சினிமா
பேட்டிகள்
Published:Updated:

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் - சினிமா விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
பிரீமியம் ஸ்டோரி
News
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்

முதல் காட்சி தொடங்கி இறுதிக் காட்சி வரை ஆங்காங்கே மராத்திப் படமான ‘ரங்கா பட்டாங்கா’வின் சாயல் தெரிகிறது.

யார் ஆண்டாலும் எளிய மக்களின் வாழ்க்கையில் பெரிதாக மாற்றமில்லை எனச் சொல்ல முயன்றிருக்கும் படம் `இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.'

குன்னி முத்து - வீராயி தம்பதி வளர்க்கும் வெள்ளையன், கருப்பன் காளை மாடுகள் காணாமல் போக, அவற்றைத் தேடித் திரிகிறார்கள். ஒருகட்டத்தில் இது தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் செய்தியாக மாறுகிறது. படையெடுக்கும் செய்தியாளர்கள், அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகள் நடுவே, இவர்களின் மாடுகள் கிடைத்தனவா என்பதுதான் மீதிக்கதை.

குன்னிமுத்துவாக நடித்திருக்கும் மிதுன் மாணிக்கத்திற்கு படம் நெடுக அழுகையை வெளிப்படுத்தும் வேலை மட்டுமே. முதல் காட்சியில் இருந்து கடைசிக்காட்சி வரை மிதுன் ஒரே எக்ஸ்பிரஷனிலேயே திரிய, அதுவே பெருஞ்சோகமாக இருக்கிறது. வீராயியாக நடித்திருக்கும் ரம்யா பாண்டியன் கிராமத்துப் பெண்ணின் உடல்மொழியை, பேச்சு வழக்கைச் சுமக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். டி.வி நிருபராக வாணிபோஜனுக்கு முதன்மைக் கதாபாத்திரம் என்றாலும் மனதில் பதியும் அளவு இல்லை. ஒட்டுமொத்தப் படத்தில் நம்மைக் கவர்பவர் அவ்வப்போது தன் நையாண்டிகளால் தனித்துத் தெரியும் வடிவேல் முருகன்தான்.

வெக்கையே வாழ்க்கையாகிப்போன சிற்றூரின் பரப்பை நிஜமெனக் கண் முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். ஆனால் க்ரிஷின் பின்னணி இசையோ படத்தில் ஒட்டாமல் தனித்து நிற்கிறது.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் - சினிமா விமர்சனம்

குன்னிமுத்துவும் வீராயியும் காளைமாடுகளை உயிராய் நினைக்கிறார்கள் என்பதற்காக மீண்டும் மீண்டும் அதையே காட்டுவதும், ஒவ்வொரு காட்சியிலும் ‘எங்க புள்ளை மாதிரி’, ‘எங்க புள்ளை மாதிரி’ என்று திரும்பத் திரும்பப் பேசுவதும் நாடகத்தனம். மின்சாரமே இல்லாத கிராமத்தில் முன்னணி சேனல்கள் டாப் அடிக்கிறார்கள் என்பதெல்லாம் என்ன லாஜிக் என்று தெரியவில்லை. முதல் காட்சியில் நாயகன் ஏனாதி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார். திடீரென்று மதுரைப்பக்கம் நடந்துபோய் கடைசியில் குமுளியில் மாட்டை மீட்கிறார். க்ளைமாக்ஸில் மாடுகள் கடத்தல் விவரிப்பு ஏற்கெனவே பொதுச்சமூகத்தில் நிலவிவரும் கருத்துக்கு வலுச்சேர்ப்பது போல அமைந்திருக்கிறது.

இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் - சினிமா விமர்சனம்

முதல் காட்சி தொடங்கி இறுதிக் காட்சி வரை ஆங்காங்கே மராத்திப் படமான ‘ரங்கா பட்டாங்கா’வின் சாயல் தெரிகிறது. அந்தப் படத்தின் தாக்கம் இருந்திருக்குமாயின் முறையாக அதற்கு இயக்குநர் அரிசில் மூர்த்தி க்ரெடிட் கொடுத்திருக்கலாம். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைக்கதை பற்றிக் கவலையில்லை’ என்று நினைத்ததால் முழுமையான படைப்பாக மாறாமல், துண்டு நையாண்டி வீடியோக்களின் தொகுப்பாகவும் நம்பகத்தன்மையற்ற காட்சிகளின் தொகுப்பாகவும் நின்றுபோகிறது.