
வெளியில் நீ இறைவனையே கண்டாலும்கூட என் அறிவின் மூலமாகத்தான் நீ உணர முடியும் . வா, மனமே வா! முரண்டு பிடிக்காதே .
அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் தான் அழகு
மனமோ , புகைப்படம் எடுக்கும் நேரத்தில் புகைப்படத்துடனும் - இசைக்கும் போது இசையுடனும் - எழுதும்போது எழுத்துடனும் கலந்துவிடுகிறது .
மனமே . . . நீ இருக்கவேண்டிய இடத்தைவிட்டு ஏன் அலைபாய்ந்து வெளியே ஓடுகிறாய் ? உனக்கென்று ஒன்று உடம்பெடுத்து வந்திருக்கிறது . அதற்குள் அடங்கியிருக்கவேண்டிய நீ இப்படிப் பரபரத்து வெளியில் அலையலாமா ?
கடல் தன் இடம் விட்டு நகர்ந்தால் நிலம் நீரில் மூழ்கும் . மேகங்கள் தரையில் கிடந்தால் அருகிலிருக்கும் பொருள்கள் கூட கண்ணுக்குத் தெரியாது ! கண்களிருக்கும் இடத்தில் காதுகளும் காதுகளிருக்கும் இடத்தில் கைகளும் இருந்தால் நன்றாக இருக்குமா ?
என் கண்ணே மணியே ! அன்பே ஆரமுதே ! வா . . ! என்னை உனக்குப் பிடிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும் . இருந்தாலும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் .
நீ எங்கோ வானத்தில் சுற்றினாலும் அங்கேயே தங்கிவிட முடியாது . வெளியில் நீ இறைவனையே கண்டாலும்கூட என் அறிவின் மூலமாகத்தான் நீ உணர முடியும் . வா , மனமே வா ! முரண்டு பிடிக்காதே .
இறைவா ! அண்டமெங்கும் பரந்து நிறைந்திருப்பதாகச் சொல்கிறார்களே . . . என் மனதில் மட்டும் ஏன் இல்லாமல் போய் விட்டாய் ? நீ என் மனதில் இருந்திருந்தால் என் மனம் என்னைவிட்டுப் போயிருக்குமா ? ஒருவேளை , உன்னைக் காணத்தான் அலைகிறதோ என்னவோ !
உன்னை மட்டும் தேடினால் நல்ல விஷயமல்லவா ? இது தெருநாயைப் போலல்லவா கண்ட கண்ட விஷயங்களில் சுற்றி அலைகிறது .
பையன் தலைக்கு மிஞ்சிப் போய்விட்டால் தட்டிக்கேட்பது கஷ்டமல்லவா ? இப்போது என் பாடு அப்படித்தான் .
இறைவா ! என் மனம் என்னிடம் இல்லாத நேரத்தில் நீ வந்து அமர்ந்துவிடு . வா , இறைவா . . . . வா ! காலியான மனதில்தான் நீ இருப்பதாகச் சொல்கிறார்களே .
இந்தப் பரந்த வெளியில் என்ன கண்டாய் ? அது உன்னைப் போற்றப்போகிறதா ? காற்று உன்னைப் போற்றுமா ? இந்த நிலமும் உன்னைப் போற்றுமா ? உன்னை எந்த நேரமும் போற்றிப் புகழ்ந்து துதி செய்ய நானிருக்கிறேன் வா ! என் நெஞ்சு காலியாக இருக்கிறது .
- பொன்.சந்திரமோகன்/ இளையராஜா
(04.07.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து