Published:Updated:

``எனக்கு கொரோனா இல்லை... தேனாம்பேட்டைல தொல்லை தாங்க முடியல!'' - ராதாரவி

ராதா ரவி
ராதா ரவி

`கோத்தகிரில என் வீட்லதான் இருக்கேன். இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இப்படித்தான் நடந்தது. எங்க ரெண்டு பேருடைய முகம் எல்லாருக்கும் தெரியும்குறதுனால தனிமைப்படுத்தியிருக்குற செய்திகள் வெளில வருது’

சென்னையிலிருந்து கோத்தகிரிக்கு குடும்பத்துடன் சென்ற ராதாரவிக்கு கொரோனா என செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தனக்கு கொரோனா இல்லை என விளக்கம் அளித்திருக்கிறார் நடிகர் ராதாரவி.

நடிகர் ராதாரவியின் வீடு சென்னை தேனாம்பேட்டையில் இருக்கிறது. இங்குதான் தன் குடும்பத்தினருடன் நீண்டகாலமாக வசித்துவருகிறார். கொரோனா சென்னையில் மிகவேகமாகப் பரவிவரும் நிலையில், கடந்த 12-ம் தேதி சென்னையிலிருந்து குடும்பத்துடன் கிளம்பி கோத்தகிரிக்குச் சென்றார் ராதாரவி.

ராதா ரவி
ராதா ரவி

கோத்தகிரிக்குப் போனதும் அவருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் க்வாரன்டீனில் இருக்கும்படி சுகாதார அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் ராதாரவிக்கு கொரோனா எனத் தகவல் பரவ ஆரம்பித்துவிட்டது.

வதந்திகள் குறித்து ராதாரவியிடம் பேசினேன். ``என்னைப் பற்றின செய்திகள்ல உண்மையில்லை. நான் நல்லா இருக்கேன். ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் போனால் யாராக இருந்தாலும் தனிமைப்படுத்துவாங்க. அப்படித்தான் என்னையும் தனிமைப்படுத்தியிருக்காங்க. கார் பாஸ் கொடுக்கும்போதே இதைச் சொல்லித்தான் கொடுத்தாங்க. கோத்தகிரில என் வீட்லதான் இருக்கேன். சகோதரர் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் இப்படித்தான் நடந்தது. எங்க ரெண்டு பேருடைய முகம் எல்லாருக்கும் தெரியும்குறதுனால தனிமைப்படுத்தியிருக்குற செய்திகள் வெளில வருது. சிலர் தேவையில்லாம ஏதேதோ சொல்லிட்டிருக்காங்க.

கடந்த ரெண்டு மாசமா சென்னை தேனாம்பேட்டைல வீட்டுக்குள்ளயேதான் இருந்தேன். வெளியே எங்கேயும் போகல. எல்லா வேலைகளையும் போன் மூலமா ஒருங்கிணைச்சு பண்ணிக்கிட்டிருந்தேன். டப்பிங் யூனியன் மூலமா சில நலத்திட்டங்களையும் பண்ணிட்டு இருந்தோம். ஃபெப்சியில் இருந்து கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை விநியோகம் பண்ற வேலைகளை செயலாளர் கதிர் மற்றும் பிரெசிடென்ட் ஶ்ரீனிவாச மூர்த்தி பார்த்துக்கிட்டாங்க. ஷூட்டிங் இருந்திருந்தா சென்னையை விட்டு வெளியே வந்திருக்க மாட்டேன். சில பெர்சனல் வேலைகளும் இருந்தது. அதனாலதான் கோத்தகிரியில இருக்குற என்னோட இன்னொரு வீட்டுக்கு வந்திருக்கேன்.

ராதா ரவி
ராதா ரவி

அதுமட்டுமல்லாம தேனாம்பேட்டை வீட்டுல இருந்தா நிறைய பேர் பார்க்க வந்துட்டே இருக்காங்க. சொன்னாலும் சிலர் கேட்குறதில்ல. தவிர்க்கவும் முடியல. பயங்கர தொல்லையாகிடுச்சு. அதனாலயே இங்க வந்துட்டேன். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கச் சொல்லி அரசாங்கம் சொல்லிட்டாங்க. அதனால இப்போ டப்பிங் வேலைகளை ஆரம்பிச்சிட்டோம். இங்கேயும் அரசாங்கம் சொன்ன விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் எல்லாத்தையும் ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம். ஒருத்தர் பேசி முடிச்சி அரைமணி நேரம் கழிச்சுதான் இன்னொருத்தர் உள்ளே வந்து டப்பிங் பேச முடியும். எல்லா மருந்துகளும் தெளிச்சிட்டு இருக்கோம். எங்களுக்கு எதிரா இருக்குற சிலர் இந்தமாதிரி வதந்திகளைப் பரப்புறாங்க. அவங்க தப்பா ஏதாவது சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. இதுக்காக நான் கவலைப்பட மாட்டேன். நாலு பேர் பாராட்டிப் பேசுறப்போ எதிர்த்து பேசவும் சிலர் இருக்கத்தான் செய்வாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டா உடனே சென்னை வந்துடுவேன்.

நாலு படம் என் கையில இருக்கு. அதையெல்லாம் நடிச்சுக் கொடுக்கணும். இந்த லாக்டெளன் காலத்துல பி.ஜே.பி அரசாங்கம் நல்லாவே செயல்படுறாங்க. சொந்த காசை போட்டுக்கூட சிலர் நல்லது செஞ்சிக்கிட்டு இருக்காங்க.

கோத்தகிரில கலெக்டர் தொடங்கி சுகாதார அலுவலர்கள் எல்லாமே கொரோனாவைத் தடுக்க சிறப்பா வேலை செய்றாங்க. என்னைத் தொடர்ந்து செக்-அப் பண்ணிட்டிருக்காங்க. எங்க யாருக்கும் எதுவும் இல்லை. அதனால தேவையில்லாம சிலர் பரப்பிவிடுற செய்திகளை நம்ப வேண்டாம்'' என்றார் ராதாரவி.

அடுத்த கட்டுரைக்கு