
ஆர்.கே.செல்வமணி அதிரடி
கொரோனாவால் சினிமா உலகம் முடங்கி யிருந்தாலும், ஃபெஃப்சி (FEFSI) தொழிலாளர்களுக்கான நல உதவிகள், சீரியல், சினிமா ஷூட்டிங் தொடங்குவதற்கான முன்னெடுப்பு வேலைகள், பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகட்டும் பணிகள் எனச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார் ஃபெஃப்சி தலைவர் செல்வமணி. அவரிடம் உரையாடினோம்.
“இந்த ஊரடங்கு நாள்கள் உங்களுக்கு எப்படிப் போகின்றன?”
“24 மணி நேரமும் ஏதாவதொரு வேலை செஞ்சுக்கிட்டேதான் இருக்கோம். முதன்முதலா ஊரடங்கு அறிவிப்பு வந்தப்போ, `பதினஞ்சு நாள்கள்ல முடிஞ்சிடும்; பிறகு சில கட்டுப்பாடுகளோடு வேலை பார்க்கச் சொல்லிடுவாங்க’னு நினைச்சோம். ஆனா, நிலைமை மாறலை. இதுக்கு முன்னாடி ஸ்ட்ரைக்கெல்லாம் நடந்திருக்கு. அப்போ மத்த இண்டஸ்ட்ரிகள்ல வேலைகள் நடக்கும். வருமானம் வரும். ஆனா, இப்போதைய நிலைமையை இதுவரைக்கும் யாரும் சந்திச்சது இல்லை. ஃபெஃப்சி அமைப்புல சுமார் 25,000 தொழிலாளர்கள் இருக்காங்க. அவங்க எல்லாரையும் பாதுகாக்குறதுல எங்களோட பொறுப்பு கூடியிருக்கு.’’

“அமிதாப் பச்சன் தான் வேலை பார்த்த விளம்பர கம்பெனிகள் மூலமாக நிறைய நிதியுதவிகள் வாங்கி, இந்தி மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கும் சேர்த்துக் கொடுத்தார். ஆனால், நம்மூர் ஹீரோக்கள் அப்படிப் பெரிதாக எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லையே?’’
“25,000 தொழிலாளர்களைக் காப்பாத்துற தெல்லாம் தமிழ் சினிமா நடிகர்களுக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. தாராளமா பண்ணியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தா நாங்க வெளியே போய் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது. அமிதாப் சார் செஞ்ச மாதிரி செய்ய இங்கே எண்ணம் வரலையா... இல்லை, தோணவே இல்லையான்னு தெரியலை. இந்தியில் நடிகர் சல்மான் கான் மட்டுமே 12 கோடி ரூபாயைப் பிரிச்சு, நேரடியாகத் தொழிலாளர்களின் பேங்க் அக்கவுன்ட்லயே போட்டுட்டார். அமிதாப் சார் தமிழ் சினிமாவுக்கு மட்டும் 3.5 கோடி ரூபாய் கொடுத்தார். இங்கே இருக்குற டாப் ஹீரோக்கள் நினைச்சிருந்தா 100 கோடி ரூபாய் வரைக்கும் ஈஸியா வசூல் பண்ணிக் கொடுத்திருக்கலாம். அவங்களுக்கு அது பெரிய விஷயமே இல்லை. எங்கேயோ வேலை பார்க்குற அமிதாப் சாருக்கு இருக்குற மனசு இங்கே உள்ளவங்களுக்கு இல்லை.”
“நடிகைகள் எதுவும் கொடுத்தார்களா?”
“படம், மேடை, சம்பளம் என எல்லாவற்றிலும் ஹீரோக்கள்தான் முன்னிலையில் இருக்காங்க. அதனால நடிகைகள்கிட்ட பெருசா எதிர்பார்க்கிற தில்லை. இந்த முறை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாங்க. தென்னிந்திய நடிகைகள் பலரும் 1,000 ரூபாய்ல இருந்து 50,000 ரூபாய் வரைக்கும் கொடுத்தாங்க. சிலர் அரிசி மூட்டைகள் வாங்கிக் கொடுத்தாங்க. `ஏதாவது வேணுமா?’ன்னு பலர் போன் பண்ணி விசாரிச்சாங்க. அதுவே பெரிய சந்தோஷம்.’’
“அனுமதி கிடைத்தும் சீரியல் படப்பிடிப்புகள் பெரிய அளவில் தொடங்கியதுபோலத் தெரியவில்லையே?’’
“நடிகர்கள் பெங்களூர், மும்பைனு பல மாநிலங்கள்ல இருந்து வரணும். அப்படி வர்றவங்களைத் தனிமைப்படுத்தினா ஷூட்டிங் நடத்த முடியாது. ஹோட்டல்கள் எல்லாமே மூடியிருக்கு. அதனால வெளியூர் நடிகர், நடிகைகளைத் தங்கவைக்குறதுல பிரச்னை இருக்கு. தவிர, கார்ப்பரேஷன் ஆபீஸ்ல அனுமதி வாங்கணும். எல்லாருடைய ஆதார் கார்டும் வேணும். எல்லாருக்கும் இன்ஷூரன்ஸ் போடணும். இப்படி நிறைய பிரச்னைகள் இருக்கு. அதனால்தான் சில தாமதங்கள்.’’

“ஷூட்டிங் ஸ்பாட்டில் சமூக இடைவெளி சாத்தியமா?’’
“எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை. ஹீரோ, ஹீரோயின் எப்படிச் சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியும்... சாப்பாடு பரிமாறுபவர், லைட் மேன் போன்றவங்க சமூக விலகலை ஃபாலோ பண்ணிக்குவாங்க. `கார்ல மூணு பேர் மட்டும்தான் போகணும்’னு சொல்லியிருக்கோம். `அவுட்டோர் ஷூட்டிங் வேண்டாம்’னு அரசும் சொல்லிடுச்சு. அதனால, ஒரு கூரையின் கீழே வேலை பார்க்கத் தயாரா இருக்கோம்.’’
“திருமணம் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள குறைந்தபட்ச உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கும் அரசு, படப்பிடிப்புக்கு மட்டும் 60 பேர்களை அனுமதித் திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?’’
“எல்லாத் துறைகளுக்கும் அரசு மானியம் கொடுத்திருக்கு. ஆனா, சினிமாதுறைக்கு எதுவும் செய்யலை. வெளியேயிருந்து பார்க்குற மக்கள் ரஜினி, கமல்தான் சினிமானு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. தினமும் ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்கிறவங்களும் சினிமாவுல இருக்காங்க. எல்லா கம்பெனியிலும் 50 சதவிகிதம் பேர் வரைக்கும் வேலை பார்க்கலாம். ஆனா, எங்களுக்கு வெறும் முப்பது சதவிகிதம்தான் கொடுத்திருக்காங்க. 200 பேர் வரைக்கும் வேலை பார்க்க வேண்டிய இடத்துல வெறும் 60 பேருக்குத்தான் அனுமதி கொடுத்திருக்காங்க. சினிமாக்காரனையும் சகோதரனா பாருங்க. அவங்களும் வாழணும்னு நினைங்க.’’