Published:Updated:

"லோகேஷிடம் கதையைக் கேட்டு உடனே முடிவு செய்தோம்!"- `கைதி' சர்ச்சை குறித்து எஸ்.ஆர்.பிரபு விளக்கம்!

கைதி - லோகேஷ் கனகராஜ்
கைதி - லோகேஷ் கனகராஜ்

"இந்த வழக்குக் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை என்னை வந்து சேரவில்லை. அது தெரிந்தால்தான் என்னாலும் இது குறித்துப் பேச முடியும்."

'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கிவருகிறார். சூப்பர் ஹிட்டடித்த 'கைதி' படம் இரண்டாம் பாகத்துக்கான லீடுடன் முடிந்திருக்கும். அதன் இரண்டாம் பாகம் மற்றும் அதன் பிற மொழி ரீமேக் போன்றவை தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸின் பைப்லைனில் இருக்கின்றன. இந்த நிலையில், 'கைதி' படத்தின் கதை ராஜீவ் என்னும் நிஜ ஜெயில் கைதி ஒருவருடையது என்ற சர்ச்சை வெடித்துள்ளது. அவர் தயாரிப்புத் தரப்பைச் சந்தித்து கதைக்கான அட்வான்ஸ் பெற்றதாகவும் அவருக்குத் தெரியாமல் படம் லோகேஷை வைத்து எடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தொடுத்த வழக்கில், கேரள நீதிமன்றத்தில் 'கைதி' படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ரீமேக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சில மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Kaithi
Kaithi

இது சமூக வலைதளங்களில் வைரலாகவே தயாரிப்புத் தரப்பான டிரீம் வாரியர்ஸ் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'கைதி' திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்பந்தமாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது.

உறவு - உணர்வு சிக்கலைப் பேசும் மலையாள சினிமா! `ஆணும் பெண்ணும்' ஆந்தாலஜி எப்படி இருக்கிறது?

அதே சமயம் 'கைதி' சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!” என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

இந்த விவகாரம் குறித்து மேலும் தகவல்கள் பெற டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபுவுடன் பேசினோம். "யாரோ ஒருவர் என்னைப் பார்த்ததாகவும் இப்படியெல்லாம் நிகழ்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், இந்த வழக்குக் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை என்னை வந்து சேரவில்லை. அது தெரிந்தால்தான் என்னாலும் இது குறித்துப் பேச முடியும். இப்போது நான் இது குறித்து ஏதேனும் விளக்கம் அளித்தால் அதைவைத்து வேறொரு பிளான் செய்வார்கள். அதனால் இது குறித்து கோர்ட்டில் எங்களை நிரூபித்துக் கொள்கிறோம்.

கேரளாவில் கோர்ட்டில் இப்படிச் சொன்னதாகச் செய்திகள்தான் வந்திருக்கின்றன. ஆனால், சட்டப்பூர்வமாக எங்களிடம் எதுவும் தகவலாக வந்து சேரவில்லை. அதனால், இது குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது. நாங்கள் லோகேஷிடம் கதையைக் கேட்டோம். குறுகிய காலத்தில் முடிவு செய்து படத்தை எடுத்தோம். அவ்வளவுதான். கோர்ட்டிலிருந்து தகவல் வரட்டும். இது குறித்து தற்போதைய நிலையில் வேறு எதுவும் சொல்வதற்கில்லை!" என்பதாக முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு