
நான் சந்தித்த இந்தோனேஷிய நண்பர்...
வெளிநாடுகளில் பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவை வணங்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நமது நாட்டில் முன்லீம் மதத்தினர் தொழக்கூடிய தர்காவுக்குச் செல்லும் இந்துக் குடும்பத்தினரும் இருக்கிறார்கள். அதேபோல் வேளாங்கண்ணி மாதாவை வணங்கும் பழக்கம் எல்லா மதத்தினருக்கும் உண்டு. மக்கள் வணங்கும் தெய்வங்கள் எல்லாமே வேண்டுதலை நிறைவேற்றி அவர்களின் நம்பிக்கையை மேன்மேலும் வளர்க்கின்றன. தன்னை வணங்காமல் இருப்பவர்களுக்குக்கூட அருள் செய்யும் தெய்வங்களம் இருக்கின்றன.
சிங்கப்பூரில் நான் சந்தித்த இந்தோனேஷிய நண்பர் ஒரு செய்தி சொன்னார்.
இந்தோனேஷியா சில ஆண்டுகளாக பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவிக்கிறது. ‘வீழ்ச்சியிலிருந்து மீள்வது எப்படி?’ என்று யோசித்துக்கொண்டே தூங்கிய இந்தோனேஷிய அதிபரின் கனவில் விநாயகர் தோன்றினாராம். தோன்றியதோடு மட்டுமன்றி ‘உன்னுடைய நாட்டின் பொருதாரத்தை உயர்த்தி முன்னேற்றப்பாதைக்குக் கொண்டுவருகிறேன். அதற்கு நீ செய்ய வேண்டியது என்னவென்றால்... உங்கள் நாட்டின் ரூபாய் நோட்டுகளில் என்னுடைய உருவத்தைப் பதித்து வெளியிட வேண்டும். அதன்பின் ஆறே மாதங்களில் பொருளாதார நிலை சீரடைந்துவிடும்!‘ என்று சொல்லி மறைந்துவிட்டாராம்.
அதிபர் சுகார்த்தோ விநாயகரின் உருவத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்.
இந்தோனேஷியா ஒரு முஸ்லிம் நாடு. ‘ஒரு முஸ்லீம் நாட்டு கரன்ஸியில் இந்துக் கடவுளாகிய விநாயகரை எப்படி அச்சிட்டு வெளியிடலாம்?’

என்று அண்டை முஸ்லிம் நாடுகளம் மதத் தலைவர்களும் கண்டித்துக் கேள்வி மேல் கேள்வி கேட்க... பதில் சொல்ல இயலாமல் திண்டாடிய அதிபர் அவர்களுடைய கட்டளைக்குப் பணிந்து அந்த ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்திலிருந்து நிறுத்திவிட்டார்.
பாவம் கடவுள்கள்... மதங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள்.
- பார்வை தொடரும்
- பொன்.சந்திரமோகன் / இளையராஜா
(08.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)