
நான் அமர்ந்து தியானத்துள் ஆழ்ந்த அமைதியான இடம்...
சில மாதங்களுக்கு முன் குடும்பத்தோடு காசி யாத்திரை சென்று வந்தேன்.
காசி - காண்பதற்குப் புழுதியோடும் குப்பைக் கூளம் , பீடா வெற்றிலை எச்சில் நிறைந்த தெருக்களாக இருந்தாலும் மனதில் இந்நகரம் ஏற்படுத்தும் உணர்வு உலகில் வேறு எந்தப் பொருளாலும் கொடுக்க இயலாது . இது தனிப்பட்ட என்னுடைய உணர்வு மட்டுமல்ல! அங்கு சென்று அனுபவப்பட்ட எந்த நாட்டு மனிதனுக்கும் ஏற்படும் உணர்வு!
அதற்குக் காரணம், பல அவதாரப் புருஷர்களைக் கவர்ந்திழுத்த காசி விஸ்வநாதரும் புனிதமான கங்கைக் கரையும்தான்.
ஏகநாதர், பக்தராம தாஸர், துக்காராம், கபீர்தாஸ், புத்தர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் முதற்கொண்டு ஜெ . கிருஷ்ணமூர்த்தி வரை மனம் விரும்பி வலம் வந்த இடம் காசி முதன்முறையாக 1988 - ல் காசி சென்றபோது ஜே . கே -யின் விருந்தினர் மாளிகையில் தான் தங்கியிருந்தேன். மாலையில் கங்கைக் கரையை ஒட்டியிருந்த தோட்டங்களைச் சுற்றிப்பார்ப்பது வழக்கம். ஒரு நாள் ஜே. கே. சென்டரின் நிர்வாகப் பொறுப்பாளர் கிருஷ்ணாஜியும் எங்களுடன் நடந்து வந்தார். ஓரிடத்தில் தென்னங்கிடுகுக் கூரைப் போட்ட பந்தலும் அதன் கீழே சுமைதாங்கிக்கல் போல ஒரு உட்காரும் கல்பலகையும் கண்டு அதில் உட்கார்ந்தோம். எங்கிருந்தோ ஒரு அமைதி வந்து என்னை ஆட்கொள்ள, தியானத்தில்லயித்தேன். அரை மணி நேரம் கழித்து கிருஷ்ணாஜியிடம்" என்ன இது! இந்த இடத்தின் விசேஷம் என்ன?" என்றேன்.
தூர இருந்த மாந்தோப்பைக் காட்டி , "அதோ அந்த மரங்களில் சில எப்போதும் காய்க்காது... காய்க்காத மரங்களை வெட்டி விடலாம் என்று ஜே .கே -யிடம் அனுமதி கேட்டோம். பதில் ஒன்றும் சொல்லாத ஜே .கே . அன்று மாலையில் அந்த மரங்களை அன்போடு தடவிக் கொடுத்து, உங்களை வெட்டப் போகிறார்களாம். ஏன் தெரியுமா? நீங்கள் காய்ப்பதில்லையாம். பார்த்து நடந்து கொள்ளக்கூடாதா?' என்று மனித னுக்கு அறிவுரை சொல்வது போல் சொன்னார். என்ன ஆச்சரியம்..! மூன்றாவது மாதம் அந்த மரங்கள் பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்தன' என்று என்னை மேலும் ஆச்சரியப்படுத்தினார் கிருஷ்ணாஜி .

ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் புத்தர் இந்த இடத்தில் தியானம் செய்திருக்கிறார்' என்று ஜே.கே. உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாராம்.
அந்த புத்தர் உட்கார்ந்த இடத்தில் தான் அடையாளத்துக்காக கூரை போட்டு , கல்பலகை போட்டு வைத்திருந்தார் கிருஷ்ணாஜி.
நான் அமர்ந்து தியானத்துள் ஆழ்ந்த அமைதியான இடம் .
(11.07.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)