Published:Updated:

`பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு’ - உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்

`இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்க, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்!' - அமைச்சர் கடம்பூர் ராஜு

parthiban
parthiban

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த `ஒத்த செருப்பு’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் இது புதிய முயற்சி என பார்த்திபனுக்கு தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில், புதிய படங்களின் வரவால் 4 காட்சிகள் ஓடிய திரையரங்குகளில் `ஒத்த செருப்பு' ஒரு காட்சியாக குறைக்கப்பட்டுள்ளது.

Oththa Seruppu Size 7
Oththa Seruppu Size 7

இதனால் வேதனை தெரிவித்த நடிகர் பார்த்திபன், செய்தியாளர்களிடம் பேசும்போது, ``படம் 20-ம் தேதிக்கு முன்னர் வெளியானதால்தான் ஆஸ்கருக்கு அனுப்பமுடியும். அதனால் தான் `காப்பான்’ படம் வெளியானபோதும் வெளியிட்டேன். `ஒத்த செருப்பு’ படத்துக்கு இப்போதுதான் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது.

புதிய படம் வருவதால் திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்படுவதுடன், படத்தை எடுத்துவிடுகின்றனர். ஒரே ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு கலைஞனை கொன்று அவன் பிணத்தின் மீதுள்ள மாலையை புதுமணத் தம்பதிக்கு அணிவிப்பதுபோல் உள்ளது” என்றவர் திரையரங்கு உரிமையாளர்களிடம், `வருமானத்தை கடந்து, காட்சிகளை அதிகரிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்

Parthiban
Parthiban

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ராதாரவியும் இதே கோரிக்கையை முன்வைத்தார். ``ஒத்த செருப்பு படம் மிக அருமையான படம். திரையுலகம் உள்ளவரை பார்த்திபன் பேசப்படுவார். படத்தை ஏதோ இணையத்தில் வெளியிட்டார்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை தெரிந்தால் அவர்கள் காலிலும் கூட விழுவேன் இது நல்ல படம். இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பேசவுள்ளேன்” என்றார்.

`இறந்தவரின் மாலையை புதுமணத் தம்பதிக்குப் போடுவதுபோல் உள்ளது!’- பார்த்திபன் வேதனை

இந்த நிலையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை அவரது வீட்டில் நடிகர் பார்த்திபன் சந்தித்துப் பேசினார். பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜு, ``எனக்குத் தெரிந்து சர்வதேச அளவில் ஒருவர் மட்டுமே படம் எடுத்து, அதிலும் அவரே நடித்து, ஒரே கதாபாத்திரம் மட்டுமே கொண்டு ஒரு படம் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு முயற்சியை சகோதரர் பார்த்திபன் தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார்.

இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைக்க, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான படமாகத்தான் உருவாக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு `ஏ' சென்டர் மட்டுமல்லாது, `பி', `சி' என அனைத்து சென்டர்களிலும் நல்ல வரவேற்பு இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

`பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு’ - உதவிய உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்த பார்த்திபன்

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பேசியதை ஏற்றுக்கொண்டு காட்சிகளை அதிகப்படுத்தித் தருவதாகத் திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளனர். உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!” என குறிப்பிட்டிருக்கிறார்.