அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 15

Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Ilaiyaraaja ( Vikatan Archives )

கங்கையில் ஒரு ஆனந்த குளியல்...

காசியில் கைக்கிள் ரிக் ஷாவில் ஏறிக் கங்கைப் பாலத்திலிருந்து கோயிலுக்குப் போவது மிகவும் உற்சாகமான விஷயம். என்னுடன் என் மகன் கார்த்திக்கும் இசையமைப்பாளர் உத்தம்சிங்கும் இன்னொரு போட்டோகிராபரும் இருந்தனர். சில சமயம் உத்தம்சிங்க, ரிக் ஷா ஓட்டுபவரை நடந்துவரச் சொல்லிவிட்டு, எங்களை ரிக் ஷாவில் அமர்த்தி பெடலை மிதித்துக் கோயிலுக்குப் பிரியும் சாலைவரை கொண்டு செல்வார்.

ஒருவருக்கும் நம்மைப் பற்றித் தெரியாத இடத்தில், இஷ்டம்போல ஊர்சுற்றிச் சுதந்திரமாகத் திரிவதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்.

கங்கையில் இறங்கிக் குளிக்கப் போகும் சமயத்தில், ஒரு டூரிஸ்ட் கைடு என்னை அடையாளம் கண்டு கொண்டு, “ஹரோ சார்... மீரு இளையராஜாகாருகாதா...?” என்றான். அவனைச் சுற்றி ஆந்திர தேசமே இருந்தது. அந்தத் தெலுங்கு ஜனங்கள் என்னை நெருங்கிக் கேள்வி கேட்பதும் கையெழுத்துக் கேட்பதுமாகச் சுற்றி வளைக்க, உத்தம்சிங் ஒருமாதிரியாகக் கூட்டத்தைச் சமாளித்துக் கையெழுத்துப் போடவைத்தார். அங்கே எப்படிக் கங்கா ஸ்நானம் செய்வது...? பண்டிதர் வேறு காத்திருந்தார்.

Ilaiyaraaja
Ilaiyaraaja
Vikatan Archives

நாங்கள் அக்கரைக்குச் சென்றோம். யாரும் இல்லாத இடத்தில், உடைகளைக் கழற்றி விட்டுப் பண்டிதர் சொன்ன மந்திரத்தைச் சொல்லி சங்கல்பம் செய்து விட்டுக் கங்கையில் இறங்கினோம். தண்ணீர் ஒரே ஐஸ்... ஆஹா!

படகுக்காரன் எச்சரித்திருந்தான்: கங்கையில் திடீரென்று வெள்ளமும் வரும்.. முதலையும் வரும் என்று! இதையெல்லாம் பார்த்தால், ஆனந்தமான குளியல் எப்படி வரும்...? வெற்றுடம்போடு நானும் உத்தம் சிங்கும் உற்சாகமாகக் கங்கையில் முழுகி எழுந்து மல்யுத்தம் போட்டோம்.

கார்த்திக் நெஞ்சளவு நீரில் இறங்கிக் கை, காலை ஓங்கியடித்து விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பத்தடி ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டான். அவனுக்கு முகம் வெளிறிப்போனது. அவன் ‘ஹெல்ப், ஹெல்ப்’ என்று கத்தியதைக் கேட்டுப் பரபரத்துப் பாய்ந்த உத்தம்சிங், கார்த்திக்கை இழுத்துக் காப்பாற்றிவிட்டார்! எல்லோரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

உத்தம்சிங் அப்போதுதான் சொன்னார், தனக்கு நீச்சல் தெரியாது என்று. கார்த்திக்கைப் பார்த்து, “உனக்கு நீச்சல் தெரியுமே கார்த்திக்...” என்றேன். “அந்த விஷயமே எனக்கு மறந்துபோய்விட்டது டாடி‘ இப்போதுதான் எனக்கு நீந்தத் தெரியும் என்பது ஞாபகத்துக்கே வருகிறது...’‘ என்றான்.

ஒரு விஷயம் நம் நினைவில் இருப்பதும் நினைவில் இல்லாமல் போவதும்கூட நம் கையில் இல்லை. நம்மை எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கிறது ஏதோ ஒரு சக்தி அந்தச் சக்தியின்றி மனிதன் எதையும் செய்யவும் சாதிக்கவும் முடியாது. ஞாபகம் இல்லையென்றால், உனக்கு என்ன தெரிந்து என்ன பயன்...?

ஞாபசக்தியே கல்வி!

- பார்வை தொடரும்.

(01.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)