அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 25

Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Ilaiyaraaja ( Vikatan Archives )

அம்மாவுக்கு ஈடு எதுவுமே கிடையாது...

ம்மா என்பது உயிர்களுக்குக் கிடைத்த அற்புதம். உன் தாய், என் தாய் என்று நாமெல்லாம் ஒவ்வோர் பிறப்பிலும் வேறு வேறு தாயை உடையவர்களாக இருக்கிறோம்.

ஆனால், உனக்கு.. எனக்கு... உலகில் தோன்றிய எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பிறப்பிலும் ஒரே தாய் - பராசக்திதான்! மனித வடிவில் அம்மாவாகத் தோன்றுகிறாள்.

‘தனியாகச் சென்னை வந்த நாங்கள், சாப்பாட்டுக்கு என்ன செய்வோமோ...?’ என்று பிள்ளைகளுக்குச் சமைத்துப்போட வந்து விட்டார்கள் என் தாய். தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் ஒரு வாடகை வீடு. ‘வயதான காலத்தில் எங்களுக்கு ஆக்கிப்போட என்று வந்து, இப்படிக் கஷ்டப்படுகிறார்களே...’ என்று வருத்தமாக இருக்கும்.

Ilaiyaraaja
Ilaiyaraaja
Vikatan Archives

இசைநிகழ்ச்சிக்குப் போய்வந்து ஒரு இருநூறு ரூபாய் அம்மாவின் கையில் கொடுத்திருந்தோம். வெற்றிலைச் சுருக்குப் பையில் வைத்திருந்த பணத்தைத் தேனாம்பேட்டை காய்கறி மார்க்கெட்டில் யாரோ அடித்து விட்டார்கள். அன்று அவர்கள் பட்டபாடு...?! வெளியே சொல்லாமல் சமாளித்துப் பார்த்து, முடியாமல் புலம்பிவிட்டார்கள். ‘போனால் போகிறது. விடுங்கம்மா’ என்றால்... ஊஹும்! அன்றைக்குச் சாம்பார், ரசம் என ஏதுமில்லாமல் வெறும் வெங்காயம், பச்சைமிளகாய், புளியை வைத்துச் சாதத்துக்கு ஊற்றிக்கொள்ள ஒன்று செய்துகொடுத்தார்கள். இன்றுவரை அப்படி ருசியாகச் சாப்பிட்டு நான் பசியாறியதாக எனக்கு நினைவில்லை.

வீட்டுக்கு வரும் நண்பர்கள், அன்றைக்குத் தான் அம்மாவுக்கு அறிமுகமானவர்கள் என்றாலும்கூடி, ஏற்கெனவே நன்றாகத் தெரிந்தவர்கள் போல ‘வாப்பா, உட்காருப்பா... சாப்பிடுப்பா‘ என்ற உபசரிப்பது அவர்களின் தனிச்சிறப்பு. முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன். எங்கள் வீட்டுக்கு வந்தார். அம்மாவைப் பார்த்து, ‘அம்மா... என்னைத் தெரியுதா...?’ என்று கேட்டார். ‘அடப் போப்பா... எம் மூத்த புள்ளைய எனக்குத் தெரியாத...?’ என்று சொல்லிவிட்டார்கள்.

தீபாவளி ரிலீஸுக்காக நான்கைந்து படங்களின் பின்னணி இசை வேலையை நான் பாக்கியில்லாமல் முடித்துவிட்ட பின்தான், தீபாவளி அமாவாசையன்று அம்மா உடலை விட்டார்கள். அம்மாவின் சமாதி இருக்கும் இடத்துக்குத் தென்மேற்கே இருக்கும் குண்டு கருப்பண்ணசாமி என்ற கிராமத்துத் தெய்வம் தான், அம்மா பிறப்பதற்கு வரம் கொடுத்தது என்று வயதான பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

அம்மாவுக்கு ஈடு எதுவுமே இல்லை. அம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், கடைசிவரை என்னுடனே இருந்தார்கள் என்பது என் பாக்கியம்.

- பார்வை தொடரும்

(10.10. 1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)