
போகம், குரோதம் எனும் ஈக்களும் வண்டுகளும் சுற்றி வரும் மலரல்லவா இது. பூஜைக்கு உகந்த மலரல்லவே இது.
விடிவதற்குமுன் - விழிப்பு வந்தது! மென்பொழுது.
நான்கு மணி - ப்ரம்ம முகூர்த்தம். திடீரென்று
இறைவனைப் பூஜைசெய்ய வேண்டும் என்று
ஓர் எண்ணம் அழுத்தமாகத் தோன்றியது.
உன் பூஜைக்காக....
உத்தம அடியார் ஒருவர் மனிதர்களின் வேண்டுதல்களைப் பற்றிப் பாடியிருக்கிறார்.
கலையாத கல்வி வேண்டுமாம். குறையாத வயதும் கபடு வராத நட்பும்கன்றாத வளமையும் குன்றாத இளமையும் வேண்டுமாம்.
அது மட்டுமா?
பிணியில்லாத உடலும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடையில்லாக் கொடையும் தொலையாத நிதியமும் துன்பமில்லாத வாழ்வும் - அத்துடன் நின்றதா... உன் பாதத்தில் அன்பும் வேண்டுமாம்.

நானும் பூஜைசெய்ய நினைத்தேன் - இந்தச் சிறுவன் செய்த குற்றங்களை மன்னித்து பிறவித்தளையிலிருந்து விடுதலை தருவாய் என்பதால்! என்ன சிரிக்கிறாய்? எனக்கு உன்னைவிட்டால் வேறு ஒருவரும் கிடையாது. நீதான் விடுதலை கொடுத்தாக வேண்டும்... கொடுக்கப்போகிறாய்! எப்போதே கேட்டு வாங்கிவிடலாமே என்றுதான் பூஜை செய்ய நினைக்கிறேன்.
அடடா.... நேரமாகிவிட்டதே. அவசரமாகக் குறித்துவிட்டுக் கீழே வந்தேன். பூஜையறையிலுள்ள பூவைப் பார்த்தேன். நேற்று இரவே வாங்கி வைத்த மலர்கள் வாடிப்போயிருந்தன. பிடிக்கவில்லை. கடைவீதிக்குச் சென்றேன்... பூக்கடையே காத்திருந்தது காத்திருந்தது. இன்னும் பூக்கள் வரவில்லையாம். நான்கைந்து வண்டிகளிலிருந்து மூட்டை மூட்டையாக மலர்கள் வந்திறங்கின.
“வா.... சார் வா...!” என்று கடைக்காரன் புதிய மலர்களைக் காட்டினான்.
“இது இப்போதுதான் பறித்ததா?”
“இல்லை... நேற்று மாலையே பறித்து மூட்டை கட்டி இரவில் அனுப்ப... இன்று வந்தது! என்றான் எனக்கு வருத்தம்.
வேண்டாமென்று மறுத்துவிட்டு நடந்தேன். காதில் விழுந்தது - “காலங்காத்தால சரியான சாவுக்கிராக்கி...”
எனக்குச் சிரிப்பு வந்தது. அவனும்கூட சாவுக்கிராக்கிதானே?
அடுத்த நாள் காலை... நான்கு மணிக்கே எழுந்து வீட்டுக்குக் கீழே இருந்த பூந்தோட்டத்துக்குச் சென்றேன். விதவிதமான மலர்ச்செடிகள்... மலர்ந்திருந்த பூக்களைப் பறித்தேன். மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது. ஆனால், அருகே இருந்த மலர்களில் வண்டுகளும் தேனீக்களும் வட்ட மிட்டுக் கொண்டிருந்தன. கையிலிருந்த பூக்கூடையைப் பார்த்தேன். அதிலும் சில சிறிய ஈக்களும் வண்டுகளும் இருந்ததைக் கண்டேன்... அட்டா! இறைவனின் பூஜைக்கெனப் பறித்த மலர்களையும் பறிக்காத மலர்களையும் இந்த வண்டுகளும் ஈக்களும் எச்சிலாக்கிவிட்டனவே! ஈக்கள் தொடாத மலர்கள் வேண்டுமே என்று ஏங்கினேன்.
மறுநாள் அதே ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டுக் கையில் ஒரு ‘டார்ச்லைட்‘டை எடுத்துக் கொண்டு பூந்தோட்டத்தில் மொட்டுக்கள் நிறைய இருந்த செடி அருகில் நின்றபடி விரிகின்ற மொட்டுக்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒன்று விரிந்தது... பறித்தேன். அடுத்தது... அடுத்தது...
கொஞ்சம் குறைவாக இருந்தாலும் தூய்மையான மலர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அந்தச் சிறிய பூக்கூடையை எடுத்துக்கொண்டு பூஜையறையில் உள்ள தட்டில் மாற்றினேன். விளக்கேற்றினேன்.
விளக்கு சுடர்விட்டு எரிந்தது. அது நெருப்பா..? திரியா? எண்ணெய்? அல்லது மூன்றுமா? எண்ணெய் திரியும் தங்களை அழித்துக்கொள்கின்றன. ஆனால், இந்த நெருப்பு என்ன செய்தது, எண்ணெயும் திரியும் நஷ்டப்பட்டு நெருப்புக்குப் பெயரா? நெருப்புக்குப் புகழ்வர அது எதை இழந்தது, இதுபோல சிந்தனையில் எவ்வளவு நேரம் போனதென்று தெரியாது!
அர்ச்சிக்க மலர்களைக் கையில் எடுத்தேன். அடடா! சிந்தனையில் நேரம் போனதால் அவை உலர்ந்துபோயிருந்தன. மனம் நொந்து போனேன்... பூஜை நின்றது.
பக்தியில் சிறந்த உத்தமர்கள், பெரியோர்கள் சொல்லியது திடீரென்று நினைவில் வந்தது.
“இறைவனை பூஜைசெய்வதற்குச் செடியிலிருந்து மலர்களைப் பிரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உதிர்ந்த மலர்களை எடுத்து உபயோகப்படுத்தினால் போதும்...”
எல்லாவற்றையும் கடந்து இறைவனோடு ஒன்றிப்போன அவர்கள் நிலையில் அது சரியே!
ஆனால், என்னைப் போன்றவர்களுக்கு? தியாகராஜ ஸ்வாமி சப்தஸ்வரங்களையே மலராக அர்ப்பித்தாரே.... அவரைப் போல் நானில்லையே? என்ன செய்வது, ஒரு மின்னல், மனமே ஒரு மலர்தானே. அதையே மானசீகமாக அர்ச்சித்துப் பூஜைசெய்து விட்டால்? ‘ஆகா... அற்புதம்!” என்று என்னை நானே மெச்சிக்கொண்டு கண்ணை மூடி அமர்ந்து மனதை ஒரு மலராக மனத்தால் பாவனை செய்துகொண்டு அதை அர்ச்சிப்பது போல் கற்பனை செய்தேன். உடல் லேசாகியது. மனம் லேசாகியது. ஒரு மென்மையான உணர்வு ஆட்கொள்ளத் தொடங்கியது.
மனதைப் பூவாகப் பாவனை செய்ததை தொடர்ந்து இந்த மலர் உண்டான செடியைப் பற்றி எண்ணம் போக... இந்தச் செடி எப்படி உண்டானது? உடலாகிய இந்தச் செடியை உண்டுபண்ணிய விதை எது? விதை இல்லாத செடியோ, மரமோ எது? முன் செய்த வினை என்ற விதை இல்லாது வேரோ, கிளையோ, இலையோ, மலரோ, காயோ, கனியோ எப்படி வரும்? இந்த மலர் மீண்டும் காயாகுமா? இன்னொரு விதையை உண்டுபண்ணுமே? இந்த மலர் தூய்மையானதா? பிராரப்தம் வேராய், கிளையாய் விரிய.... ஆசைகள் மலராய் மலர... பெயரும் புகழும் வாசமாய் மலர... பெயரும் புகழும் வாசமாய் வீச, காமமெனும் சேற்றில் விழுந்த மலரல்லவா இது! போகம், குரோதம் எனும் ஈக்களும் வண்டுகளும் சுற்றி வரும் மலரல்லவா இது. பூஜைக்கு உகந்த மலரல்லவே இது. இதை எப்படி இறைவனுக்கு அர்ச்சிப்பது என்று எண்ண மலராகிய மனம் உலர்ந்து காய்ந்தது!
இறைவா! உனக்கென்று மனதாகிய மலரைத் தூய்மையாக்கிக் காத்து அர்ச்சித்துப் பூஜித்தவர்கள் எத்தனையோ கோடான கோடி பக்தர்கள் இருந்திருப்பார்கள். அவர்களைப் போல் என்னால் இயலுமா இதை நீ அறிய மாட்டாயா? இந்த மனதைத் தொட்டுத் தூய்மையாக்கி, தோன்றாத பொருளாக்கிப் புனிதமாக்கி நீயே எடுத்துக் கொள். இது காய்ந்து கருகிப் போகுமுன் - இப்போது உன்னைப் பூஜைசெய்ய எந்தப் புனிதமான பொருளும் இல்லாதவனாக இருக்கிறேன். புனிதமான பொருள் நீ மட்டுமே என்றும் உணர்கிறேன்.
(நிறைவுப்பெற்றது)
சந்திப்பு - பொன்ஸீ
(17.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)