அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 13

Ilaiyaraaja
பிரீமியம் ஸ்டோரி
News
Ilaiyaraaja ( Vikatan Archives )

எங்கள் நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசிகர்கள் எழுப்பிய சத்தம் மதுரை மீனாட்சி கோயிலிலும் எதிரொலித்தது.

துரையில் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுடன் கச்சேரிகளுக்குப் போய்க்கொண்டிருந்த காலம்... பாஸ்கர், நான், அமர் மூவரும் அரை டிராயர்கள். பகலெல்லாம் எங்களுக்கு மீனாட்சி கோயிலிலும் கழியும். மாலை ஆறு மணிக்குக் கச்சேரிக்குக் கிளம்ப வேண்டும்.

ப.ஜீவானந்தம், மணலி கந்தசாமி போன்ற அரசியல் தலைவர்களின் பேச்சு மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். ஜெயகாந்தன் பேசினால் அவ்வளவுதான்... ஒரு சிங்கம் மேடையில் கர்ஜிக்கும்! அந்தக் கர்ஜனை அங்கிருக்கும் எந்தக் கோழையையும் சிங்கமாக்கிவிடும்.

Ilaiyaraaja
Ilaiyaraaja
Vikatan Archives

அப்போது காமராஜரின் ஆட்சி 1962 தேல்தல் நேரம். முச்சந்தியில் எங்கள் இசை நிகழ்ச்சி. மூன்று பக்கமும் ஜனங்கள். எள் போட்டால் எண்ணெயாகும் கூட்டம். ராஜாஜி ஆட்சியின்போது தியாகி சிவராமன் குண்டடிபட்ட கதையை அண்ணன் பாவலர் பாட, பாட்டோடு மெய்மறந்து கலந்து ஒன்றிப்போயிருந்தது கூட்டம்.

திடீரென்று சில போலீஸ் வேன்கள் வந்த நின்றன. வேனிலிருந்து ரிசர்வ் போலீஸ் துப்பாக்கி சகிதம் இறங்கியது. எஸ்.ஐ. ஒருவர் நேரே மேடைக்கு வந்து பாவலரைப் பார்த்து, “பாட்டை நிறுத்த வேண்டும்!” என்றார்.

“என்ன காரணத்துக்காக..?” என்று அண்ணன் கேட்டார்.

“மைக் வைத்துக்கொள் அனுமதி வாங்கவில்லை?” என்றார் எஸ்.ஐ.

“ஓ.. அவ்வளவுதானா...” என்றவர் சிறிதும் யோசிக்காமல் அருகில் இருந்தவனை அழைத்து மைக்கை எடுத்துக்கொண்டு போகச்சொல்லிவிட்டு “ம்ம்... வாசிங்கடா..” என்று போலீஸாரை முறைத்துப் பார்த்துக்கொண்டே பாட ஆரம்பித்துவிட்டார். கூடவே வாசித்துக்கொண்டு நாங்களும் பாடினோம். கூட்டம் கை தட்ட வானம் பிளந்தது. எஸ்.ஐ-க்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. மேலிடத்தில் கேட்காமல் அந்த நேரத்தில் அவரால் எந்த முடிவும் எடுக்கமுடியும் பின்வாங்கினார்.

அன்று எங்களுக்கு இன்னொரு இடத்திலும் இசை நிகழ்ச்சி இருந்தது. முதல் கச்சேரி கேட்ட ஜனங்களில் பாதிபேர் நாங்கள் சென்ற குதிரை வண்டியின் பின்னாலேயே ஓடி வந்து இரண்டாவது கச்சேரியையும் கேட்டார்கள்.

அங்கே அண்ணன் பேசினார்... “உங்கள் துப்பாக்கிக்குண்டு வெறும் சதையையும் எலும்பையும்தான் துளைக்கும். ஆனால், எங்க பாடலோ மனதைத் துளைத்து உயிரை ஊடுருவிக் கலந்துவிடும்!”

நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் எழுப்பிய சத்தம் மதுரை மீனாட்சி கோயிலிலும் எதிரொலித்தது.

- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா

(18.07.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)