Published:Updated:

`களங்கம் விளைவிக்கும் வதந்தியே!'- உத்தம வில்லன் சர்ச்சைக்குக் கமல் தரப்பு விளக்கம்

Kamalhaasan
Kamalhaasan

``கமல் என்னிடம் 10 கோடி பணத்தைப் பெற்று, இன்றுவரை எந்தப் படமும் நடித்துத் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை'' என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்திருந்தார், ஞானவேல் ராஜா.

`உத்தம வில்லன்' படத்தின் ரிலீஸ் சமயத்தில் கமல் தன்னிடம் 10 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதாக ஞானவேல் ராஜா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளதாக நேற்று சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தரப்பிடமிருந்து தற்போது பிரஸ் ரிலீஸ் ஒன்று வெளியாகியுள்ளது. 

Gnanavel Raja
Gnanavel Raja

2015-ம் ஆண்டு உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி கமல்ஹாசன் நடித்த `உத்தம வில்லன்' படம் வெளியானது. கமல்ஹாசனுடன் இணைந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த இப்படத்தை, ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். லிங்குசாமிக்கு முதல் பிரின்ட் அடிப்படையில் கமல்ஹாசனே இப்படத்தைத் தயாரித்திருந்தார். ரிலீஸின் போது பல்வேறு பிரச்னைகள் இப்படத்திற்கு எழுந்தன. அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம், `என்னுடைய அடுத்த படத்தை முதல் பிரின்ட் அடிப்படையில் உங்களுக்கு இயக்கி நடித்துத் தருகிறேன்' என்றும் `அதற்கு 40 கோடி சம்பளம் என்றால், அந்த சமயத்தில் நீங்கள் எனக்கு 30 கோடி கொடுத்தால் போதும், மீதி 10 கோடியை இப்போது கொடுங்கள்' என்றும் கமல்ஹாசன், ஞானவேல் ராஜாவிடம் வாக்குறுதி கொடுத்து பணம் பெற்றிருப்பதாகச் சொல்லியிருந்தனர்.

படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ``கமல் என்னிடம் 10 கோடி பணத்தைப் பெற்று, இன்றுவரை எந்தப் படமும் நடித்துத் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை'' என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்திருந்தார், ஞானவேல் ராஜா. இந்தப் புகாருக்கு கமல் தரப்பிலிருந்து விளக்கம் பெறும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரான ஜே.சதீஷ்குமார், கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதில் விளக்கம் அளிக்கும் வகையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, தற்போது ஒரு பிரஸ் ரிலீஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. 

அதில், ``கமல்ஹாசன், ஞானவேல்ராஜாவுக்கு 10 கோடி தர வேண்டும் எனப் பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தியே. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இதைக் கடுமையாக மறுக்கிறது. எந்தவொரு தொகையும் கமல்ஹாசன், ஞானவேல் ராஜாவிடமிருந்து பெறவில்லை. 10 நாளைக்கு முன்புதான் ஜே.சதீஷ்குமார்  கமல்ஹாசனைப் பார்க்க வேண்டி அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தார். அப்போது கமல், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தான் கால்ஷீட் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின்னர், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை. கமல்ஹாசனின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில்தான் ஞானவேல் ராஜா இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளார். முதல் பிரின்ட் அடிப்படையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்குத்தான் ராஜ்கமல் நிறுவனம் `உத்தம வில்லன்' படத்தைத் தயாரிக்க ஒப்பந்தமளித்திருந்தது; அதையும் சரியாக முடித்துவிட்டது. எங்களது நற்பெயரை நிரூபிக்கும் வகையில் சட்டரீதியான சில நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறோம்'' என்று குறிப்பிட்டிருந்தது. 

அடுத்த கட்டுரைக்கு