பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சினிமா விமர்சனம்: சைக்கோ

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதிக்கு இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரம்.

`கொடூரக் குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ என மிஷ்கின் சொல்லும் ரத்தம் தெறிக்கும் நீதிக்கதையே இந்த `சைக்கோ.’

கோவை வட்டாரத்தில் மர்மமான முறையில் காணாமல்போகும் பெண்கள், சில நாள்கள் கழித்து வெறும் உள்ளாடைகளுடன் தலையற்ற உடல்களாக, கிடைக்கிறார்கள். அந்தக் கொலைகளைத் திட்டமிட்டு நிகழ்த்தும் சைக்கோ கில்லரின் அடுத்த குறி அதிதி ராவ். நகரையே நடுங்கவைக்கும் அக்கொடூரக் கொலைகார னிடமிருந்து அவரை மீட்கப் போராடுகிறார் அதிதியைக் காதலிக்கும், பார்வைச் சவால் கொண்ட உதயநிதி. இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ரத்தமும் இருளும் இசையும் பிசைந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின்.

சினிமா விமர்சனம்: சைக்கோ

உதயநிதிக்கு இதுவரை ஏற்றிடாத கதாபாத்திரம். உடல்மொழியிலும் உணர்ச்சி களிலும் மாற்றுத்திறனாளியாய் நம் முன் மிளிர நிறையவே மெனக்கெடுகிறார். நீதிக்கதைகளில் வரும் தேவதைபோல அதிதி ராவ். பலியானவர்களுக்காக அவர் நடுங்கி மருகும் இடங்கள் க்ளாஸ்! விறைத்த பார்வையோடு திரையில் தோன்றும்போதெல்லாம் பதறவைக்கிறார் ‘சைக்கோ’ ராஜ்குமார். ரேச்சல் டீச்சராக சில காட்சிகளிலேயே மிரட்டியிருக்கிறார் ப்ரீத்தம். நித்யா மேனன், இயக்குநர் ராம், சிங்கம்புலி, பவா செல்லதுரை, ஷாஜி என ஏனைய நடிகர்களிடம் மிஷ்கின் சாயலே மிகுதி.

தன்வீர் மிர்ரின் ஒளிப்பதிவும் என்.அருண்குமாரின் எடிட்டிங்கும் பார்வை யாளரின் மனநிலையை சமன்குலைக்கின்றன. பாடல்களிலும் பின்னணி இசையிலும் இசைஞானியின் ‘ராஜா’ங்கம்.

சைக்கோ
சைக்கோ

கொல்லப்போவதற்குச் சில விநாடிகள் முன் அந்தப் பெண்ணின் அவிழ்ந்த செருப்பை மாட்டிவிடுவது, இறந்த பெண்ணுக்குத் தலை செய்துவைத்து ஒப்பாரி வைப்பது, அந்த `சடங்கு’ காட்சி மற்றும் இன்னபிற குறியீட்டுக் காட்சிகளிலும் மிஷ்கின் முத்திரை. ஆனால் இதுமட்டுமே ஒரு சினிமாவுக்குப் போதும் என்று அவர் நினைத்திருப்பதுதான் ஏமாற்றம்.

படத்தில் லாஜிக் மீறல்கள் என்று பட்டியலிட்டால், அடுத்த புத்தகக் காட்சிக்கு ஒரு புத்தகமே போடலாம். காதலன் மீட்பதற்காகக் காத்திருக்கும் காதலி என்ற பழைய கதையின் அடித்தளத்தில் சாவதற்கு முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலீஸ் அதிகாரி போன்ற விநோதமான செயற்கைக் காட்சிகள் அலங்கரிக்கின்றன.

புத்தர், அங்குலிமாலா, சைக்கோ உருவாகும் பின்னணி ஆகியவற்றில் செய்நேர்த்தி இருக்கும் அளவுக்கு ஜீவன் இல்லை.