
கனவு காணுங்கள்.. உங்கள் வாழ்க்கை அழகாகும்...
‘தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?‘ என்ற சித்தர் பாடலை நினைவுபடுத்துகிறான் இந்த ஆங்கிலக் காளை!
வெயிலையே காணாத ஊயிரி வெயிலைக் கண்டால் அத்தனை மகிழ்ச்சி!
இப்போது விஞ்ஞானம் போகிற போக்கில், இவன் வெட்டவெளியில் வெயிலில் படுத்து அனுபவிக்கும் சுகத்தை - கம்ப்யூட்டர் சிப் ஒன்றை மூளையில் பொருத்தி, அப்படியே இம்மியளவும் குறையாமல் அதே சுகத்தை செயற்கையாக அனுபவிக்க முடியுமாம்.
இன்று Virtual reality என்ற பெயரில் கற்பனை உலகில் தன்னை இழக்கிற காலகட்டம்.
கனவிலே நீ எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கும். இங்கே நீ எதிர்பார்க்கிற கனவுகளையே நிகழ்த்திக்கொள்கிறாய். இரண்டுமே உண்மையில்லை!
கனவு காணும்போது கனவுலகமே உண்மையெனத் தோன்றுவதுபோல்தான் Virtual reality-ல் நீ நுழையும்போது அது உண்மையாகத் தோன்றுகிறது.
கனவிலிருந்து விழித்தபின் கனவை நீ அறிவாய். இதிலிருந்து வெளியேறினாலும், இது கனவென்ற அறியமாட்டாய்!
கற்பனை எல்லையற்று விரிந்தாலும் ஒரு கரையை உடையதாகவே இருக்கிறது - அது உண்மையெனும் கரை!
கற்பனை, உண்மையைச் சந்திக்கும்போது செயலிழந்து போய்விடும்!
கற்பனை எங்காவது ஓய்வெடுக்கும்!
உண்மைக்குக் களைப்பும் இல்லை... ஓய்வும் இல்லை!
உன் கற்பனை எந்த இடத்துக்குள் நுழைந்தாலும் - அதற்கு முன்னே உண்மை வெகு வேகமாகப் போய்விடுகிறது.
பொய்யான கற்பனை இத்தனை இன்பமாயிருந்தால் உண்மை எத்தனை இன்பமாயிருக்க வேண்டும்!
கற்பனை பொய்யானதால் - கற்பனையால் நீ அடையும் இன்பமும் பொய்யே!
கற்பனையைப் பற்றிய உண்மையை நீ அறியவில்லை எனினும் உண்மையைப் பற்றிய உண்மையை இந்த யுகத்திலாவது அறிந்துகொள்!
- பார்வை தொடரும்...
(26.09.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)