Published:Updated:

``ஆமா...`ஜகமே தந்திரம்' படத்தை ஓடிடியில் கேட்டாங்க... ஜூலையில் பாருங்க?'' - தயாரிப்பாளர் சஷிகாந்த்

தயாரிப்பாளர் சஷிகாந்த்

``தனுஷ் நடிச்ச படத்துலயே பெரிய பட்ஜெட் படம் இதுதான். கிட்டத்தட்ட 65 கோடி வரைக்கும் தயாரிப்பு செலவுகள் ஆகியிருக்கு." - `ஜகமே தந்திரம்' குறித்து சஷிகாந்த்.

``ஆமா...`ஜகமே தந்திரம்' படத்தை ஓடிடியில் கேட்டாங்க... ஜூலையில் பாருங்க?'' - தயாரிப்பாளர் சஷிகாந்த்

``தனுஷ் நடிச்ச படத்துலயே பெரிய பட்ஜெட் படம் இதுதான். கிட்டத்தட்ட 65 கோடி வரைக்கும் தயாரிப்பு செலவுகள் ஆகியிருக்கு." - `ஜகமே தந்திரம்' குறித்து சஷிகாந்த்.

Published:Updated:
தயாரிப்பாளர் சஷிகாந்த்

தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டிங் இயக்குநர்கள், இசையமைப்பாளர்களைப் பார்த்திருப்போம். ஆனால், இவர் டிரெண்ட் செட்டிங் தயாரிப்பாளர். ரஜினிகாந்த், விஜயகாந்த்களுக்கு மத்தியில் சத்தம் இல்லாமல் சைலன்ட் மோடில் இயங்கும் தமிழ் சினிமாவின் முக்கிய `காந்த்' இவர். `தமிழ்ப்படம்,' 'காதலில் சொதப்புவது எப்படி,' `இறுதிச்சுற்று,' `விக்ரம் வேதா' தற்போது `ஜகமே தந்திரம்' எனத் தமிழ் சினிமாவில் வித்தியாசப் படங்களைத் தயாரிக்கும் இளமையான, ரகளையான தயாரிப்பாளர் சஷிகாந்த்திடம் பேசினேன்.

`` `Y Not studio தயாரிப்பு' என இந்தப் பேரோடு `தமிழ்ப்படம்' வந்தபோது ஒன் டைம் வொண்டர்னுதான் எல்லோரும் நினைச்சாங்க... ஆனால் 10 வருஷம் 18 படங்கள்... எப்படி?''

``கொஞ்சம் க்ளிஷேதான்... ஆனா, வேற வழியில்ல. சின்ன வயசுல இருந்தே எனக்கும் சினிமா பிடிக்கும். அதனால ஆர்க்கிடெக்சர் படிச்சிருந்தாலும் உதவி இயக்குநரா மணிரத்னம் சார்கிட்ட கொஞ்சநாள் வேலைபார்த்தேன். அப்புறம் ஆர்கிடெக்ட்டா 10 வருஷம் வேலை. என் மனைவியும் ஆர்க்கிடெக்ட். ரெண்டு பேரும் சேர்ந்து சில புராஜெக்ட்ஸ் பண்ணோம். ஆனா, சினிமா ஆசை திரும்பவும் வந்துடுச்சு. சி.எஸ்.அமுதனும் நானும் பல வருஷ ஃபிரெண்ட்ஸ். அப்போ, `தமிழ்ப்படம்' கான்செப்ட்டை ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சோம். ரெண்டு பேருக்குமே இயக்குநர் ஆகணும்னு ஆசையிருந்தது. `நீ முதல்ல படம் டைரக்ட் பண்ணு. நான் புரொடியூஸ் பண்றேன்'னு சொல்லிட்டு ஆரம்பிச்சதுதான் `y not Studios.'

ஒரு படத்தை சும்மா காசு போட்டு படம் எடுக்குறோம்கிறதைவிட க்ரியேட்டிவா எடுக்கணும்னு நினைச்சேன். இதுவரைக்கும் வராத ஸ்டைல்ல, புது ஜானர்ல படங்கள் தயாரிக்கணும்னு நினைச்சு ஆரம்பிச்சேன். எங்க கம்பெனியோட மையம் இதுதான். `இந்த மாதிரியான படங்கள் ஏன் எடுத்தீங்க'னு யாராவது கேட்டா `y not'னு பதில் சொல்றதுக்காவே இந்தப் பேரை செலக்ட் பண்ணிட்டேன்.''

``வேலையைவிட்டுட்டு `y not Studios'னு ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சதும் வீட்ல என்ன ரியாக்‌ஷன் இருந்தது?''

y not studios
y not studios

``ஆர்க்கிடெக்ட்டா இருந்தப்போ சினிமாதுறையைச் சேர்ந்த நிறைய பேருடைய வீட்டுக்கு டிசைன் பண்ணி கொடுத்திருக்கேன். அப்போ, சிலரோட நல்ல பழக்கம் ஆச்சு. தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கலாம்னு ஏதோ போறபோக்குல நான் முடிவெடுக்கல. ஒரு படம் தொடங்குறதுக்கு முன்னாடி நடக்கிற ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் மாதிரி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நான் நிறைய ப்ரீ பிளானிங் வேலைகள் பார்த்தேன். கமல் சாரோட ஸ்கிரீன் ரைட்டிங் க்ளாஸ் போனேன். ஸ்க்ரிப்ட் எப்படி டெவலப் பண்றதுனு படிச்சேன். அப்புறம் இன்னொரு புரொடக்‌ஷன் ஹவுஸ் போயிட்டு அங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப தொழில்முறையா இதை டீல் பண்ண ஆரம்பிச்சேன். ரிஸ்க் ஃபேக்டர்ல எதெல்லாம் நடக்கும்னு முதல்ல ஸ்டெடி பண்ணிக்கிட்டேன். நான் ஃபீல்டுக்கு வந்தப்போ, டைரக்டர் கதை சொல்றதைக் கேட்பார். பிடிச்சிருந்தா படம் பண்ணுவாங்க. இப்படித்தான் போய்ட்டு இருந்தது. ஆனா நான், ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சி அதை பவுண்ட் பண்ற வரைக்கும் தயாரிப்பாளரும் டிஸ்கஷன்ல இருக்கணும்னு முடிவு பண்ணேன். இதுவரைக்கும் அப்படித்தான் போயிட்டிருக்கு. நான் தயாரிப்பாளாராகும்போது வயசு ரீதியா மெச்சூர் ஆகியிருந்தேன். இடையிலகூட நிறைய பிசினஸ் பண்ணியிருக்கேன். என் பிசினஸ் நாலெஜ் என்னன்னு வீட்டுக்கு நல்லாவே தெரியும். அதனால வீட்ல என்னை நம்புனாங்க. ஆர்கிடெக்ட் தொழிலையும் அப்படியே விட்டுட்டு வரல. என்னோட மனைவி அந்த பிசினஸை நல்லா பார்த்துக்குறாங்க. அதனால ரெண்டையும் சரியா பேலன்ஸ் பண்ணிட்டேன்.''

``ஒரு தயாரிப்பாளரா உங்களை அணுகுகிற இயக்குநர்கள்கிட்ட நீங்க என்ன எதிர்பார்ப்பீங்க?''

``ஒரு டைரக்டர் என்கிட்ட கதை சொல்ல வர்றப்பவே `கமர்ஷியல் ஃபார்மெட்ல இருக்க வேண்டாம்'னு சொல்லிடுவேன். ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் நிறைய பண்ணியிருக்கோம். ஹீரோவை மையப்படுத்தி மட்டும் ஒரு கதையை எப்பவும் பண்ண மாட்டோம். கான்ப்செட் லெவல்ல சுவாரஸ்யமா இருக்கணும்னு நினைப்பேன். எப்பவும் கதைக்கு முன்னாடி கான்செப்ட்தான் கேட்பேன். இந்தப் படத்துல எதை டிரைவ் பண்ணப் போறோம்னு யோசிப்பேன். `வ குவாட்டர் கட்டிங்' படத்தை மேலோட்டமா பார்க்குறப்போ, ஒரு நாள்ல ரெண்டு பேர் சரக்கு அடிக்குறதுக்கான போராட்டம் மாதிரியிருக்கும். கொஞ்சம் டீப்பா பார்த்தா நார்மல் சினிமால இருந்து வித்தியாசமா இருக்கும். `காதலில் சொதப்புவது எப்படி', `வாயை மூடி பேசவும்'னு எல்லாமே வித்தியாசமான ஜானர்ஸ். `y not studios'னு பேர் வெச்சிக்கிட்டு எப்பவும் போல முயற்சிகள் பண்ண முடியாது. நிறைய நல்ல கதைகள் வந்தப்ப கூட வழக்கமான ஃபார்மெட்ல இருக்குனு பண்ணமா இருந்திருக்கேன். ஏன்னா, என்னோட பிராண்டுக்கு இது செட்டாகாதுன்ற ஒரே காரணம்தான்.''

``ஆனா, வித்தியாசங்களைத்தாண்டி சினிமாவில் லாப, நஷ்ட கணக்கு முக்கியமில்லையா?''

ஏலே டீம்
ஏலே டீம்

`10 வருஷம் முன்னாடி இந்த கம்பெனி ஆரம்பிக்கிறப்போ `நல்ல படங்கள் எடுத்து, இன்னும் 10 வருஷம் கம்பெனி இருந்து, நமக்குனு ஒரு பிராண்ட் வேல்யூ இருந்துச்சுனா அதுதான் சக்ஸஸ்'னு சொன்னேன். நடுவுல, பெரிய இழப்புகள் வந்திருக்கு. ஒரு பிசினஸ்ல ஏற்றம், இறக்கம் எப்பவும் இருக்கும். என்கூட ஆரம்பிச்ச எத்தனையோ கம்பெனி இப்போ இல்லாம இருக்கு. மிர்ச்சி சிவால ஆரம்பிச்சு இப்போ தனுஷ் வரைக்கும் படம் பண்ணிக்கொண்டிருக்கோம். இந்த 10 வருஷத்துல எங்களோட வளர்ச்சியும் மேல வந்திருக்கு. க்ரியேட்டிவ் சக்ஸஸ்க்குதான் நான் பிளான் பண்ணியிருந்தேன். அதனால, காசு பணம் எல்லாத்தையும் தாண்டி எதை சாதிக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேனோ அதைப் பண்ணிட்டேன். இந்தி, தெலுங்கு, மலையாளம்னு எல்லா மொழியிலும் படம் பண்ணிட்டேன். ஒரு சின்ன வட்டத்துக்குள்ள இல்லாம வெளியே போய் ஜெயிச்சிட்டோம். லாப, நஷ்டத்தைத்தாண்டி இதைத்தான் உண்மையான சக்ஸஸ்னு நினைக்குறேன்.''

``உங்களோட இந்த 10 வருஷத்துல சினிமா எத்தனையோ மாற்றங்களைப் பார்த்திருக்கு. இந்த சூழல்ல OTT வளர்ச்சியை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?''

தனுஷ்
தனுஷ்

``சில விஷயங்களைக் காலத்தின் கட்டாயம்னு சொல்லுவாங்க. ஓடிடி தளத்துக்கு இந்த உலகம் ஏற்கெனவே போயிருச்சு. ஹாலிவுட்ல அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே போயிட்டாங்க. `அவெஞ்சர்ஸ்' படத்தோட நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் படங்களே நேரடியா ஓடிடி-ல ரிலீஸ் ஆகுது. பெரிய பெரிய ஹாலிவுட் ஹீரோஸ் படம்லாம் இப்படி ரிலீஸ் ஆகிட்டிருக்கு. நிச்சயமா இதனால நிறைய ஆடியன்ஸை ரீச் பண்ண முடியும். ரெண்டாவது தமிழ் சினிமால சப்ளைதான் எப்பவும் நிறைய இருந்திருக்கு. டிமாண்ட் குறைவுதான். ஒரு வருஷத்துக்கு 200 படங்களை நாம தியேட்டருக்காக மட்டுமே புரொடியூஸ் பண்ணிட்டு இருக்கோம். இப்போ, அந்த 200 படம் வேற வேற தளத்துல ரிலீஸ் ஆகப் போகுதுனுதான் யோசிக்கணும். எப்படிப் பார்த்தாலும் 200 படம்கிற எண்ணிக்கை குறையப்போறதில்லை. சிலர் பயப்படுற மாதிரி எதுவும் நடந்துடப்போறதில்லை. ஸ்விக்கி, ஸொமோட்டோல ஆர்டர் பண்ணி சாப்பிட்டாலும், மக்கள் ரெஸ்ட்டாரன்ட் போய் சாப்பிடவே மாட்டாங்கன்னு அர்த்தம் இல்லை. அங்கே போறவங்களும் இருக்கத்தான் போறாங்க. அப்படித்தான் தியேட்டருக்கும் மக்கள் போவாங்க. தியேட்டர்ல ரிலீஸ் ஆகுறப் படத்துக்கான டிமாண்ட் அதிகமாகிடும். அது ஒரு பிரீமியம் மார்க்கெட்டா மாறிடும். தியேட்டர்ல கம்மியா படங்கள் ரிலீஸ் ஆச்சுனா தியேட்டர்களுக்குத்தான் நல்லது. இதை யாரும் புரிஞ்சிக்கல. 200 படம் கொடுக்குறப்போ யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க. 80 படங்கள் கொடுத்து பாருங்க, நிச்சயம் பார்க்க வருவாங்க. மீதி படங்கள் நேரடியா டிஜிட்டலுக்கு வர்றப்போ மக்கள் அதிகமாப் பார்ப்பாங்க. ஒரு பொருளோட திடீர் வளர்ச்சி ஏற்கெனவே இருந்த பொருளின் வளர்ச்சியை பாதிக்கும்ங்குறது வழக்கமான விதி. ஆனா, இந்த விஷயத்துல ஓடிடி வளர்ச்சி தியேட்டருக்கு பலமாத்தான் இருக்கும்னு நான் நினைக்குறேன். ஏன்னா, பெரிய ஆர்ட்டிஸ்ட் படங்கள் தியேட்டர்ல பார்க்க ஆடியன்ஸ் ஆர்வமா இருப்பாங்க. ஒட்டுமொத்தமா எல்லா பிரச்னைகளும் முடிச்சிட்டு ஒரு வருஷத்துக்கு அப்புறம் பார்க்குறப்போ ரொம்ப ஹெல்த்தியா தியேட்டர்ஸ் இருக்கும். எல்லாமே நல்லாதான் நடக்கும்.''

``உங்களோட `ஏலேய்',`'மண்டேலா' படங்கள் நேரடியா டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்ல வரப்போகுதுன்னு சொல்றாங்களே?''

மண்டேலா
மண்டேலா

``எல்லா படத்தையும்தான் கேட்குறாங்க... இப்போ, இருக்குற சூழல்ல எல்லா படத்தையும் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்லதான் மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. இன்னும் ஆறு மாசம் வரைக்கும் தியேட்டருக்கு படங்கள் வருமானு தெரியல. அப்படியே வந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் வருவாங்களானு தெரியல. அதனால ஓடிடில இருந்து எல்லா புரொடியூசர்ஸ் படங்களையும் அப்ரோச் பண்ணுவாங்க. என்கிட்ட இந்த ரெண்டு படங்கள் தவிர `ஜகமே தந்திரம்' படத்தைக்கூடத்தான் கேட்டாங்க. இருந்தும், நாங்க இன்னும் எந்த முடிவையும் எடுக்கல. ஏன்னா, எங்க மூணு படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இன்னும் முடியல. இன்னும் ரெண்டு மாச வேலை பெண்டிங்ல இருக்கு. எல்லாம் நார்மல் ஆனதுக்குப் பிறகுதான் முடிவு பண்ணலாம்னு இருக்கோம். ஏன்னா, எங்கே டிமாண்ட், என்ன சப்ளைனு எதுவும் இப்ப சரியா தெரியல. அதனால, இப்போவரைக்கும் எல்லாரும் விசாரிச்சிட்டு இருக்காங்க. என்னை மட்டுமல்லாம எல்லா கம்பெனிக்கும் போன் போயிட்டிருக்கு. நாங்க, ஜூலை முதல் வாரத்துல முடிவு பண்ணலாம்னு இருக்கோம். அதுவரைக்கும் எந்த டிஸ்கஷனும் பண்ற மாதிரியில்ல.''

``சிறிய படங்களுக்கு ஓடிடி பிளாட்ஃபார்ம் ஓகே... பெரிய ஹீரோக்கள் படம் நேரடியா டிஜிட்டலுக்கு வர்றப்போ அதை அவங்க ரசிகர்கள் கொண்டாடுற மனநிலையில் இருப்பாங்களா?''

``எனக்கும் தியேட்டர்ல படம் பார்க்குறதுதான் பிடிக்கும். தியேட்டர்ல பிடிச்ச படங்களைக் கொண்டாடி பார்த்ததனாலதான் இப்போ இந்த சினிமால நானும் இருக்கேன். ஆனா, கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பிறகு எத்தனை பேர் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பாங்கனு தெரியலையே. எல்லார் கையிலும் காசு இருக்குமானு தெரியல. பெரிய ஸ்டார் ஃபேன்ஸ் நிச்சயம் தியேட்டருக்கு வருவாங்க. ஆனா, ரெண்டாவது வாரத்துக்குப் பிறகு ஃபேமிலி ஆடியன்ஸ் வந்தாதான் நல்லாயிருக்கும். நாங்களும் பெரிய படம் எடுத்திருக்கோம். இதை எல்லாரும் தியேட்டர்ல வந்து பார்த்து ரசிக்கணும்னு ஆசையிருக்கு. ஆனா, இந்த விருப்பத்தோட மட்டுமே நம்ம முடிவு எடுக்க முடியாது. இந்தியில பெரிய படங்கள் நேரடியா டிஜிட்டல்ல ரிலீஸ் ஆகும். அக்‌ஷய்குமார் படத்தை ஓடிடி நிறுவனம் வாங்கிருச்சுனு நியூஸ் வந்துச்சு. சின்ன படங்கள் வெற்றி அடைஞ்சாலும் லாபம் வர மாட்டேங்குதுன்னு பேச்சிருக்கு. சில படங்களை எல்லாம் ஓடிடி பிளாட்ஃபார்ம்லதான் பார்க்க ஆடியன்ஸ் ரெடியா இருக்காங்க.''

``பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்கள்ல தயாரிப்பாளர்களுக்கு வேலையில்லை. இயக்குநர், நடிகர்கள்னு முக்கியமானவங்க அத்தனைபேரையும் ஹீரோக்கள்தான் முடிவு பண்றாங்கன்னு ஒரு பேச்சிருக்கே?''

தமிழ்ப்படம் டீம்
தமிழ்ப்படம் டீம்

``மத்த இடத்துல என்ன நடக்குதுனு எனக்குத் தெரியாது. ஆனா, என்னோட கம்பெனியைப் பொறுத்தவரைக்கும் இயக்குநர் எடுக்குற முடிவுதான் எல்லாமே. அவங்களுக்கு ஒரு ஸ்டெப் பின்னாடி நின்னுதான் நாம ஹெல்ப் பண்ணனும்னு நினைப்பேன். இருந்தும், அணுகுமுறை சில நேரங்கள்ல மாறும். பெரிய டைரக்டர்ல இருந்து சின்ன டைரக்டர் வரைக்கும் நான் வேலைபார்த்திருக்கேன். 10 வருஷ அனுபவத்துல நான் ஒரு விஷயத்தை சொல்றப்போ அதை ஏத்துப்பாங்க. யார் சொல்றாங்கனு பார்ப்பாங்க. இன்னைக்கு ஒரு கேமராமேனை நான் சிபாரிசு பண்றேன்னு சொல்றதுக்கும், முதல் முறையா படம் பண்ண வர்றப்போ சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல? எங்கே இருந்து சொல்றோம் அப்படிங்குறதுதான் விஷயம். நான் ஏதாவது விஷயத்தைச் சொன்னா என்கூட வேலைபார்த்த டைரக்டர்ஸ் ஏத்துப்பாங்க. யோசிக்காம எதையும் சொல்ல மாட்டேன்னு தெரியும். அவங்களுக்கு சில மாற்றுக்கருத்து இருக்குறப்போ நானும் அதை ஏத்துப்பேன். இந்தப் புரிதல் இருந்ததனால எந்த பிரச்னையும் இதுவரைக்கும் வரல.''

``இந்த இயக்குநர்கள் படங்களைத் தயாரிக்காம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டிருக்கீங்களா?''

``சிலருடன் வேலை பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்திருக்கேன். அவங்க, சில தோல்வி படங்களைக் கொடுத்துட்டு அடுத்து என்னை வந்து சந்திக்குறப்போ அவங்ககூட சேர்ந்து வேலையும் பார்த்திருக்கேன். சுதாவுடைய முதல் படம் `துரோகி'. அது பெரிய தோல்வி. இருந்தும், நாங்க `இறுதிச்சுற்று' பண்ணோம். இன்னும் சிலர்கூட வேலை பார்க்கணும்னு நினைச்சிட்டு இருக்கேன். `ஆரண்யகாண்டம்' படத்துக்கு அப்புறம் தியாகராஜன் கூட அஞ்சு ஸ்க்ரிட்ப் வரைக்கும் டிஸ்கஷன் பண்ணிட்டோம். ஆனா, இன்னும் ஒண்ணும் சரியா சேரல. இப்படி நலன் குமாரசாமி, ரஞ்சித்னு நிறைய பேர் இருக்காங்க. பல வருஷமா இவங்ககூட தொடர்புல இருக்கேன். சரியான புராஜெக்ட், நேரம் இன்னும் அமையல.''

`` `ஜகமே தந்திரம்' ஆஃப்டர் ஜகம் ஹீல்ஸ்தானா?''

ஜகமே தந்திரம்
ஜகமே தந்திரம்

``இயக்குநர் கார்த்திக்கும் நானும் ரொம்ப நாளா வேலை பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தோம். `ஜகமே தந்திரம்' கதையை கார்த்திக் `இறைவி' படம் முடிச்சிட்டு என்கிட்ட சொன்னார். அப்போ, நான் வேற வேலைகள்ல பிஸியா இருந்ததால பண்ண முடியல. அப்புறம், `Y NOT Studios' பத்தாவது வருஷத்துல தயாரிக்குற படம் பெரிய படமா இருக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். அப்போ, தனுஷ்கிட்ட இருந்து போன் வந்துச்சு. `நானும் கார்த்திக்கும் பல வருஷமா ஒண்ணா வேலை பார்க்கணும்னு பேசிட்டிருக்கோம். ஆனா, ஏதோ சரியா செட் ஆகல. இப்பதான் அவர் எனக்கு சொன்னக் கதையை நீங்களும் கேட்டிருக்கீங்கனு கேள்விப்பட்டேன். திரும்பவும் யோசிச்சிட்டு சொல்லுங்க. நாம பண்ணலாம்'னு தனுஷ் சொன்னார். அப்புறம் எல்லாரும் உட்கார்ந்து வொர்க் பண்ணோம். பெரிய படம்னு நல்லாத் தெரியும். தனுஷ் நடிச்ச படத்துலயே பெரிய பட்ஜெட் படம் இதுதான். கிட்டத்தட்ட 65 கோடி வரைக்கும் தயாரிப்பு செலவுகள் ஆகியிருக்கு. பெரிய நட்சத்திரங்களும் இருக்காங்க. முழு படமும் இதுவரைக்கும் லண்டன்ல யாரும் ஷூட் பண்ணது இல்லைன்னு நினைக்குறேன். `வடசென்னை', `அசுரன்' படங்களுக்குப் பிறகு தனுஷின் ரேஞ்ச் எங்கேயோ போயிருச்சு. முன்னாடியே ஆரம்பிக்க வேண்டிய ஷூட்டிங் கார்த்திக்குக்கு `பேட்ட' வாய்ப்பு வந்ததனால, ஒருவருஷம் கழிச்சு ஆரம்பிக்க வேண்டியதாப் போச்சு. `பேட்ட' படத்துக்குப் பிறகு கார்த்தி இன்னும் பெரிய டைரக்டர் ஆகிட்டார். நாங்க நினைக்காமலேயே எல்லாம் பெரியளவுக்குப் போயிருச்சு. நிச்சயம் தனுஷ், கார்த்தி, எங்களுக்குன்னு இது அடுத்த லெவல் படமாயிருக்கும். `விக்ரம் வேதா' படம் கமர்ஷியலா இருந்தாலும் க்ரியேட்டிவ் லெவல் குறையாம இருக்கும். அதே மாதிரிதான் இந்தப் படமும். கமர்ஷியலான ஐடியாதான். ஆனா, க்ரியேட்டிவா எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும். ரொம்ப அபூர்வமாதான் இப்படிப்பட்ட படங்கள் அமையும்.''

``கடைசியா ஒரு கேள்வி... நீங்க இயக்குநர் கனவோட வந்தேன்னு சொன்னீங்களே... என்னாச்சு?"

`` `ஜகமே தந்திரம்' ரிலீஸ் ஆனதும் இயக்குநர் சஷிகாந்த்தைப் பார்க்கலாம்.