Published:Updated:

``சிம்பு நடிக்க `புதிய பாதை - 2'... விரைவில் உங்களுக்காக!'' - பார்த்திபன் தொடர் - 17

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 17.

``சிம்பு நடிக்க `புதிய பாதை - 2'... விரைவில் உங்களுக்காக!'' - பார்த்திபன் தொடர் - 17

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 17.

Published:Updated:
பார்த்திபன்

"As per you, is it right whatever you have done in Bharathi Kannamma movie shoot... Will you accept if other actors do the same in your movie?"

- Praveenraj, Bangalore

''இந்தக் கேள்வியை இங்கிலீஷ்ல கேட்டாலும் சரி, இங்கிதமா கேட்டாலும் சரி இந்தக் கேள்விக்கு இதுதான் நான் கடைசியா சொல்ற பதில். ஒரு படத்தோட டிஸ்கஷன்ல என்ன நடந்துன்னு அந்தப் படம் வெளிவந்தப்பிறகு பேசுறது நாகரிகமான செயல் இல்லை. இதே 'பாரதி கண்ணம்மா'ல எனக்கும் வடிவேலுவுக்குமான போர்ஷன் அந்த ஸ்கிரிப்ட்ல இல்லை. என் படத்துக்காக வெச்சிருந்ததை அந்தப் படத்துக்கு நான் கொடுத்தேன். முதல்ல சேரன் அதை ஏத்துக்கல. என்னுடைய வற்புறுத்தலின் காரணமா ஏத்துக்கிட்டார். அப்புறம் அது படத்துக்கு பெரிய ப்ள்ஸ் பாயின்ட்டா இருந்ததுன்னு சொன்னார். அந்த மாதிரி ஒரு படம் பண்ணும்போது நிறைய கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். அந்தப் படத்துல ஒரு சின்ன குழப்பம் இருந்தது. அந்தக் குழப்பம் என்னன்னு எல்லோருக்கும் தெரியும்.

பாக்யராஜ் சார்கூட 'அந்த ஏழு நாட்கள்' படத்தோட கிளைமேக்ஸ் சரியா தப்பான்னு தெரியாம, எப்படி முடிவெடுக்குறதுன்னு புரியாம பாரதிராஜா சாரைக் கூப்பிட்டு போட்டுக் காட்டினார்னு சொல்லுவாங்க. சேரன் என்கிட்ட ஸ்கிரிப்ட்டை சொல்லும்போதே, 'இது இதிகாசம்லாம் கிடையாதுங்க. சில மாறுதல்கள் பண்றதுக்கு தயாரா இருந்தா சொல்லுங்க நான் பண்ணறேன். இல்லைன்னா நான் பண்ணலை'ன்னு சொல்லிட்டேன். அவர் 'கார்த்திக்கு பிடிச்சிருக்கு'ன்னு சொன்னார். அது அவரோட விருப்பம்னு சொன்னேன். ஒரு விஷயத்துல நமக்கு உடன்பாடு இல்லைன்னா முதல்லலயே வெளில வந்துடணும். எனக்கு வாழ்க்கை தந்த பாக்யராஜ் சார் 'முதல் பார்வை'ன்னு படம் கொடுத்து, அது நான் நினைக்கிற மாதிரி பண்ணமுடியாதுன்னு தெரிஞ்சதும் ரொம்ப நாகரிகமா வெளில வந்துட்டேன். உடன்பாடு இல்லைன்னா தீர்மானமா இருந்து வெளியே வந்துடணும். உடன்பட வேண்டிய கட்டாயத்தையும் சொல்லி, அதன்பிறகு எவ்ளோ பெரிய கஷ்டத்தை ஏற்படுத்துச்சு தெரியுமான்னு சொல்றதுல்லாம் தப்பு.

பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதுல இருந்த கருத்து வேறுபாடு என்னவா இருந்ததுன்னா கடைசியா அவன் வசனம் பேசிட்டு அந்த நெருப்புல போய் விழலாமா, இல்லைன்னா அவன் எதுவும் சொல்லாம விழுந்துடலாமான்னு முடிவெடுக்க முடியாம இருந்தது. இயக்குநர் அவரோட கருத்துல உறுதியா இருந்தார். ஆனா, எனக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு குழப்பம். அதனால நான் ரெண்டுவிதமாவும் க்ளைமேக்ஸ் எடுத்துப்போம், கடைசியா போட்டுக்காட்டுவோம் எது பிடிச்சிருக்கோ அதை ஃபைனல் பண்ணிப்போம்னு பேசினோம். இதுலாம் எல்லா படத்துலயும் நடக்குறதுதான். 'வசந்த மாளிகை' படத்துலகூட ரெண்டு கிளைமேக்ஸ் இருக்கும். ஆனா, சமீபத்துல சேரனுக்கு குழப்பமும், சுய பச்சாதாபமும் ஏன் வந்துச்சுன்னு தெரியல. அவர் சொன்ன விஷயம் எல்லாம் முரணா இருந்தது. நான் ஏதோ அவன் பைத்தியாமா போயிடுற மாதிரி வேற க்ளைமேக்ஸ் சொன்னதாவும், அப்போதைய என் மனைவி என்னைக் கூப்பிட்டு, நீங்க பண்றதுலாம் ரொம்ப தப்புன்னு என்னைக் கண்டிச்சு திருத்தியதாவும் சொன்னதெல்லாம் நடக்கவேயில்லை.

என் மனைவி பட விஷயங்கள் எதுலயும் தலையிட்டதேயில்லை. முக்கியமா இந்தப் படத்துல தலையிட்டதா எனக்குத் தெரியல. அவர் எதுக்கு அவங்க பேரையெல்லாம் சொல்லி நியாயப்படுத்துற மாதிரி பேசினார்னும் தெரியல. இதே சேரன் அவரோட உதவியாளர் ஜெகன் 'ராமன் தேடிய சீதை'ன்னு ஒரு படம் பண்ணும்போது எவ்ளோ டார்ச்சர் பண்ணார்னு ஜெகனே சொல்லியிருக்கார். எனக்கு ஒருத்தர் இப்படி கேள்வி கேட்குறதே கஷ்டமா இருக்கு. ஒரு படத்துல கிளாப் அடிக்கிறவர், டீ கொடுக்கிறவர்கூட ஒரு கருத்து சொல்லியிருப்பார். அதையெல்லாம் சேர்த்து பண்றதுதான் சினிமா. சோதனையெல்லாம் சந்திச்சேன்னு சொல்றதெல்லாம், அதை இன்னமும் பேசிட்டு இருக்கிறதெல்லாம் தப்பாயிருக்கு. முதல் படத்துல இவ்வளவு பிரச்னைகள்னா அவர் அடுத்து 'வெற்றிக்கொடி கட்டு'ன்னு என்னோட இன்னொரு படம் பண்ண வந்திருக்கக்கூடாது. அதனால் நண்பர் சேரன் இதோட இந்தப் பிரச்னையைப் பற்றி பேசுறதை நிறுத்துறது நல்லதுன்னு நினைக்கிறேன். அவர் பேசினாலும் நான் பேசப்போறதில்லை. இதுதான் என்னோட கடைசி பதில்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''கனம் பார்த்திபன் அவர்களே, கனமான செய்தியையும் எளிதான சொல்லாடலில் இலேசாக்கிவிடுகிறிர்களே... அருமை!

இது, கனமான கசப்பு நகைச்சுவையில் கரைந்து போகட்டும் என்பதற்காகவா அல்லது பஞ்சு போன்ற நெஞ்சங்கள் கண்ணீரில் இன்னும் கனமாகாமல் இருப்பதற்காகவா? (சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே... மாதிரி)

- யூக்கரிஸ்ட், சென்னை

''இந்தக் கேள்வியைவிட சிறப்பா என்னால பதில் சொல்லமுடியும்னு தோணல. ஆனாலும், முயற்சி பண்றேன். 'தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார்.' எவ்ளோ பெயின்ஃபுல்லான விஷயத்தை எவ்ளோ எளிமையா சொல்லிட்டுப் போயிருக்காங்க. சோகத்துல உறைசிஞ்சி போறதைவிட கரைஞ்சி போறது நல்லது. அதிலும், விரைந்து கரைந்துபோகுதல் மிகவும் நல்லது. அப்பதான் அடுத்தடுத்து நாம உறைஞ்சி, கரைஞ்சிப்போறதுக்கான ஷணங்கள் வரும். என்னோட வாழ்க்கையிலயும் இப்படிப்பட்ட நிறைய ஷணங்களைக் கடந்திருக்கேன். கடக்கும்போது கஷ்டமா இருக்கும். ஆனா, அதைக் கடந்ததும் அடுத்தக் கஷ்டத்துக்கு தயாராகிடுவோம். எனக்கு 'புதிய பாதை'க்கு அப்புறம் வந்த பிரச்னைகளைவிட அதுக்கு முன்னாடி வந்த பிரச்னைகள் அதிகம். பல பிரச்னைகளை வெளிலக்கூட சொல்லமுடியாது. அதுல ஒண்ணு மட்டும் சொல்றேன்.

அம்மாவுக்கு அப்ப ஆபரேஷன். அவங்களுக்கு ஆபரேஷன் நடந்தப்ப, அப்பா கேன்சர்னால கடைசிநாள்களை என்னிட்டு இருந்தார். அவர் தைரியமா, தன்னம்பிக்கையோடு இருந்தவர்தான். ஆனா, காலையில் அம்மாவுக்கு ஆபரேஷன் பண்றோம், சாயங்காலம் அப்பா இறந்துபோறார். இதை அம்மாவுக்கு தெரிவிக்க முடியாத சூழல். டாக்டர் இப்ப சொன்னா ரொம்ப எமோஷன் ஆகிடுவாங்க, தையல் எல்லாம் பிரிஞ்சிடும்னு சொல்றார். என்ன பண்றதுன்னு தெரியாம நானும், என் தம்பியும் மட்டும் பண்ணவேண்டிய விஷயங்களை எல்லாம் பண்ணிட்டு வர்றோம். அப்ப சொந்தக்காரங்கன்னுகூட யாரும் பெருசா கிடையாது. எல்லாத்தையும் முடிச்சிட்டு அடுத்தநாள் காலைல அம்மாவை எப்படி போய் ஃபேஸ் பண்றதுன்னு தெரியல. போய் பார்க்குறேன். அம்மா ஏதோ ஜோக் அடிக்கிறாங்க. நான் சிரிக்கிறதா சிரிக்கக்கூடாதான்னு தெரியாம நிக்குறேன். அம்மா திடீர்னு வெள்ளைப் புடவை வாங்கித்தாப்பான்னு சொல்றாங்க. ஏன்னா அவங்ககிட்ட இருக்குறது நைலக்ஸ் புடவை. தையல் போட்ட இடத்துல உறுத்துதுன்னு காட்டன் புடவை, அதுவும் வெள்ளைப்புடவை இருந்தா நல்லாயிருக்கும்னு கேக்குறாங்க.

பார்த்திபன்
பார்த்திபன்

எனக்கு கண்கள் தழும்புது. ஒரு சினிமா மாதிரியே இருக்கும். நான் கலங்குறதைப் பார்த்துட்டு என்கிட்ட காசு இல்லைன்னு நினைச்சிக்கிட்டு இப்ப அவசரம் இல்லாப்பா, அப்புறமாகூட வாங்கிக்கொடுன்னு சொல்றாங்க. இப்படியே ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்ல ஓடுச்சு. ஜோக் அடிச்சு பேசிட்டே இருக்கோம். அப்ப ஒருநாள் 'அப்பா ரொம்ப கஷ்டப்படுறார்மா... அவர் இருக்குறதைவிட இல்லாம இருக்குறது நல்லது'ன்னு சொல்றேன். 'டேய்... என்னடா சொல்ற பாவி'ன்னு சொல்றாங்கன்னு அப்படியே ஒரு பெரிய டிராமா போச்சு. இந்த மாதிரி ஒரு சோகத்தை இதுக்குப்பிறகு நான் சந்திச்சதேயில்லை.

இப்பக்கூட எனக்குத் தெரிஞ்ச நபர், உடல்நிலை முடியாம ஹாஸ்பிட்டல்ல வெண்டிலேட்டர்ல போயிட்டார். அவர் மகன் துபாய்ல இருந்து வரணும். பெருசா உறவினர்கள்னு இங்க யாரும் இல்ல. அவர் மகன்கிட்ட தொலைபேசியில் பேசிட்டே இருக்கேன், என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டேயிருக்கேன். அப்ப அந்த மகனோட மனநிலை என்னவா இருக்கும், சமீபத்துலதான் அவருக்குத் திருமணம் முடிஞ்சிருந்தது. எவ்ளோ நாள் செயற்கை சுவாசம் மூலமா வென்ட்டிலேட்டர்ல வெச்சிருக்கமுடியும், இந்த உறவோட அழுத்தம் என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டே இருந்தேன். எல்லோரும் வாழ்க்கைல இப்படி கடந்துபோகவேண்டிய தருணங்கள் இருக்கு. எல்லாமே கடந்துபோகும். இனிமையான நாள்கள் விரைவில் வரும்.''

''இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் என்று சினிமா துறையில் உள்ள பெண் தொழில்நுட்ப கலைஞர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? உங்களிடம் எத்தனை பெண்கள் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்?''

- மா.யுவராஜ், கரூர்

இவன்
இவன்

''பெண்கள் இந்தத் துறைக்கு வர்றது ரொம்ப ரேரான விஷயமா இருக்கு. நான் முதன்முதல்ல 'சின்ன வீடு' படத்துல பாக்யராஜ் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா வேலை பண்ணும்போது பி.ஆர்.விஜயலட்சுமி, பி.ஆர்.பந்துலவோட மகள்... அவங்க சினிமாட்டோகிராஃபரா வொர்க் பண்ணாங்க. ஆனா, அதுக்கு முன்னாடியே சுஹாசினி மணிரத்னமெல்லாம் வொர்க் பண்ணியிருக்காங்க. அப்புறம் 'இவன்' படத்துல ஃபெளசியான்னு ஒரு பெண் ஒளிப்பதிவாளரை என் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணவெச்சேன். அந்தப் படத்துல செளந்தர்யா அழகா இருந்தது பெரிய விஷயமில்ல. என்னைக்கூட அவங்க ரொம்ப அழகா காமிச்சிருந்தாங்க. இப்ப பரபரப்பா பேசப்படுற 'சில்லுகருப்பட்டி' ஹலிதா ரொம்ப அழகா பண்ணியிருந்தாங்க. சூர்யாவை வெச்சு 'சூரரைப்போற்று'ன்னு ஒரு ஆக்‌ஷன் படத்தை சுதா செஞ்சிருக்காங்க. பெண்கள் ரொம்ப ரொம்ப பவர்ஃபுல்லானவங்க. அவங்க பவரை நாம சரியா பயன்படுத்திக்கணும்னு ஆசைப்படுவேன். இப்பக்கூட நான் புஷ்கர் காயத்ரியோட வெப்சீரிஸ் ஓண்ணு பண்றேன். ரொம்ப அலாதியான திங்க்கிங் அவங்கிட்ட இருக்கு. ஸ்ருதிஹாசன் ரொம்ப அழகா பாடுறாங்க. ஆண்ட்ரியாவோட 'Who's The Hero' பாட்டு ரொம்ப பிடிக்கும். இந்தப் பெண்களோடு சுயநலத்தோட, ஆவலா பாத்துட்டு இருக்கிறது என் பொண்ணு கீர்த்தனா. அவங்க என்ன படம் பண்ணப்போறாங்கன்னு ரொம்ப ஆவலோட எதிர்பார்த்து காத்துட்டு இருக்கேன்.''

''கீழடியைத் தோண்ட தோண்ட தமிழர் வரலாறு விஸ்வரூபம் எடுக்கிறதே, உலக அரங்கில் தமிழர் நாகரிகம். ஆனால், மத்திய அரசு இந்தியைக் கொண்டாடும் போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?''

- PL.Atchaya, Puduvadi, Sivagangai

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் பார்வையிடும் பள்ளி மாணவர்கள்.
கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் பார்வையிடும் பள்ளி மாணவர்கள்.
ஈ.ஜெ. நந்தகுமார்

"நல்ல விஷயங்கள் என்னைக்கா இருந்தாலும் வெளியே வரும். அதுக்கு உதாரணம்தான் கீழடி. இந்தக் கேள்வியை கேட்டிருக்கிற அட்சயாபோலவே, தமிழ் ஒரு அட்சயப்பத்திரம் போன்றது. எடுக்க எடுக்க வந்துட்டேதான் இருக்கும். தமிழரோட பெருமை நமக்குத் தெரியும். தமிழேத் தெரியாதவங்களுக்கு அது புரியாது. மத்திய அரசு ஏன் இந்திக்கு முக்கியத்துவம் தராங்கன்னா அவங்க பவர்ல இருக்கும்போது அந்த பவரைப் பயன்படுத்தி அவங்க மொழி, மதம், இனத்துக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. யாரெல்லாம் பவர்ல இருக்குறாங்களோ அவங்களாம் ரெண்டு நல்லதும், ரெண்டரைக் கெட்டதும் செய்றாங்க. கெட்டதுன்னுறது அது மத்தவங்களுக்கு கெட்டதா படுது.

சோனியாகாந்தி பவருக்கு வரும்போது நல்லது செய்றாங்கன்றதை மீறி அவங்களுக்கு ஒரு பழிவாங்கல்னு ஒண்ணு இருக்கு அதை சரியா செஞ்சி முடிக்கிறாங்க. மறைந்த முதல்வர் ஜெயலலிதாகிட்டயும் நல்லதை மீறி, ஒரு பழிவாங்கல் இருக்கும். அதேமாதிரிதான் கலைஞர் கருணாநிதி அவர்களும். அவர் பதவிக்கு வரும்போது நல்ல காரியங்களும் செய்வாங்க. பழிவாங்கற விஷயங்களும் இருக்கும். அவங்க பவரைப் பயன்படுத்தி சாதிக்கணும்னு நினைக்கிற விஷயங்களை எல்லோரும் செஞ்சே தீருவாங்க. அதை நாம புரிஞ்சிக்கணும். ஆனா, தமிழை சாதாரணமா அழிச்சிடமுடியாது. அவ்ளோ தொன்மையான மொழியை ஒண்ணும் பண்ணிட முடியாது. ஆனா, போட்டியில்லாமல் நம்மால் ஜெயிக்கமுடியாது. நம்முடைய பெருமையை நிலைநாட்ட முடியாது. அதனால அவங்க முயற்சி பண்றதை பண்ணட்டும். ஆனால், தமிழ் தன்னைத்தானே அழகாக்கிக்கும். செழுமைப்படுத்திக்கும். அதை அழிக்கவே முடியாது.''

''நான் உங்கள் ரசிகன். 'தாலாட்டு பாடவா' படத்தில் வரும் 'வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா' பாடல் இன்றும் இரவில் கேட்கும் பழக்கமுண்டு... எனது கேள்வி, 'உள்ளே வெளியே', 'சரிகமபதநி', 'புள்ளைக்குட்டிகாரன்' போன்ற ஜனரஞ்சகமான படங்களில் இப்போது உங்கள் இயக்கத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்?''

- காஜா நஜுமுதீன். அ, கோவை

சிம்பு
சிம்பு

"மிஸ்டர் காஜா நஜுமுதீன்... நீங்க கேட்ட நீண்ட கேள்வில நிஜமாவே போட்டில இருக்கிற ஒரே படம் 'உள்ளே வெளியே'தான். 'புள்ளக்குட்டிக்காரன்' மாதிரி படங்கள்லாம் இந்த வரிசைக்குள்ள வருமான்னு தெரியல. 'உள்ளே வெளியே' வர்றதா இருந்தா சிம்பு நடிச்சா நல்லாயிருக்கும். 'புதிய பாதை' சிம்பு நடிக்க சமீபமா டிஸ்கஷன் நடந்துட்டு இருக்கு. விரைவில் அதற்கான பதில் கிடைக்கும்."

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.