Published:Updated:

``படத்தின் விரசமான காட்சிகள் லீக்கானால் நடிகைகள் பெயரில் மட்டும் வெளியாவது ஏன்?'' ராதிகா ஆப்தே ஆவேசம்

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

நான் பெரும்பாலும் உலக சினிமாக்களைப் பார்த்து வளர்ந்த பெண். உலகம் முழுவதும் நிறைய இடங்களுக்குப் பயணம் செய்துள்ளேன்.

தமிழில் கபாலி, தோனி படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். இதேபோல் ஹாலிவுட்டிலும் தற்போது நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இதற்கிடையே, ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து `தி வெட்டிங் கெஸ்ட்' என்ற படத்தில் தற்போது நடித்துவருகிறார் ஆப்தே. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தேவ் - ராதிகா இடையேயான படுக்கையறைக் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் லீக்கானது. இது படக்குழுவிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கடும் சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்த நிலையில், இந்தக் காட்சிகள் குறித்து தற்போது ராதிகா ஆப்தே பேசியுள்ளார்.

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

அதில், ``அந்தப் படத்தில் அழகான நிறைய காட்சிகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட அந்தப் படுக்கையறைக் காட்சி மட்டும் இணையத்தில் வெளியானது சமூகத்தின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்ட அந்தக் காட்சியில் நானும், தேவ்வும்தான் நடித்துள்ளோம். ஆனால், இணையத்தில் பரப்புபவர்கள் என் பெயரில் மட்டுமே அதை பரப்புகின்றனர். ஏன் அதை ஆண் நடிகர் தேவ் பெயரில் பரப்பவில்லை" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ``நான் பெரும்பாலும் உலக சினிமாக்களைப் பார்த்து வளர்ந்த பெண். உலகம் முழுவதும் நிறைய இடங்களுக்குப் பயணம் செய்துள்ளேன்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிர்வாணமாக நடிப்பதை பார்த்துள்ளேன். உடல் என்பது ஒரு நடிகருக்கு கருவிதான். என்னுடைய உடலை நான் நேசிக்கிறேன். ஆனால், இதுபோன்ற காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த அச்சமும் இல்லை. இதில் நடிக்க ஏன் வெட்கப்பட வேண்டும். நான் பாதுகாப்பாக இருப்பதாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த அச்சமும் இல்லை" என ராதிகா பேசியுள்ளார்.

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

தான் நடிக்கும் படங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த கருத்துகள், பெண்கள் மீதான அடக்குமுறை குறித்து வெளிப்படையாகப் பேசக்கூடிய வேடங்களில் நடிப்பவர் ராதிகா ஆப்தே. பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களே நடிக்க மறுத்த சில படங்களில் தைரியமாக நடித்தவர் ராதிகா. இதற்காக அவர் சந்திக்காத விமர்சனங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், அதையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் என கடந்து சென்றுவிடுவார். சில வருடங்களுக்கு முன் வெளியான `பார்ச்ட்' (parched) படத்திலும் இப்படியான காட்சிகளுக்காக, அவர் மீது பல்வேறு அவதூறுகள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு