அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

ராஜாவின் பார்வையில் - இளையராஜா - 4

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 4
பிரீமியம் ஸ்டோரி
News
Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 4 ( Vikatan Archives )

உன் வாழ்க்கைக்கு நீயே தான் உழைப்பாளி...

ச்சியில் உழைத்தாலும் வாழ்க்கை என்றும் தரையிலே வானம் வரை வளர்ந்தாலும் மரத்தின் வேர் மண்ணிலே !

என் வாழ்வெல்லாம் உழைப்பே ! ஒன்பதாம் வகுப்பில் சேரப் பணம் கட்ட முடியவில்லை . ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்தேன் . அதில் கிடைத்த பணத்தைக் கட்டி பள்ளியில் சேர்ந்ததும் அண்ணன் பாவலருடன் பாட்டுக்கச்சேரிக்கும் செல்ல வேண்டியதாயிற்று . பள்ளிப் படிப்பு அம்பேல் !

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 4
Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 4
Vikatan Archives

வேலையின்றி வீட்டிலிருந்த சமயம் , பஞ்சாயத்து போர்டில் வீடுகளுக்கு நம்பர் எழுதும் வேலை கிடைத்தது . அண்ணன் பாஸ்கரும் நானும் பெயிண்ட் டப்பாக்கள் , பிரஷ்கள் சகிதம் வேலையில் இறங்கி விட்டோம் .

எங்கள் பஞ்சாயத்திலுள்ள ஏழு கிராமங்களிலும் வீட்டுக்கதவுகளில் நம்பர்கள் எழுதவேண்டும் . மிகவும் உற்சாகமாகத்தான் இருந்தது . பாஸ்க ரின் கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும் . நான் அவருக்கு உதவி .

முதலில் கதவில் போடவேண்டி யது வெள்ளை பெயிண்டில் ஒரு வட்டம் . வட்டத்தைச் சுற்றி கறுப்பு பார்டர் . பிறகு அந்த வீட்டின் எண் கொஞ்ச வீடுகளில் எழுதிப் பழக்கம் ஆவதற்குள் சட்டையிலும் ட்ரௌசரிலும் கறுப்பும் வெள்ளையுமாக பெயிண்ட் சிதறியிருக்கும் .

கையில் டப்பாக்கள் , தலையில் குற்றாலத் துண்டு , உடம்பிலும் உடையிலும் பட்ட கறுப்பு வெள்ளை பெயிண்ட் குறிகள் . . . . . எங்களைக் கண்டால் வீதியில் நாய்களுக்குத் தான் ஒரே குஷி ! அவை குரைப்பதைக் கேட்டால் வயிறெல்லாம் கலங்கும் ! அடிக்கடி மாட்டிக்கொள்வோம் . ஓடவும் முடியாது . மேலே விழுந்து பிறாண்டி விடுமோ என்று நடுக்கம் வேறு . இருந்தாலும் " ஏய் . . ஏய் ! ச்சீ . . . போ ! " என்ற சத்தங்கள் வாயிலிருந்து வெளி வரும் . அது ஒரு மாதிரியான சமாளிப்பு .

எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் நாய் இருக்கிறதா என்று நோட்டம் விடுவோம் . இருந்தாலும் கையில் பெயிண்ட் டப்பாவைக் கண்டால் இந்த நாய்களுக்கு ஏன் ஆவதில்லை ? ' என்று யோசிப்போம் .

நரிக்குறவர்கள் டால்டா டின்னைக் கையால் தட்டிக்கொண்டு அவற்றை விரட்டு வதும் ஆடிப்பாடுவதும் நினைவுக்கு வரும் .

Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 4
Rajavin Parvaiyil - Ilaiyaraaja - 4
Vikatan Archives

பெரும்பாலும் குடிசை வீடுகளே அதிகம் . அதில் முக்கால்வாசி வீடுகள் பூட்டியிருக்கும் . வீட்டில் இருக்கும் எல்லோரும் வேலைக்குப் போய்விடுவார்கள் . சில வீடுகளில் பெரியவர்கள் இருந்தால் கடுப்படிப்பார்கள் . எழுதவே விடமாட்டார்கள் . வீட்டுக்கதவில் கோடு போட்டால் தரித்திரம் பிடிக்கும் . . . வீட்டுக்கு ஆகாது என்று தடுப்பார்கள் . ஊர்ப்பக்கம் போனால் இதெல்லாம் நினைவுக்கு வரும் . இன்னும் அந்த வீடுகள் அப்படியேதான் இருக்கின்றன . ஐம்பது ஆண்டுச் சுதந்திரம் எந்த மாற்றத்தையும் இன்னும் அங்கு ஏற்படுத்தவில்லை . ஜார்மன்னர் ஒழிந்தால் என்ன ? வெள்ளையன் வெளியே போனால் என்ன ? அரசாங்கம் வந்தாலென்ன ? கவிழ்ந்தாலென்ன ? ஏழைகளின் வாழ்வு எவன் கையிலுமில்லை !

உன் வாழ்க்கைக்கு நீயேதான் உழைத்தாக வேண்டும் .

தொழிலாளத் தோழனே ! நமக்காக உண்மையோடு உழைக்க நம்மைவிட்டால் யாருமில்லை !

(09.05.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)