Published:Updated:

``போலீஸ் கேட்டாலாவது பதில் சொல்லுங்க அதர்வா!’’- புகாருக்குக் காரணம் சொல்லும் மதியழகன்

அதர்வா தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்த தயாரிப்பாளர் மதியழகன் பேட்டி!

தயாரிப்பாளர் மதியழகன்
தயாரிப்பாளர் மதியழகன்

நடிகர் அதர்வா தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தயாரிப்பாளர் மதியழகன் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவர்களுக்குள் என்ன பிரச்னை, எந்தப் படத்துக்காகப் பணப் பரிமாற்றம் நடந்தது எனத் தயாரிப்பாளர் மதியழகனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

" 'செம போத ஆகாத' படத்தைத் தயாரிச்சு நடிச்சிருந்தார் அதர்வா. 2.5 கோடி ரூபாயில் எடுத்த படத்தை 5.5 கோடி கொடுத்து 'outright' முறையில் வாங்குவதாக ஒப்பந்தம் போட்டேன். அவுட்ரைட் முறை என்பது வாங்கிய பணத்தைவிட நஷ்டமானாலும் லாபமானாலும் விற்றவருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே. முதலில் 4.5 கோடி கொடுத்துவிட்டேன். மீதி ஒரு கோடியை விநியோகஸ்தர்கள்கிட்ட இருந்து வாங்கிக் கொடுக்கணும். நான் அதர்வாகிட்ட படத்தை வாங்கின மாதிரியே படம் நஷ்டமானாலும் லாபமானாலும் எனக்கு எதுவுமில்லைனு விநியோகஸ்தர்களுக்குக் கொடுத்தேன். அப்போதான் சினிமா ஸ்ட்ரைக் நடந்தது. அதனால் படத்தை உடனே ரிலீஸ் செய்ய முடியலை. அந்த நேரத்துல எனக்கும் அதர்வாவுக்கும் நல்ல நட்பு உருவாச்சு. அவரே 'நாம ஒரு படம் பண்ணலாமா?'னு கேட்டு இயக்குநரையும் அவரே சொன்னார். 'மரகத நாணயம்' எடுத்த சரவணன்தான் அந்த இயக்குநர்.

தயாரிப்பாளர் மதியழகன் - அதர்வா
தயாரிப்பாளர் மதியழகன் - அதர்வா

'நீங்கப் பெரிய தொகை கொடுத்திருக்கீங்க. உங்களுக்கு இந்தப் படத்துல நஷ்டமாகிடுச்சுனா, அடுத்த படம் நான் பண்ணித்தர்றேன்'னு சொல்லிதான் கமிட் பண்ணார். 'சரவணன் ஏற்கெனவே ஹிட் கொடுத்த இயக்குநர். இந்தப் படம் விக்குறதுல எந்தப் பிரச்னையும் இருக்காது. அதனால எனக்கு 1.5 கோடி + ஜி.எஸ்.டி சம்பளமா தரணும்னு அதர்வா சொன்னார். அதர்வா கேட்ட 1.5 கோடியில் 45 லட்சம் அட்வான்ஸா கொடுத்துட்டேன். அதுக்கு ரசீதும் கொடுத்தார். அதர்வா ஆபீஸ்ல வெச்சே இயக்குநரை கமிட் பண்ணி அவருக்கும் அலுவலகம் போட்டுக் கொடுத்துட்டேன். ஹீரோயினா பார்வதி மேனன், இமான் மியூசிக்னு எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு. இதுக்கு 70 லட்சம் செலவு பண்ணிட்டேன். ஏன்னா, 'செம போத ஆகாத' ரிலீஸ் ஆனவுடனே ஷூட்டிங் ஆரம்பிச்சிடலாம். 50 நாள்ல படத்தை முடிச்சிடலாம்னு பிளான் இருந்தது. 'மின்னல் வீரன்'னு இந்தப் படத்துக்கு டைட்டில் பதிவு பண்ணி எல்லா வேலையும் நடந்தது. 'ஸ்ட்ரைக்னால நிறைய படங்கள் தேங்கி இருக்கு. நாங்க கொடுக்கிற தேதியில்தான் படத்தை வெளியிடணும்'னு கவுன்சில்ல சொன்னதுனால 'செம போத ஆகாத' ரிலீஸ் ஆகுறதுல இன்னும் தாமதமாச்சு. கடைசியா போன வருஷம் ஜூன் மாசம் படத்தை ரிலீஸ் பண்ண டேட் கிடைச்சது.

பட ரிலீஸூக்கு முந்தின நாள் போன் பண்ணி, 'அந்த ஒரு கோடி எடுத்துட்டு வாங்க'னு சொன்னார் அதர்வா. நான் 'லேப் கிளியரன்ஸ் கொடுங்க. நான் எடுத்துட்டு வரேன்'னு சொன்னேன். படத்துக்கு ஃபைனான்ஸ் பிரச்னை எதுவும் இல்லைங்கிறதுதான் அந்த கிளியரன்ஸ். அப்போதான் அதர்வாவுக்கு இந்தப் படத்துக்காக வாங்கின கடன் இருக்குனு எனக்கு தெரிய வந்தது. நான் ஆரம்பத்துல கொடுத்த 4.5 கோடி ரூபாயையும் அவர் செலவு பண்ணிட்டார். அந்த ஃபைனான்ஸியருக்கும் முழுத் தொகையை அவர் கொடுக்கலை. அந்த பைனான்ஸியர்கிட்ட நான் கேட்டதுக்கு 'இதுல நீங்க தலையிட முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. அந்த ஃபைனான்ஸியர் முழு பணம் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் பண்ண முடியாதுனு சொல்லிட்டார். இதெல்லாம் வியாழக்கிழமை நடக்குது. விஷால், கதிரேசன், துரைராஜ், பிரவீன் காந்த்னு கவுன்சில்ல இருந்து பேசினாங்க. பைனான்ஸியர்கிட்ட பேசி வட்டி 1.5 கோடியை குறைச்சாங்க. வட்டி போக 3 கோடி ரூபாய் கொடுத்தா படம் ரிலீஸாகும். 'நான் ஒரு கோடி ரூபாய் தரேன். நீங்க 2 கோடி ரூபாய் ரெடி பண்ணுங்க'னு அதர்வாகிட்ட சொன்னேன். காரணம், எனக்கு எல்லா ஊர்ல இருந்தும் பிரஷர் வர ஆரம்பிச்சிருச்சு. இந்தப் படம் ரிலீஸாகாதுனு எல்லோரும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் மதியழகன் - அதர்வா
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் தயாரிப்பாளர் மதியழகன் - அதர்வா

'இந்தப் படம் வரலைன்னா, மொத்தமா 6 கோடி கொடுக்கணும்'னு கவுன்சில்ல இருந்து சொல்லிட்டதுனால, இன்னொரு பைனான்ஸியர்கிட்ட போய், 'எனக்கு மூணு கோடி ரூபாய் கொடுங்க. இந்தப் படத்துடைய சேட்டிலைட் உரிமையையும் வெச்சுக்கோங்க. ரெண்டு படம் பண்ணித்தரேன்'னு சொல்லி அந்தப் பிரச்னையை முடிக்கிறார் அதர்வா. ஆனா, படம் ரெண்டு ஷோ கட் ஆகித்தான் வெளியாச்சு. ஷோ கட்டானதுனால நஷ்டம் என் பக்கம் வந்துடுச்சு. 4.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கின எனக்கு 88 லட்சம்தான் திரும்ப வந்தது. இது போக, அடுத்த படமா கமிட் பண்ணி வெச்சிருந்த 'மின்னல் வீரன்' படத்துக்கு அவருக்கு அட்வான்ஸ் 45 லட்சம், மத்த செலவு 70 லட்சம்னு அப்படியே நிக்குது. 'மின்னல் வீரன்' படத்தோட டைரக்டர் 'எப்போ ஷூட்டிங் போகலாம்'னு அதர்வாகிட்ட கேட்டதுக்கு, ' 'செம போத ஆகாத' படத்தோட அக்கவுன்ட்ஸ் க்ளோஸ் ஆகட்டும். அப்புறம் பாத்துக்கலாம்'னு சொல்லியிருக்கார். டைரக்டர் அப்செட்டாகிட்டார்.

'செம போத ஆகாத' பிரச்னையை என் படத்துக்குள்ள கொண்டுவராதீங்க'னு டைரக்டர் அவர் தரப்பு நியாயத்தை சொல்றார். ஆனா, அதர்வாவை அப்ரோச் பண்ணவே முடியலை. நடிகர் சங்கத்துலயும் தயாரிப்பாளர் சங்கத்துலயும் புகார் கொடுக்கிறேன். ஒரு மாசம் கழிச்சு, அதர்வாவை கூப்பிட்டு பேசினாங்க. ' 'மின்னல் வீரன்' வேண்டாம். வேற ஒரு படத்தை 5 கோடிக்கு ஃபர்ஸ்ட் காப்பி பேஸிஸ்ல உங்களுக்கு பண்ணித்தரேன்'னு சொன்னார். 'எனக்கு அதுல உடன்பாடில்லை. இந்தப் படம் பண்ணுங்க. இல்லைனா, எனக்கு நஷ்ட ஈடு கொடுங்க'னு சொன்னேன். எட்டு மணி நேரம் பேசினோம். விஷாலும் நிறைய பேசினார். ஆனா, அதர்வா ஒத்துக்கவேயில்லை. 'இது எங்க கையை விட்டு போயிடுச்சுனா, முழு நஷ்டத்தையும் நீங்கதான் கொடுக்கணும்'னு விஷால் அதர்வாகிட்ட சொல்லிட்டார்.

தயாரிப்பாளர் மதியழகன்
தயாரிப்பாளர் மதியழகன்

கடைசியா, 'இந்தப் படம் நான் பண்றேன். ஆனா, அட்வான்ஸா கொடுத்த 45 லட்சத்தை கேட்கக் கூடாது. படம் வெளியாகி லாபத்துல 75 லட்ச ருபாய் கொடுங்க'னு சொன்னார் அதர்வா. நான் ஓகே சொல்லிட்டேன். அதை ஒரு பேப்பர்ல எழுதி நான், அதர்வா, விஷால் எல்லோரும் கையெழுத்து போட்டோம். அதுல 'ஆறு மாசத்துக்குள்ள படத்தை முடிச்சுத்தரேன்'னு எழுதியிருந்தார். அந்தப் பேப்பர் கவுன்சில்ல இருக்கு. இந்த மீட்டிங்குக்கு நடுவுல டைரக்டர்கிட்ட போன்ல 'இந்தப் படம் நீங்க ஒத்துக்காதீங்க. வேற தயாரிப்பாளர்கிட்ட போகலாம்'னு பேசியிருக்கார். ஆனா, மறுநாள் இந்தப் பிரச்னை சுமுகமா முடிஞ்சுடுச்சுனு நியூஸ் வந்ததைப் பார்த்துட்டு, டைரக்டர் டென்ஷனாகி, 'இந்தப் படத்துல இருந்து நான் விலகிக்கிறேன். இதுக்கு மேல அவரை வெச்சு இந்தப் படத்தை பண்ணா கிரியேட்டிவிட்டி பாதிக்கும்'னு சொல்றார். அதர்வாகிட்ட கேட்டா, 'எனக்குத் தெரியாது. நீங்க டைரக்டரை சமாதானப்படுத்துங்க'னு சொல்றார். டைரக்டர் சரவணனுடைய கோரிக்கை நியாயமா இருந்தது. அதே மாதிரி, 6 மாசம் அவருக்கு ஆபீஸ் போட்டு நான் கொடுத்த அட்வான்ஸ் தொகையைக் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு திருப்பிக் கொடுத்து ரொம்ப நியாயமா நடந்துகிட்டார்.

'நீங்க சொன்ன டைரக்டர் போயிட்டார். கதையும் போயிடுச்சு. நான் சில இயக்குநர்கள் சொல்றேன். கதை கேளுங்க. அதே தேதியில நாம படம் பண்ணலாம்'னு சொன்னேன். ஆனா, நான் நிறைய படங்கள் பண்றேன். தெலுங்கு படம் பண்றேன். அப்படி இப்படினு இழுத்தடிச்சார். எனக்கு நம்பிக்கை விட்டுப்போச்சு. எனக்கு விநியோகஸ்தர்கள் பிரஷர் அதிகமாகிடுச்சு. 'படமே பண்ண வேண்டாம். உங்க ஒரு பட கால்ஷீட்டை கொடுங்க. நான் அதை வேற கம்பெனிக்கு மாத்திவிட்டுடுறேன். அந்தப் பணத்தை அவங்ககிட்ட இருந்து வாங்கிக்கிறேன். அந்த 45 லட்சம் எனக்கு வேண்டாம்'னு சொன்னேன்.

தயாரிப்பாளர் மதியழகன் - அதர்வா- இயக்குநர் சரவணன்
தயாரிப்பாளர் மதியழகன் - அதர்வா- இயக்குநர் சரவணன்

அவர் மேனஜர்கிட்ட இருந்தும் எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அவர் ஹைதராபாத்ல ஷூட்டிங்ல இருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டு அங்கே போனேன். ஆனா, அவர் என்னை மீட் பண்ணல. நான் அங்க வந்திருக்கேன்னு அவங்க அம்மாவுக்குத் தகவல் சொல்லியிருக்கார். அவங்க சிவசக்தி பாண்டியன் சாருக்கு சொல்லியிருக்காங்க. அவர் எனக்கு போன் பண்ணி, 'தம்பி கேள்விப்பட்டேன். நீங்க சென்னை வாங்க. நான் முடிச்சுக் கொடுக்கிறேன்'னு சொன்னார். அவர் சொன்னதுக்கு மரியாதை கொடுத்து சென்னை வந்துட்டேன். அதர்வாவுக்கு கால் பண்றதை நிறுத்திட்டு இவருக்கு கால் பண்ண ஆரம்பிச்சேன். 'தம்பி, என் போனையே எடுக்க மாட்டேங்குறார்'னு சொன்னார்.

திடீர்னு ஒரு நாள் போன் பண்ணி, 'தம்பிகிட்ட நான் பேசிட்டேன். அவர் பணம் கொடுத்திடுவார்'னு சொன்னார். மறுநாள் பொதுவான இடத்துல மீட் பண்ணோம். 'அட்வான்ஸ் திருப்பி கொடுத்திடுறேன். ஜி.எஸ்.டி கட்டிடுறேன். நீங்களும் உங்க படத்தை எல்லாம் முடிச்சிடுங்க. நான் கால்ஷீட் கொடுக்கிறேன்'னு சொன்னார். நான் ஓகே சொல்லிட்டேன். ஆனா, அவர் எனக்கு 15 லட்ச ரூபாய் அனுப்பிட்டு என் நம்பரை பிளாக் பண்ணிட்டார். நாலு மாசமாகி எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அவர் வீட்டுக்கு என் மேனேஜர் போனார். ரவுடிங்க வராங்கனு சொல்லி டெபுடி கமிஷனர் ஆபீஸுக்கு போன் பண்ணி புகார் கொடுத்தாங்க. அவங்க எனக்கு போன் பண்ணி கேட்டபோது, நான் நடந்ததைச் சொன்னேன்.

அதர்வா
அதர்வா

அதுக்குப் பிறகும் அவங்க தரப்புல இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. இப்போ 6 பேர் கொண்டு கவுன்சில்ல அரசாங்கம் நியமிச்ச நபர்கள் இருக்காங்க. அவங்ககிட்ட பழைய கதை எல்லாம் சொன்னேன். அவங்க போனையும் அவர் எடுக்கலை. 'இன்னிக்கு வரேன். நாளைக்கு வரேன்'னு சொல்லி என் மேல குறை சொல்லியிருக்கார். எனக்கு 6.10 கோடி நஷ்டம். அது எனக்கு இவர்கிட்ட இருந்து வராதுனு தெரியும். ஆனா, அவர் ஒப்பந்தத்துல குறிப்பிட்டபடி பணம் கொடுக்கட்டும். தவிர, அவருடைய ஒரு கால்ஷீட் வேணும்ங்கிறது என் கோரிக்கை. கால்ஷீட் தரலைனா, என் நஷ்டத்துல 30 சதவீதமோ 40 சதவீதமோ நஷ்ட ஈடா கொடுத்துட்டு 'மின்னல் வீரன்' படத்துக்காகக் கொடுத்த அட்வான்ஸ் 45 லட்சத்தையும் கொடுக்கணும்னு சொல்றேன். வேற வழியே இல்லாமல் கமிஷனர் ஆபீஸ்ல புகார் கொடுத்துட்டேன். கமிஷனர் ஆபீஸ்ல இருந்து கேட்டாலாவது அதர்வா சரியா ரெஸ்பான்ஸ் பண்றாரான்னு பார்ப்போம்" என்றார் மதியழகன்.

இது தொடர்பாக அதர்வா தரப்பிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பேசவில்லை. இது குறித்து தன் தரப்பு விஷயங்களை அதர்வா சொன்னவுடன் அவற்றையும் இங்கே பதிவு செய்துவிடுவோம்.