Published:Updated:

ராதிகா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Radhika - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Radhika - A Reporter's Diary

`சினிமாக்காரங்களை நம்பாதே என்றார் அப்பா!

ராதிகா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

`சினிமாக்காரங்களை நம்பாதே என்றார் அப்பா!

Published:Updated:
Radhika - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Radhika - A Reporter's Diary

லங்கையில் பள்ளிப் படிப்பை முடித்த ராதிகா லண்டனுக்குப் போய் ஹோட்டல் மானேஜ்மெண்ட் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தார். விடுமுறைக்குச் சென்னை வந்தார். சென்னை வந்த ராதிகாவைக் கண்ட பாரதிராஜா தன் `கிழக்கே போகும் ரயில்' படத்தில் நடிக்க வைத்தார்.

ராதிகா நடிகையானார்.தான் நடிகையாகப் போகிறோம் என்று அவர் கனவுகூடக் கண்டதில்லை. சாவித்திரி நடித்த `கை கொடுத்த தெய்வம்' படத்தை ராதிகாவைப் பார்க்க வைத்தார் பாரதிராஜா. பிறகுதான் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே ராதிகாவிற்கு ஏற்பட்டது.``சாவித்திரி!

ஓ... வாட் அன் ஆர்ட்டிஸ்ட் ஷி இஸ்..! லைஃப்லே ஒவ்வொருத்தருக்கும் எதுக்கும் ஒரு பாயிண்ட் இருக்கணும். எந்தத் தொழில் செய்தாலும் ஒரு பாயிண்டை வெச்சிக்கிட்டு அப்ரோச் பண்ணணும். அந்தப் பாயிண்டைப் போய் அடையறோமா இல்லையா என்பது செகண்டரிதான்.

அப்படி இருந்தாத்தான் மாக்ஸிமம் நாம் போக முடியும். அப்படித்தான் நடிப்பிலே நான் சாவித்திரியை ஒரு பாயிண்டா வெச்சிக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சேன்!"- இப்படி ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசுகிறார் ராதிகா.

அவர் பேச்சில் மழலையுடன் கூடவே ஒரு மரியாதையும் கண்ணியமும் இழையோடிக் கொண்டே இருக்கிறது. மருந்துக்குக்கூட மமதை தெரியவில்லை.

Radhika - A Reporter's Diary
Radhika - A Reporter's Diary

``சினிமாவை நான் நிரந்தரமாக நம்பமாட்டேன். கொஞ்ச நாள் கழித்து அம்மா வேஷம், அதற்குப் பிறகு பாட்டி வேஷம் என்று போடமாட்டேன். எனக்குப் பிடித்தவரை - ஆர் ஐ வில் புட் இட் திஸ் வே - ரசிகர்கள் என்னை வரவேற்கும்வரை நடிப்பேன். எனக்கு போட்டோகிராஃபி என்றால் ஆசை.

பிறகு லண்டன் போய் போட்டோகிராஃபி கற்றுக் கொள்வேன். திரும்ப சினிமாவில் வரவா? நோ... நோ... ஐ லைக் தட் ஜாப்!"- நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆசை ராதிகாவிடம் கொட்டிக் கிடக்கிறது.

பல புத்தகங்களைப் படிக்கிறார். இதுதான் பிடிக்கும், இது பிடிக்காது என்பதல்ல; புத்தகம், பத்திரிகை என்று எது வந்தாலும் படிக்கிறார்.``ஐ லவ் ரீடிங்! எந்தப் புத்தகத்திலும் எதுவும் இல்லை என்று தூக்கி எறிந்துவிட மாட்டேன். அதில் எனக்குப் பிடித்தது ஏதாவது இருக்கும்.

நான் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கும்!'"- சில பத்திரிகைகளில் இவரைப்பற்றி வந்த வதந்திகள் - காஸிப்ஸ் - இவரைச் சலனப்படுத்தியதே கிடையாதாம்.``இங்கேயெல்லாம் என்ன காஸிப் போடறாங்க..?

வெளிநாட்டுப் பத்திரிகைகளையும் பம்பாய்ப் பத்திரிகைகளையும் பார்த்தால் இங்கு வருவதில் ஒன்றுமே இல்லை. அப்படிப் பத்திரிகைகளில் 'கிசு கிசு' வருவது தவறு, அப்படிப் பிரசுரிக்கக் கூடாது என்றுகூட நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அது அவர்களின் பிஸினெஸ். தே வாண்ட் டு ஸெல் தேர் மேகஸின்.

வாசகர்களும் அதைத் தான் ரொம்ப விரும்பிப் படிப்பாங்க... பக்கத்து வீட்டிலே கொஞ்சம் உரக்க யாராவது சண்டை போட்டா நாம எட்டிப் பாக்கறது இல்லையா - இட் ஈஸ் ஹ்யூமன்'''- ஒவ்வொன்றைப் பற்றியும் எவ்வளவு யோசித்து எப்படித் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அது மட்டுமா?``ஐ வாண்ட் டு பி எ ஃப்ரீ பேர்ட்! நான் ஒரு சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புகிறேன். உலகமெல்லாம் சுற்றிப் பார்க்கணும். வித விதமான மக்களைச் சந்திக்கணும். அவர்களோட பழகணும். எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளணும்!

சுதந்திரப் பறவைன்னா கன்னா பின்னான்னு சுத்தறது இல்லே... பெற்றோரை மதித்து அவர்களது அனுமதியுடன் நாம் சுதந்திரமாக இருக்கணும். வாழ்க்கைகூட ஒரே ஏறு முகமாகவோ, இறங்கு முகமாகவோ இருக்கக்கூடாது. அப்ஸ் அண்ட் டெளன்ஸ் இருக்கணும். அப்போதான் வாழ்க்கையிலே அனுபவம் வரும்.

தவறுகள் வரலாம். அந்தத் தவறுகளினால் நாம் திருந்தும்போது நிறையக் கற்றுக் கொள்ளலாம்."- மனத்தில் பட்டவற்றைப் பளிச் பளிச்சென்று சொல்லிவிடுகிறார் ராதிகா.``இப்போ கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். ஒரு கால் கட்டு வந்து அப்புறம் குடும்பம், குழந்தைன்னு அது வேறே மாதிரி லைஃப் ஆயிடும்.

28, 29 வயசுக்குப் பிறகுதான் - எனக்கு ஒரு கம்பானியன் வேணும்னு நினைக்கும் போதுதான் - கல்யாணம் பண்ணிப்பேன். ஐ லைக் டிராவல். நிறைய ஊர்களைப் பார்க்கணும், நிறைய மக்களைச் சந்திக்கணும்... பிறகுதான் திருமணம்!"- திருமணத்தைப் பற்றிக் கூடத் திட்டமிட்டிருக்கிறார்.

எதையாவது சொல்லிவிட்டு "ஐயோ, அதைப் பிரசுரிக்காதீங்க..." என்று இவர் 'ஜகா' வாங்குவதில்லை.``நான் சொல்றது எல்லாத்தையும் போட்டுக்குங்க...

நான் எதுக்கும் யாருக்கும் பயப்படறது கிடையாது. ஏன்.? இதுவரைக்கும் நான் சில 'டப்பா' படங்களில் நடித்துவிட்டேன். கெட்ட பெயர் வந்துவிட்டது. அந்தப் படங்கள் எனக்கும் திருப்தி கொடுக்கவில்லை. படம் பார்ப்பவர்களுக்கும் திருப்தி அளிக்கவில்லை. என்ன செய்வது!

சிலரின் வற்புறுத்தலால் அப்படிப்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். 81-ல் அப்படி அல்ல. நல்ல பாத்திரங்களாக, எனக்குப் பிடித்தவையாகத் தேர்ந்தெடுத்து நடிப்பேன்."- பல வருடங்களுக்கு முன் ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதா அவர்களைச் சந்தித்திருக்கிறேன்.

அவரும் இப்படித்தான் மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தந்தையைப் போல மகள்.``எங்களைப் போல எல்லாம் எங்கப்பா படித்தவர் இல்லை. அவருக்கு இங்கிலீஷ் தெரியாது.

நான் ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டிருந்தால் என்னிடம் வந்து கேட்பார், `அது என்ன? அது எப்படி?' என்று - உதாரணமாக சாட்டலைட் பற்றி ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தால் சாட்டலைட் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார்."எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தந்தையின் எண்ணம்தான் மகளுக்கும் வந்திருக்கிறது!``நான் நடித்த படத்தை எங்கப்பா பார்த்தார்.

தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் `ம்... நல்லா பண்ணியிருக்கே... சினிமாக்காரங்களை நம்பாதே... உனக்கு என்று ஒரு எண்ணம் வைத்துக் கொள்' என்றார்.

ஒரு எண்ணமா? எத்தனை வித விதமான எண்ணங்கள் அந்த `சுதந்திரப் பறவை' யின் நெஞ்சில் அலை பாய்கின்றன! 

- பாலா

(25.01.1981 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism