அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 24

Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Ilaiyaraaja ( Vikatan Archives )

நல்ல சிந்தனையாளன் இல்லா நாடு சுடுகாடு...

“முன்பொரு காலத்தில் நான் பதினெட்டு வயது இளைஞனாக இருந்தேன்...” என்று எழுத ஆரம்பித்த கல்கியை நினைக்கிறேன்.

“இளமையெல்லாம் வெறும் கனவு மயம்” என்று எழுதிய கவியரசு கண்ணதாசனை நினைக்கிறேன்.

நல்ல சிந்தனையாளன் இல்லா நாடு சுடுகாடு என்றுதான் சொல்வேன். உரமிக்க சிந்தனையை விதைத்தால் திறமிக்க இளைஞர் சோர்வற்று ஊக்கம் பெறுவர்!

ஜெயகாந்தன் என்ற சிந்தனையாளன் சிந்திய ஒரு கருத்து - “சிந்திக்கிற கருத்துக்கள் மனிதர்களைப் பிளவுபடுத்தி வேற்றுமையை உண்டாக்குமாயின் சிந்தனை இல்லாதிருப்பதே மேல் என்று தோன்றுகிறது...”

Ilaiyaraaja
Ilaiyaraaja
Vikatan Archives

இதை ஒரு எழுத்தாளன் சொல்ல முடியாது. எழுத்தை மீறி உணர்வுமயமாக வாழும் ஒரு சிந்தனையாளன்தான் இதைச் சொல்லமுடியும்.

படைப்புகளில் இருவிதம், ஒன்று, தன்னாலே உண்டாவது. இன்னொன்று வேண்டும் என்றே உருவாக்கப்படுவது. கம்பனின் ராமாயணம் - அரசனின் வேண்டுதலுக்காக உருவாக்கப்பட்டது. வேண்டும் என்றே உருவாக்கப்பட்டிருந்தாலும் - கம்பனின் இயல்பான கற்பனைத்திறத்தாலும் இணையில்லாக் கல்வியாலும் ஆயிரமாண்டுகளையும் அது கடந்து நிற்கிறது.

பாரதியும் வள்ளுவனும் ஔவையும் இளங்கோவும் யாரோ எழுதச்சொல்லி எழுதவில்லை. ஏதோ ஓர் உந்துதல் அவர்களை எழுத வைத்தது. இன்றைக்குப் பாடல், இசை, கதை என்று ஒரு படைப்பு எதற்கு நிகழ்கிறது? என்று பத்திரிகைக்கு அல்லது சினிமா, டி.வி.க்கு இவை எல்லாவற்றிலும் விற்பனை என்ற ஒன்று மறைந்திருப்பதால் வேண்டும் என்றே - அதற்குக் கற்பனை செய்ய வேண்டியிதிருக்கிறது. இந்த நிர்ப்பந்தத்தில் எழும் படைப்புகளின் தரம் பிரிக்கப்பட்டால் அதிக விற்பனையானது. விற்பனையாகாதது என்றுதான் பிரிக்க வேண்டும். சிறந்த கற்பனை - சிறந்த படைப்பாளி என்று பிரிப்பது, தரத்தின் அடிப்படையிலா - விற்பனையின் அடிப்படையிலா?

ஒரு மயிலின் ஆட்டத்தை யாராலும் வேண்டுமென்றே நிகழ்த்த முடியாது. ஒரு அருவியின் துள்ளலை யாராலும் வேண்டுமென்றே நிகழ்த்த முடியாது. சிந்தனையாளன் - மயில் போல - குயில் போல - குருவி போல - அருவி போல இயற்கையாக வாழ்பவன்! அவன் - யாரைப் போலவும் வாழமாட்டான். யாராகவும் ஆகமாட்டான். அவன் அவனாகவே இருப்பான்!

அவனை மக்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.

- பார்வை தொடரும்

(03.10.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)