
ரசனை இல்லாத டைரக்டரும் இசையமைப்பாளரும், சேர்ந்தால் வெறும் வறட்டு விவாதம்தான்...
ஒரு திரைப்படத்தில் என்ன உணர்வை ரசிகர்கள் அடைய வேண்டும் என டைரக்டர் நினைக்கிறோரோ அதே உணர்வை இசை அமைப்பாளர் புரிந்துகொண்டு சரியாகப் பணியாற்றினால்தான் ரசிகர்களை இழுக்கமுடியும்.
பின்னணி இசை என்பது அவ்வளவு முக்கியமானது. இங்கே நீங்கள் காணும் புகைப்படத்தினால் ஏதாவது ஒரு உணர்வு உங்களுக்குத் தோன்றலாம். அதைப்பற்றி நான் நினைத்ததை அந்தப் புகைப்படத்தில் ஏற்றி எழுதி வேறோர் எண்ணம் தோன்றும்படி செய்துவிடலாம்.
இதே காட்சி திரைப்படத்தில் வந்தால் பின்னணி இசை மூலமாக எல்லாவற்றுக்கும் மேலான உணர்வுக்கு உங்களை அழைத்துப் போகமுடியும்.
ஒரு பச்சைக்குழந்தை அழுதுகொண்டு படுத்திருக்கிறது. அருகில் சிறுமி இருக்கிறாள். கிழவர் ஒருவரும் படுத்திருக்கிறார்.
ஒரே ஒரு சோக இசைக்கருவி மூலம் சிறுமியின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைச் சொல்லலாம். அல்லது தாயின் தாலாட்டுக் குரலைப் பின்னணில் இசைத்தால், ‘தாயின் பிரிவைத் தாங்காத சோகத்தில் அந்த அநாதைக் குழந்தைகள் வாடுகின்றனவே!’ எனவே நினைக்கவைக்கலாம், மேலும் ஒரு அழுத்தமான இசையைக் கொடுப்பதன் மூலம், ‘இருந்த ஒரே ஒரு சொந்தமான அந்தக் கிழவரும் இறந்து போய்விட்டாதே!’ என்றும் ரசிகர்களை வருந்தவைக்கலாம். இசையே இல்லாமல் வெறும் பச்சைக்குழந்தை அழும் ஓசையை மட்டும் கொடுத்துவிட்டு, ‘ஐயோ!’ குழந்தை பசித்து அழுவதுகூடத் தெரியாமல் அந்தச் சிறுமி வேறு ஏதோ ஞாபகத்தில் உட்கார்ந்திருக்கிறாளே! என்று பதறவைக்கலாம்.

ரசனை இல்லாத டைரக்டரும் இசையமைப்பாளரும், சேர்ந்தால் வெறும் வறட்டு விவாதங்களை மட்டு காரசாரமாக வாதாடிவிட்டு இந்தக் காட்சி இசையின்றி ஏற்படுத்தும் அழுத்தத்தைக் கூட ஏற்படுத்தாமல் கெடுத்தும் விடலாம்!
எப்படி என்று கேட்கிறீர்களா! தெருவில் ஒரு கடையில் ஒரு எம்.ஜி.ஆர். பாட்டுப் பின்னணியில் ஒலித்தால். ‘சரி... சரி... இது தினமும் தெருவில் நடக்கிற விஷயம்தானே... வேறு ஒரு காட்சி வரப்போகிறதோ’ என்று நினைக்கவைத்து, உப்புச்சப்பில்லாமல் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் கெடுத்துவிடும்.
நான் நினைப்பதும் நீ நினைப்பதும் ஒரே புள்ளியில் சேர்ந்தால்தானே சிறப்பு!
- பார்வை தொடரும்
- பொன். சந்திரமோகன் / இளையராஜா
(22.08.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)