Published:Updated:

```விஸ்வாசம்' வசூலின் உண்மை, விஷாலின் போக்கு, ஆன்லைன் புக்கிங்கில் அரசின் அதிரடி!''- ஜே.எஸ்.கே.சதீஷ்

JSK Sathish
JSK Sathish

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யவிருக்கும் முறை குறித்துப் பேசுகிறார்.

"படம் வெளியான நாளே படத்துக்கான சக்ஸஸ் பார்ட்டியை வெச்சிடுறாங்க சில தயாரிப்பாளர்கள். மார்க்கெட்ல தங்களை நிலை நிறுத்திக்கிறதுக்காக இப்படிப் பண்றாங்க. தயாரிப்பாளர்கள் மட்டுமா, ஹீரோக்களும் அதையே ஃபாலோ பண்றாங்க. சினிமாவில் தயாரிப்பாளரா இருந்தாலே லாபம் பார்க்கலாம்னு கண்மூடித்தனமா நம்புனவங்க நஷ்டத்தைப் பார்க்க ஆரம்பிச்சிடுறாங்க. பல தயாரிப்பாளர்கள் தொடர் தோல்வியால் காணாமலும் போயிட்டாங்க." வருத்தத்துடன் பேசுகிறார், தயாரிப்பாளார் ஜே.எஸ்.கே.சதீஷ்.

`` `சைக்கோ' படத்துக்கு ஒளிப்பதிவாளர் நான் இல்லை... மிஷ்கின் புரிந்துகொள்வார்" - பி.சி.ஶ்ரீராம்

தயாரிப்பாளர்களின் தோல்விக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க?

"ஒரு படத்துல கடைக்கோடி தொழிலாளி வரை அவன் செய்ற வேலைக்குத் தேவையான ஊதியத்துடன் வெளியே போறான். ஆனா, பணம் போடுற தயாரிப்பாளருக்கு அது கிடைக்கிறதில்லை. ஒரு படத்தின் வெற்றியும், வசூலும்தான் தயாரிப்பாளருக்கு லாபமா, இல்லையானு சொல்லும். இன்னைக்குத் தேதிவரை ஒரு படத்தின் உண்மையான வசூலை தியேட்டர்ல இருந்து வர்ற, விநியோகஸ்தர்கள் கொடுக்கிற பட்டியலை வெச்சுத்தான் கணிக்க முடியும். 500 பேர் வந்திருக்கிற தியேட்டர்ல 150 பேர்தான் வந்ததா சொல்லி ஏமாத்தவும் செய்வாங்க. தியேட்டரிலிருந்து சரியான ரிசல்ட் இன்னும் கிடைக்கிறதில்லை. ஒரு நடிகரின் படம் வெற்றியடைஞ்சுட்டா, உடனே அவருடைய சம்பளத்தை அதிகமாக்கிடுறார். 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குறவர், 4 கோடி ரூபாய் கேட்கிறார். தயாரிப்பாளர்களுக்கு இதுக்கு இணங்கிப்போறாங்க. இந்தப் பழக்கம்தான் சினிமாவைக் கடுமையான நெருக்கடிக்குக் கொண்டுவந்து விட்ருக்குனு சொல்லலாம்.

இந்திய அளவில் அரசாங்கம் ஆன்லைன் புக்கிங் சிஸ்டமைக் கொண்டு வர்றப்போ, பலருக்கு அதில் சந்தேகம் இருக்கு. அமைச்சர் கடம்பூர் ராஜூ திரைத்துறையில் இருக்கிற பிரச்னைகளைக் கேட்டுட்டு, ஆன்லைனில் புக்கிங் பண்ற வசதியை முதல்ல இங்கே ஆரம்பிப்போம்னு சொல்லியிருக்கார்."

"தமிழ்நாட்டில் இருக்கிற மொத்தத் திரையரங்குகளும் அரசுக்குக் கீழ் இயங்கும் சர்வர் மூலமாக தியேட்டர் வசூலைக் கண்காணிக்க முடியும். இது நடைமுறைக்கு வரும்போது ஒவ்வொரு காட்சிக்குமான வசூலை உடனுக்குடன் பார்க்க முடியும். வெளிப்படையான வசூல் கணக்கு தெரியும்போது அது தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்."
ஜே.எஸ்.கே.சதீஷ்

கிராமத்துல இருக்கிற மக்களுக்கு இந்த ஆன்லைன் புக்கிங் சேவை சாத்தியமா?

Producers
Producers

"டிஜிட்டல் மயமாக்கலுக்குப் பிறகு 99% க்யூப் சிஸ்டம்ல படம் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். இந்த சிஸ்டம் கிராமத்துப் பகுதியில் இருக்கிற தியேட்டர்களிலும் நடைமுறையில இருக்கு. அப்படியிருக்கும் பட்சத்தில் ஆன்லைன் டிக்கெட் சேவையும் சாத்தியம்தான். படங்களை தியேட்டர்களில் ரெக்கார்டு பண்றாங்கனு புகார் வர ஆரம்பிச்சதுக்குப் பிறகு எல்லா தியேட்டர்களிலும் கேமரா வைக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. அதனால, இதுவும் சாத்தியம்தான்."

இத்தனை பாதுகாப்பு வசதிகள் இருந்தும் பெரிய படங்கள் உட்பட பலவும் தமிழ் ராக்கர்ஸில் வரக் காரணம் என்ன?

"முறையற்ற வெப் சீரிஸ்கள் எல்லாமே இணைய வசதியுடன்தான் நடக்குது. மத்திய அமைச்சரிடம் இதற்கான கோரிக்கையை முன் வெச்சிருக்கோம். சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர் சித்தார்த், `ஆபாச இணையதளங்களை எப்படி முடக்கினாங்களோ, அதேமாதிரி முறையற்று இயங்கும் இணையதளங்களையும் முடக்கணும்னு' நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். இதுவும் நடைமுறைக்கு வரும்போது, தயாரிப்பாளர்களுக்கு நிம்மதிதான்."

ஒரு படத்தின் வசூலை வைத்து நடிகர்கள் சம்பளம் நிர்ணயிக்கப்படணும்னு சொல்லியிருக்கீங்களே, அது சாத்தியமா?

Tamil Cinema Icons
Tamil Cinema Icons

"இன்னைக்கு இருக்கிற சினிமாவில் மக்களுக்கு நல்ல அறிமுகமான ஹீரோக்கள் படக் கதையின் போக்கு, இயக்குநர்கள் எல்லாத்தையும் ஹீரோதான் டிசைன் பண்றார். இன்னும் சொல்லப்போனா, ஹீரோயின்களைக்கூட அவங்கதான் தேர்ந்தெடுக்கிறாங்க. ஹீரோக்கள் சொன்ன எல்லா விஷயத்தையும் தயாரிப்பாளர்கள் பண்ணிக் கொடுத்ததுக்குப் பிறகும் அந்தப் படம் தோல்வியடைந்தால், அதுக்கு ஹீரோக்கள்தான் பொறுப்பு. ஆனா, அவரோட அடுத்த படத்தில் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பார். 'நான் இதுக்கு முன்னாடி நடிச்ச படம் ஹிட்டுதான். வரி கட்டுறதுக்காகத் தயாரிப்பாளர் தோல்வினு பொய் சொல்றார்'னு சொல்லிடுவார். வெளிப்படையான வசூல் கணக்கு வரும்போது, ஹீரோக்களின் சம்பளம் வரையறுக்கப்படும். இதுதான் தயாரிப்பாளர்கள் எல்லாருடைய எண்ணமும், நோக்கமும்."

சினிமா சங்கங்களின் பிரச்னைகளில் அரசின் தலையீடு எதற்காக?

"விஷால் தலைமைப் பொறுப்பு வகிக்கும்போது, தயாரிப்பாளர்கள் பலரும் நீதிமன்றத்துக்குப் போனாங்க. ஏன்னா, சங்கத்துல அவர் நினைச்சது மட்டும்தான் நடக்கும். எந்தவொரு பொதுக்குழுவும் முறையா நடக்கல. ஆண்டுக் கணக்கு முடிஞ்சவுடனே, நிலுவைத் தொகைப் பட்டியல் எதையும் விஷால் தலைமையிலான அணியினர் காட்டல. அதேமாதிரி 'fixed deposit' பணத்தை எடுத்து அவங்களுக்குத் தேவையானவங்களுக்கு மட்டும் நன்கொடை கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஓட்டுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் இப்படிச் செஞ்சிருக்கார், விஷால். 1,300 தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களா இருக்காங்க. ஆனா, விஷாலுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும்தான் நன்கொடை போகுது. சந்தா பணம், புது உறுப்பினர்கள் பணம் எல்லாமே போயிடுச்சு. 7 கோடி ரூபாய் வரை விஷால் தலைவர் ஆனபோது இருந்தது. ஆனா, இப்போ வெறும் 50 லட்சம் ரூபாய்தான் இருக்கு. அதற்கான ஆய்வுகள் நீதிமன்ற உத்தரவுப்படி நடக்குது. அதுக்குப் பிறகு ஒரு மாதம் விஷாலுக்குக் கால அவகாசம் கொடுத்து, அதுக்குப் பிறகுதான் நீதிமன்றத்தின் வாயிலாக சிறப்பு அலுவலரை நியமனம் பண்ணாங்க."

`விஸ்வாசம்' படத்தின் வசூல் கணக்கு பொய்யானதுனு ட்விட்டரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலானது குறித்து?

Viswasam
Viswasam

"தயாரிப்பாளருக்குத்தான் படத்தின் வெற்றி, தோல்வி குறித்த உண்மை நிலவரம் தெரியும். ஆனா, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிதான். ஏன்னா, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபம் கிடைச்சதால, அதுல இருந்து ஒரு தொகையைத் தயாரிப்பாளருக்குக் கொடுத்தாங்க. இதுல எந்தச் சந்தேகமும் இல்லை."

அடுத்த கட்டுரைக்கு