
அவர்கள் உருவாக்கிய கோயிலையோ, சிற்பத்தையோ இன்னொருவனுக்கு அவர்கள் செய்துவிடக்கூடாதாம்...
நீரில் எழும் அலைபோல - நிலத்தில் எழும் மலைபோல - கல்லில் எழும்பிய கலை இது . காண்பவரின் கவனத்தைக் கலைக்காது தன்னில் இழுத்துப் பிடித்து நிலைக்கவைக்கிறது . காரணம், அதை உண்டுபண்ணியவன் உருவாக்கிய நேரத்தில் தவமாய் மனதை ஒரு நிலையில் நிறுத்தி அதை வடித்திருப்பான் . பெரும்பாலான சிற்பிகளை அவர்களின் பணி முடிந்தவுடன் மன்னர்கள் கொன்று போட்டிருக்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய கோயிலையோ, சிற்பத்தையோ இன்னொருவனுக்கு அவர்கள் செய்துவிடக்கூடாதாம் .
ஊர்க்கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. மதுரை ராஜகோபுரம் கட்டப் படாமல் மொட்டைக் கோபுரமாக நிற்பதை இன்றும் பார்க்கலாம் . அது கட்டப்பட்டிருந்தால் கோபுரத்தின் உச்சியிலிருந்து அப்போது துறைமுகமாக இருந்த தொண்டி, முசிறியைப் பார்க்கலாமாம்.
அடிக்கல் நாட்டி கீழ்த்தளத்தை நிரப்பி , முதல் தளத்தை ஆரம்பித்து விட்டார் தலைமைச் சிற்பி . அந்த நேரம் நகர்வலம் சென்ற மன்னனைத் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் உரையாடல் ஈர்த்தது . காரணம் , அவர்கள் கோயிலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவன் "இந்தக் கோபுரம் எழும்பாது . மொட்டைக் கோபுரமாகத்தான் நிற்கும்' என்றான். அதிர்ச்சியடைந்த அரசன் குழம்பிப் போய் தலைமைச் சிற்பியை அழைத்து இந்தக் கோபுரம் எழும்பாதாமே..?' என்று கேட்டான்.
'ஏன் அரசே, ஜோதிடர் சொன்னாரா..?
'இல்லை... தெருவில் ஒரு சிறுவன் சொன்னான்!
சிற்பிக்கு அது தன் மகனாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை! அரசவை மந்திரிகளும் சிற்பியின் கீழ் வேலைபார்க்கும் சிற்பிகளும் புடைசூழ கோபுரவாசல் அருகே கூடி, சிறுவனைக் கேட்டார்கள்...' ஏன் இந்தக் கோபுரம் எழும்பாது என்றாய்..?'
'முதல் தளத்தைத் தாங்கி நிற்கும் இந்தக் கல்லில் தேரை இருக்கிறது . சிற்ப சாஸ்திரப்படி , தேரை இருக்கும் கல்லை உபயோகித்தால் கோபுரம் எழும்பாது!'
சிற்பி பதறிப்போய் ' இந்தக் கல்லில் தேரை இருந்தால் , சிற்பத் தொழிலையே விட்டுவிடுகிறேன் ' என்றார் .

சிறுவன் சுண்ணாம்பால் ஓர் இடத்தில் வட்டம் போட , அந்த இடத்தில் உளியை வைத்துக் கல்லைச் சிறிது பெயர்க்க... உள்ளே இருந்த தேரை குதித்து ஓடியது! கூட்டம் சலசலத்தது . சிற்பி வாக்குத் தவறாது தொழிலை விட்டுவிட்டான் . மதுரை ராஜகோபுரம் மொட்டைக் கோபுரமாக நின்றது . கல்லில் பெயர்க்கப்பட்ட இடம் இன்றும் வடுவாக இருப்பதைக் காணலாம் .
ஓர் உயர்ந்த கலைப்படைப்பைக் காணும்போதெல்லாம், அதை உருவாக்கிய நேரத்தில் அந்தக் கலைஞன் என்னென்ன பிரச்னைகளைச் சந்தித் திருப்பானோ..? தலைவலி, வயிற்றுவலி, காய்ச்சல், குடும்பம், அரசியல், 'நோய்நொடிகள், மனக்கவலைகள் என்று என்னென்ன அனுபவித்திருப் பானோ என்று எனக்குத் தோன்றும் .
என் ஆச்சரியம் என்னவென்றால், அவனுக்கு நிகழ்ந்த எதுவும் அவன் படைப்பில் பிரதிபலிக்காமல் இருக்க, மனதை எத்தகைய தவநிலையில் இருத்தி அதை அவன் படைத்திருக்க வேண்டும் என்பதுதான்!
- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா
(20.06.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)