அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 14

Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Ilaiyaraaja ( Vikatan Archives )

வாக்குத் தவறிட்டான் இந்த சிவாஜினு பேர் வாங்கணுமா...?

சில வருடங்களுக்கு முன் சிங்கப்பூரில் ஒரு இசை நிகழ்ச்சியும் அதில் விசேஷமாக அண்ணன் சிவாஜி அவர்களுக்குப் பாராட்டு நிகழ்ச்சியும் ஏற்பாடானது.

நானும் தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தோம். சிவாஜியின் உடல்நிலை சிறிது சரியில்லாமல் இருந்தும் பிடிவாதமாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

“அண்ணே, உடம்பு சரியில்லையென்றால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் கூட்டத்தைச் சமாளித்துக் கொள்கிறோம்” என்றேன்.

உடனே, “ ஊ ஹும், சிவாஜி வாக்குக் குடுத்துட்டாண்டா! வாக்குத் தவறிட்டான் இந்த சிவாஜினு பேர் வாங்கணுமா...? உயிரே போனாலும் மேடையில் போகட்டுண்டா!” என்றார்.

Ilaiyaraaja
Ilaiyaraaja
Vikatan Archives

மேடையில் நட்சத்திரங்களின் தோற்றமும் பாட்டுகளும் சூடுபிடித்துக் கொண்டிருந்தன. நான் பாடி முடித்த சிறிது நேரம் கழித்து அண்ணன் சிவாஜி, என்னை அவசரமாக அழைத்தார். “ராஜா... எனக்கு ஏதோ அன் ஈஸியாக இருக்குடா...” என்றார். உடனே அருகில் இருந்த டாக்டர்களை அழைக்க எழுந்தேன். என்னைப் பிடித்து நிறுத்தி, “வேண்டாம்...” என்றார்.

மேடைக்கு மேலே இருந்த ஸ்கிரீனில் சிவாஜி நடித்த காட்சிகளைத் தொகுத்துப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்தச் சமயம் அண்ணன் சிவாஜி, என் தோள்மீது சாய்ந்து. உணர்விழந்து அப்படியே முழுவதுமாக என் மேலேயே விழுந்துவிட்டார்.

நிகழ்ச்சி நடத்துபவரை உடனே அழைத்து, “அண்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்...” என்று பரபரத்தேன். ஆனால், நிகழ்ச்சி நடத்தியவர் நடந்துகொண்ட முறை எனக்குக் கோபத்தை ஊட்டியது. என்னுடைய பரபரப்புக்கு நேரெதிராகச் சாவகாசமாகப் பேசினார். “இன்னும் நாற்பத்தைந்து நிமிடங்களில் மேடையில் அவருக்கச் செய்யவேண்டிய மரியாதையைச் செய்துவிடலாம். குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்...” என்று பொறுப்பில்லாமல் பேசினார்.

“இதுபோல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால், சிவாஜியின் முக்கியம் தெரியாத மூடனாக இருக்கிறானே இவன்..?!” என்று ஆத்திரமாக வந்தது.

ஏதும் அறியாத ரசிகர்கள், ஸ்கிரீனில் சிவாஜி நடித்த படக் காட்சியில் லயித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ‘கிஸ்தி, திரை, வரி, வட்டி‘ என்ற கட்ட பொம்மனின் வசனம் கேட்க... அண்ணனின் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வந்தது. அப்படியே எழுந்து மிகவும் தெம்பாக உட்கார்ந்துகொண்டார்! ‘எங்களோடு வயலுக்கு வந்தாயா..? ஏற்றம் இறைத்தாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கஞ்சிக் கலயம் சுமந்தாயா அல்லது கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்கள் அரைத்துப் பணிபுரிந்தாயா? யாரைக் கேட்கிறாய் வரி...!” திரையில் கட்டபொம்மன் முழங்க முழங்க, அதை முதன்முதலாகக் காணும் ரசிகன், எப்படி அதனுடன் கலந்து அதே உணர்வெய்தினானோ, அதேபோல கட்டபொம்மன், சிவாஜியின் உடம்புக்குள் புகுந்து, அவரைக் கட்டபொம்மனாக மாற்றி, சிவாஜியாக எழுப்பி உட்கார வைத்துவிட்டு, வெளியே வந்துவிட்டான். கூட்டம் ஓவென்று கத்திக் கரகோஷம் எழுப்ப, என் கண்களில் நீர் வழிந்தது!

வழிந்த கண்ணீர் சிவாஜிக்கா..? சிவாஜியைத் திருப்பித் தந்த கட்டபொம்மனுக்கா..?

- பார்வை தொடரும்....

- பொன்.சந்திரமோகன்/இளையராஜா

(25.07.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)