Published:Updated:

``சிம்புவை மட்டும் ஏன்... இது ரொம்பக் குரூரம்!" - `மாநாடு' சுரேஷ் காமாட்சி

சிம்பு - சுரேஷ் காமாட்சி
சிம்பு - சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேட்டி.

பல பஞ்சாயத்து, பல பேச்சுவார்தைகளுக்குப் பிறகு தொடங்கியது சிம்புவின் `மாநாடு'. பல சிக்கல்களைக் கடந்து ஷூட்டிங் வரை வந்திருக்கும் `மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை சந்தித்தோம்.

சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி

``தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?"

``கவுன்சிலில் போட்டியிட்டு கருத்து சொல்கிற அளவுக்கு எனக்கு வயது கிடையாது. சினிமாவில் பழம் தின்று கொட்டைபோட்ட ஜாம்பவான்கள் குழுமி இருக்கிற சபை. தனிப்பட்ட முறையில் எனக்கு நடந்த துரோகச் சம்பவத்தால் என் மனம் பெரிதாகக் காயப்பட்டது. அப்போது, நாம் ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது என்று கோபம் எழுந்தது. அதனால் சென்றமுறை நடந்த தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டேன். தேர்தலில் யாருக்கும் பணம் தராமல், ஒருத்தருக்குக்கூட சிங்கிள் டீ வாங்கிக் கொடுக்காமல் எனக்கு 210 வாக்குகள் கிடைத்தன. அதற்கு நன்றிக்கடனாக தயாரிப்பாளர்கள் நலனுக்காகக் குரல்கொடுத்தேன். இப்போது, `மாநாடு' படத்தைத் தயாரித்துவருகிறேன். தொடர்ந்து பல படங்களைத் தயாரிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன். அதனால் வரும் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் படப்பிடிப்பில் ஒரு நாளுக்கு 150 தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து, சம்பளம் தருபவரும் ஒரு தயாரிப்பாளர்தான். அப்படிப்பட்ட ஒருவர், அந்தப் படம் தோல்வி அடைந்ததும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவது கொடுமையானது. வழக்கமாக, தேர்தலுக்குப் பிறகு, நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவித்தொகை கொடுப்பது, இனாம் தருவது மட்டுமே சங்கத்தின் வேலை இல்லை. ஒரு தயாரிப்பாளரின் தன்மானத்தை, சுயமரியாதையை கட்டிக்காப்பதுதான் சங்கத்தின் தலையாய கடமை. கவுன்சில் தலைவராகி பெரும் `புரட்சி' செய்துவிட்டு போய் இருக்கிறார் விஷால். ஏற்கெனவே சங்கக் கணக்கில் இருந்த பலகோடி ரூபாயை காலிசெய்துவிட்டு போய்விட்டார். கவுன்சில் செயல்படுவதற்கு வருஷத்துக்கு 5 கோடி ரூபாய் அவசியம் தேவை. இப்போது டீ, காபி சாப்பிடுவதற்குக்கூட சங்கத்தில் 10 பைசா இல்லை. தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்திரமாக இல்லாத காரணத்தால், தற்போது படம் தயாரித்துவருபவர்களை ஃபெஃப்சி அமைப்பும், திரையரங்க உரிமையாளர்களும் தவறாகப் பயன்படுத்திவருகிறார்கள்.''

``ஃபெஃப்சி அமைப்பு, இயக்குநர்கள் சங்கம் இரண்டுக்கும் தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் செயல்பாடு எப்படி இருக்கிறது?"

``கவுன்சிலில் உறுப்பினர்களுக்குக் கொடுத்துவரும் இனாம் வியாதி இப்போது இயக்குநர் யூனியனிலும் பரவிவருகிறது. இப்போது, புதிதாக வீடு கட்டித்தருகிறோம் என்று புறப்பட்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பலபேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டால், இனாம் தருகிறேன், வீடுகட்டித் தருகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம். சினிமாவில் கந்துவட்டிக்குப் பணம் வாங்கி முதலீடு செய்யும் தயாரிப்பாளரைத் தன்னிச்சையாகச் செயல்படவிடாமல் தடுக்கிறது ஃபெஃப்சி அமைப்பு. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் `மாநாடு' படப்பிடிப்பு நடந்தபோது, நான் கேட்ட கம்பெனி தொழிலாளர்களைத் தராமல் வேறு ஒரு கம்பெனியிடம் நாங்கள் ஒப்பந்தம் போட்டுவிட்டோம். நாங்கள் சொல்லும் தொழிலாளர்களை மட்டும்தான் வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டும் என்று செல்வமணி தயாரிப்பாளர்களை நிர்பந்தம் செய்வது எந்த வகையில் நியாயம்? ஏற்கெனவே நிறைய படங்களை எடுத்த தயாரிப்பாளர்களே செல்வமணியிடம் இதுகுறித்து கேட்பதற்கு யோசிக்கிறார்கள். நான் தனிப்பட்ட முறையில் செல்வமணியை எதிர்க்கவில்லை. தலைவர் செல்வமணியின் செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறேன்.''

சுரேஷ் காமாட்சி - விஷால்
சுரேஷ் காமாட்சி - விஷால்

``இயக்குநர்கள் முதலில் சொல்லும் கதை வேறு, படமாக்குவது வேறு என்பதுகுறித்து ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக உங்கள் கருத்து என்ன?"

``இயக்குநர் ஒரு கதைசொல்லும்போதே அதற்கான முழு ஸ்கிரிப்டையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு தயாரிப்பாளரின் கடமை. நம்மிடம் உள்ள ஸ்கிரிப்ட்டைப் பார்த்தாலே படப்பிடிப்பு எத்தனை நாள்கள், பட்ஜெட் எவ்வளவு வரும் என்பது தெளிவாகத் தெரிந்துவிடும். தயாரிப்பாளரின் ஆளுமை முக்கியம். டைரக்டரிடம் ஸ்கிரிப்ட்டை வாங்காமல் விட்டுவிட்டால், அவர்களுக்கு அவ்வப்போது தோன்றும் கற்பனைகளை எல்லாம் படமாக்கிக்கொண்டே செல்வார்கள். பட்ஜெட் எகிறிவிடும். தயாரிப்பாளர் பாடு திண்டாட்டமாகிவிடும். இப்போதுகூட சிம்பு நடித்துவரும் `மாநாடு' படத்தின் முழு ஸ்கிரிப்ட்டும் என்கையில் இருக்கிறது.''

மாநாடு
மாநாடு
பிரேம் ஜி, சிம்பு, வெங்கட் பிரபு

``சிம்பு நடித்த `மஃப்டி' படம் ட்ராப் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். `மாநாடு' குறித்த அப்டேட்..?

``ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிம்பு நடித்துவரும் `மஃப்டி' திரைப்படத்தை இயக்கிவந்த டைரக்டர், திடீரென்று கன்னட படத்தை எடுக்க பெங்களூரு சென்றுவிட்டார். அதனால் படப்பிடிப்பில் இடைவெளி விழுந்திருக்கிறது. அவ்வளவுதான். நீங்களாகவே `ட்ராப்' என்று சொல்லிவிட்டால் என்ன அர்த்தம்? `மாநாடு' புராஜெக்ட் தொடங்கியதிலிருந்து இன்றுவரை சோஷியல் மீடியாக்களில் ஃப்ளாஷ் செய்தியில் `மாநாடு ட்ராப்' என்று எத்தனை செய்திகள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? அப்போது எல்லாம் ஒரு தயாரிப்பாளராக வேதனையில் நான் தவித்தது எனக்கு மட்டும்தான் தெரியும். `மாநாடு' ஷூட்டிங் ஆரம்பித்து ஆறு நாள்களே ஆன நிலையில், `கடந்த 20 நாள்களாக ஷூட்டிங் நடக்கிறது' என்று புளுகுவார்கள். திடீரென்று சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை எனப் புதிதாக, உண்மையில்லாத ஒரு சேதியைக் கிளப்பிவிட்டனர். கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகமே ஸ்தம்பித்து படபிடிப்பு தடைப்பட்டு நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில், ஏதோ `மாநாடு' படப்பிடிப்பு மட்டும் நின்றுவிட்டது என்று செய்தி போடுவது எந்த வகையில் நியாயம்? `மாநாடு' படத்தைப் பற்றி செய்தி வெளியிடுவதற்கு முன்பு தயாரிப்பாளரான என்னிடம் கருத்துகேட்டு வெளியிடுங்கள். நீங்கள் `டிராப்' என்று போடும் செய்தியால் என் படத்துக்கு பணம்தரும் ஃபைனான்ஸியர் என்ன நினைப்பார். இயக்குநரைப் பற்றி என்ன சொல்வார்கள்? ஹீரோ சிம்புவின் மனசு என்ன பாடுபடும்? சிம்புவை மட்டும் ஏன் இப்படி டார்கெட் பண்றீங்க? இது ரொம்ப குரூர புத்தி. இதுவரை சிம்பு நடித்த படங்களில் `மாநாடு' திரைப்படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். கொஞ்சம் காத்திருங்கள்."

அடுத்த கட்டுரைக்கு