Published:Updated:

`ராயபுரம் மக்களுக்கு ரூ.75 லட்சம்; கொரோனா நிவாரணம் 3 கோடி ரூபாய்!’ - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

 ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி அளிக்கவுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக விலகல் மூலம் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என்பதால் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக்கூலிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கொரோனா நிவாரண நிதிக்காகப் பலரும் தங்களால் இயன்ற தொகையை அளித்து வருகிறார்கள். அரசியல் கட்சியினர் திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இல்லத்தரசிகள், குழந்தைகள் கூட தங்களது சேமிப்புகளிலிருந்து சிறு தொகையை பிரதமர் நிவாரண நிதிக்கும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரணமாக ரூ.3 கோடியை அளித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ், `நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்கிறேன். என்னுடைய அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான `சந்திரமுகி 2'. தலைவரின் அனுமதியுடனும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கவுள்ளார். இதற்கான அட்வான்ஸ் தொகையைப் பெற்றுள்ளேன். கொரோனா நிவாரணத்துக்காக 3 கோடி ரூபாயை அளிக்கவுள்ளேன்.

 ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், நான் பிறந்து வளர்ந்த ராயபுரம் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் வழங்கவுள்ளேன். உணவுப்பொருள்கள் அனைத்தும் காவலர்களின் உதவியுடன் பாதுகாப்பாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு