே தயாரித்த வேலு பிரபாகரனின் காதல் கதை

`வேலு பிரபாகரனின் காதல் கதை’னு டைட்டிலை மாத்தி, சென்சார் ஆட்சேபிக்கறக் காட்சிகளை மாத்தி, நிறைய வொர்க் பண்ணி, சர்ட்டிஃபிகேட் வாங்கி ரிலீஸ் செய்தேன். அப்பவே அவருக்கான செட்டில்மென்ட் எல்லாமே முடிஞ்சிடுச்சு.

``கொரோனாவை விடக் கொடிய மனித வைரஸ்" - திரைப்படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே என அழைக்கப்படும் ஜே.சதீஷ்குமாரை இப்படி விமர்சித்து இயக்குநர் வேலு பிரபாகரன் வெளியிட்டிருந்த வீடியோ தமிழ்த் திரையுலகில் பலத்த சலசலப்பைக் கிளப்பியுள்ளது.

"ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் வேலுபிரபாகரன் இயக்கிய படம் ஒன்றுக்கு ரிலீஸ் சமயத்தில் சிக்கல் எழ, ஜே.எஸ்.கே தலையிட்டு படத்தை வாங்கி வெளியிட்டிருந்தார். அப்போது நடந்த கொடுக்கல் வாங்கல் தகராறின் தொடர்ச்சிதான் இந்தப் பஞ்சாயத்து" என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

வீடியோவில், ``அயோக்கியன்... நீ சாப்பிடுகிற சாப்பாடு என் ரத்தம்" என்கிற ரீதியில் வார்த்தைகளை வேலுபிரபாகரன் பயன்படுத்தியிருந்த நிலையில், இந்த வீடியோ குறித்து, ஜே.சதீஷ்குமாரிடம் பேசினோம்.

வேலு பிரபாகரன்
வேலு பிரபாகரன்

``பேச்சு முழுக்கப் பொய். அதுவும் போக உன்னை என்னால என்ன வேணாலும் செய்ய முடியும்னுலாம் பேசியிருந்தார். அதனால காவல்துறையில முறைப்படி புகார் தந்திருக்கேன். இந்த விஷயம் பத்திப் பேசறதையே நான் விரும்பல. ஆனாலும் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியாதவங்களும் இருக்கலாம்கிறதால சில விஷயங்களைச் சொல்றேன்'’ என்றபடி தொடர்ந்தார்.

``வேலு பிரபாகரன் எடுத்த அந்தப் படத்துக்கு அவர் முதல்ல வெச்சிருந்த பெயர் `காதல் அரங்கம்’. சென்சார் சர்ட்டிஃபிகேட் கிடைக்கல. தடை விதிச்சிட்டாங்க. எல்லாமே நிர்வாணக் காட்சிகள். கேரக்டர்களை மானாவாரியா நிர்வாணமா உலாவ விட்டிருந்தா தடை விதிக்காம என்னங்க செய்வாங்க? வீட்டை வித்தேன், காட்டை வித்தேங்கிறாரே, இப்படிப் படம் எடுக்கத்தான் எல்லாத்தையும் வித்திருக்கார். சரி, அது அவர் விருப்பம்.

பணம் போட்டுப் படம் எடுத்தாச்சு; அதை விக்க முடியலைன்னதும் ஒருத்தர் மூலமா என்கிட்ட வந்தார். நானும் படத்தைப் பார்த்தேன். என்ன செய்யலாம்னு யோசிச்சதுல படத்தை அப்படியே அவர்ட்ட இருந்து வாங்கி, `வேலு பிரபாகரனின் காதல் கதை’னு டைட்டிலை மாத்தி, சென்சார் ஆட்சேபிக்கறக் காட்சிகளை மாத்தி நிறைய வொர்க் பண்ணி, சர்ட்டிஃபிகேட் வாங்கி ரிலீஸ் செய்தேன். அப்பவே அவருக்கான செட்டில்மென்ட் எல்லாமே முடிஞ்சிடுச்சு. ஒருவேளை நான் தலையிடாமப் போயிருந்தா இன்னைக்கு வரைக்கும் அந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்காது. இவர் இப்படியொரு வீடியோ போட வேண்டிய சூழலே வந்திருக்காது.

படம் வெளியாகிடுச்சு. அதுக்குப் பிறகு நிறைய நிகழ்ச்சிகள்ல நாங்க ரெண்டு பேரும் சந்திச்சிருக்கோம், பேசியிருக்கோம். அப்பெல்லாம் எதுவும் பேசலையே? திடீர்னு இப்ப எப்படி நான் மோசடிக்காரனாகிட்டேனு தெரியலை. இவ்வளவு ஏன்? `என்னோட அடுத்த படத்தின் வெளியீட்டுக்கு முன்னாடி தந்துடுறேன்’னு எங்கிட்ட 2 லட்ச ரூபாய் கடனா வாங்கிட்டுப் போனார். அதுக்கான ஆதாரம் இப்பவும் எங்கிட்ட இருக்கு.

நான் என்ன கேக்கறேன்னா, நான் பண மோசடி செய்திருந்தா, சட்டபூர்வமா ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பாம இவ்ளோ வருஷமா என்ன செஞ்சிட்டிருந்தீங்க? வீடியோவுல படம் மிகப்பெரிய வசூல்னு சொல்லியிருக்கார். இப்படியொரு படம் வெளிவந்து வசூல்ல சக்கைப் போடு போட்டுச்சுன்னு சினிமாவுல இருக்கிற யாராவது ஒருத்தரைச் சொல்லச் சொல்லுங்க, பார்க்கலாம்?

ஜே.எஸ்.கே.
ஜே.எஸ்.கே.

பகுத்தறிவு அது இதுன்னு பேசறவர் சட்டபூர்வ நடவடிக்கைகள்ல எடுத்திருக்கணும்? அதை விட்டுட்டு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரலாம்கிற சூழல்ல திடீர்னு வந்து பாய்றார்னா, பின்னணி இல்லாமலா இருக்கும்? இப்படி நான் கேக்கலை. சினிமாவுல ஏகப்பட்ட பேர் கேக்கறாங்க. வீராவேசமாப் பேசற வேலுபிரபாகனுக்குத்தான் அது வெளிச்சம்" என்கிறார் ஜே.எஸ்.கே.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன பழைய விவகாரங்களையெல்லாம் தூசுத் தட்டப் போகிறார்களோ?

அடுத்த கட்டுரைக்கு