Published:Updated:

`சினிமா இல்லாத சமூகத்தை என்னால கற்பனை செய்ய முடியாது!’ - தயாரிப்பாளர் பிரபு திலக்

`கருத்து மட்டுமே சொல்லும் படம் `அடுத்த சாட்டை’ இல்லை ’ என்கிறார் படத்தின் தயாரிப்பாளரும், முதல் பெண் ஐ.பி.எஸ் திலகவதியின் மகனுமான பிரபு திலக்

பிரபு திலக்
பிரபு திலக்

இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி நடித்திருக்கும் படம் `அடுத்த சாட்டை’ இந்தப் படத்தை சமுத்திரக்கனியுடன் இணைந்து டாக்டர் பிரபு திலக் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் படத்துக்கு இசையமைத்துள்ளார். சாட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

பிரபு திலக்
பிரபு திலக்

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பிரபு திலக்கிடம் பேசினோம். ``சினிமா எனக்குள்ள ஒரு தாக்கத்தை உண்டுபண்ணின, சக்தி வாய்ந்த மீடியம்னுதான் சொல்லணும். பள்ளிநாள்களில் ரஜினி, கமல் படங்கள் ரீலிஸ் ஆன அன்றே போய் பார்ப்பேன். சினிமாவ வெறும் பொழுது போக்கா மட்டும் என்னால பாக்க முடியல. பொழுதுபோக்குக்கும் மேல ஒரு தாக்கத்தை எனக்குள்ள அது உண்டு பண்ணுச்சு. வீட்டுக்கு வந்துட்டு நான் பாத்த படத்த வீட்ல இருக்குறவங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணுவேன். அந்த விவாதங்கள், சினிமா பற்றி அறிய ஊன்றுகோலாக இருந்தது.

ஒரு சினிமாவ உருவாக்குற பல டிபார்ட்மெண்டுகளை புரிஞ்சுக்க முடிஞ்சது. எத்தனை பேருடைய உழைப்பு, வியர்வை, இந்த சினிமாவுல இருக்குங்குறத புரிஞ்சிக்க முடிஞ்சது. வீட்ல இயக்குநர் ஸ்ரீதர் படங்கள், பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் படங்கள் என இயக்குநர் வார படங்கள், நடிகர்கள் வார படங்கள், என வரிசைப்படுத்தி டிஸ்கஸ் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதுபோல ஸ்டடி செய்வது பயனுள்ளதாக இருந்தது.

என்னுடைய வார இறுதி நாள்களை அப்படித்தான் கழித்துள்ளேன். இது எனக்குள்ள பெரிய விழிப்புணர்வ ஏற்படுத்துச்சு. சினிமா நம்ம சமூகத்துல எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது எனக்குள்ள மிகப்பெரிய விஷயமாக இன்றைக்கும் இருக்கு. எங்க வீட்லயே ஒரு உதாரணம் இருக்கு. தமிழகத்தில பின்தங்கிய மாவட்டத்துல பிறந்தவங்க அம்மா திலகவதி. தர்மபுரில பிறந்து தமிழகத்தில் முதல் பெண் ஐ.பி.எஸ் ஆனதுக்கு பச்சை விளக்கு என்ற படம்தான் காரணம். `அது எனக்கு பெரிய இன்பிரேஷன்’னு அம்மாவே பலதடவ சொல்லியிருக்காங்க. இது மாதிரி சினிமா எத்தனை பேருடைய வாழ்க்கைல இன்ஸ்பிரேஷனாகவும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கு அப்படிங்குற எண்ணம் எனக்கு சினிமா மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துச்சு.

அடுத்த சாட்டை
அடுத்த சாட்டை

காலேஜ் சேரணும் அப்டின்றப்போ, ஃபிலிம் இன்ஸ்டிடியூட் சேரணும்தான் ஆசை. ஆனா, என்ன டாக்டராக்கி பாக்கணும்னு தாத்தாவுக்கு ரொம்ப ஆசை. நான் எம்.பி.பி.எஸ் படிக்கும்போதும் எனக்கு சினிமா மேல இருந்த காதல் குறையவே இல்லை. சினிமாவை விட்டு நான் ஒருநாளும் விலகியிருந்ததேயில்லை. நிறைய சினிமா நண்பர்கள், அவர்களுடன் பயணித்தேன். உதவி இயக்குநராக இருந்த என் நண்பர்களுடன் ஷூட்டிங் போவேன். நெறைய சினிமாவ படிக்க முடிந்தது. நண்பர்களின் போராட்டம், அவமானம், இவையெல்லாம் சினிமாவை நான் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது. அம்மா எழுத்தாளராக இருந்ததால, தமிழகத்தில் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள்கூட பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது. எனக்கு வாழ்க்கையில கெடச்ச பெரிய பாக்கியமா நினைக்கிறேன் அந்த அறிமுகங்கள.

அவங்களுடன் பழகும்போது, சினிமாவை வேறொரு கோணத்தில் பாக்கும் வாய்ப்பு ஏற்படுத்தியது. இரவு, பகலா சினிமா பார்த்த நாள்கள், சத்தியஜித்ரே, அகிராகுரோசோவா, நிறைய கொரியன் இயக்குநர்கள், எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்லி மாளாது. சென்னை வீதிகளில் நண்பர்களுடன் சினிமா பேசியிருக்கிறோம். இன்னைக்கு சினிமாவில் பெரிய இயக்குநர்களாக இருக்கும் என் நண்பர்களுடன் அவர்களின் தொடக்க காலத்தில் சினிமாவைப் பற்றி பேசியிருக்கிறேன். உணவு, உடை, இருப்பிடத்துக்குப் பிறகு பொழுதுபோக்கை முக்கியமாக நான் பார்க்கிறேன். எந்தக் கலைவடிவமாக இருந்தாலும் சரி, அது இறுதியாக வந்து சேர வேண்டிய இடம் சினிமாதான். மிகச்சிறந்த கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இருக்கும் இடம் சினிமாதான்.

தயாரிப்பாளர் பிரபு திலக்
தயாரிப்பாளர் பிரபு திலக்

சினிமா இல்லாத சமூகத்தை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது. சினிமா என்ற நெருப்பு சுடர்விட்டு எரிய எனக்கு ஒரு காற்று தேவைப்பட்டது, அதற்கு ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது, அதன் தொடர்ச்சியாகத்தான் என் முதல் படம் `அடுத்த சாட்டை’ சமுத்திரகனியுடன் சேர்ந்து நான் தயாரிச்சிருக்கிறேன். ஒரு காலகட்டத்தின் ஒரு பகுதியை இந்தப் படத்தில் சித்திரிச்சிருக்கிறோம். வாழ்க்கையின் ஒரு அங்கம்தானே சினிமா? அத மறுக்க முடியாதுல்ல. கருத்து மட்டுமே சொல்லும் படம் `அடுத்த சாட்டை’ இல்லை, ஒரு விவாதத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம்” என்றார்.