
பெற்ற தாயைக் கடைசிவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளவேண்டியது பிள்ளைகளின் கடமை அல்லவா?
வயதான பெரியவர்கள் வேலை செய்வதைப் பார்த்தால் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். என்ன செய்வது? தெருவில் எதையாவது விற்றோ, எங்காவது கூலிவேலை செய்தோ தான் பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும் தாய்மார்கள் தான் நம் நாட்டில் அதிகம்.
அதே நேரத்தில் பெற்ற தாயைக் கடைசிவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளவேண்டியது பிள்ளைகளின் கடமை அல்லவா?
எங்கள் தாய் எங்களுக்காகக் கஷ்டப்படுவதைக் காணச் சகியாமல் தான் நானும் அண்ணன் பாஸ்கரும் எப்படியாவது ஒரு தொழில் செய்து அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஊரை விட்டுக் கிளம்பினோம்.
மிகவும் நெருங்கிய நண்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என்று நம்பினோம். ‘மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள்?’ என்று அடையாளம் கண்டுகொண்டது அந்த நேரத்தில் தான்.
மதுரையில் அப்போது பிரபலமாக இருந்த பெயிண்டர் ஒருவர் பாஸ்கருக்கு நண்பர். அவருக்கு உதவியாக வேலையில் சேரலாம் என்று வேலை கேட்டோம். ஊஹும் - அவரும் மனிதர்தானே!
பாவலர் அண்ணனுடன் கச்சேரிகள் செய்து வந்த நேரத்தில் எங்களுடன் எப்போதும் ஓட்டலில் உணவு அருந்திய நண்பர்களிடமும் சென்றோம்... அவர்களா? ஊஹும் - அவர்களும் மனிதர்கள்தானே!
என்னுடைய அனுபவத்தில் நான் ஒருவருக்கு உதவி செய்தால், அவர் வளர்ந்து நன்றாக வந்தபின் என்னைத் திரும்பியும் பார்க்கமாட்டார்! அப்படியே பார்த்தாலும், “என்ன... சௌக்கியமா?” என்று கேட்பார் பாருங்களேன்... அந்தத் தோரணையே தோரணைதான்.

நான் நினைப்பேன், நன்றி கொன்றவன் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறான். ‘செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை’ என்று வள்ளுவர் எப்படி எழுதினார்? திருக்குறள் பொய்யா?
சிந்தித்தபோது புதுவிளக்கம் கிடைத்தது.
‘எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் - உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு’
நன்றி என்பதே பிறர்க்குச் செய்வது தான். ஆகையால் எந்நன்றியும் - செய்ந்நன்றியும் வேறு வேறு பொருள் உடையது. ‘மகற்கு’ என்ற சொல்லைக் கூட ‘மகனுக்கு’ என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
‘தன்னை நல்ல மகனாகச் செய்த தாய்க்கு நன்றி செய்யாத மகனுக்குத் தான் உய்வில்லை!’
குறளுக்கு வேறு அர்த்தம் கற்பிக்க இதை நான் சொல்லவில்லை. என் அறிவு அவ்வளவுதான்!
- பார்வை தொடரும்....
- பொன். சந்திரமோகன்/ இளையராஜா
(15.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)