
சென்னையிலேயே நெரிசல் மிக்க சாலைகளில் எத்தனை ஞானிகள் உலவுகிறார்கள் தெரியுமா...?
இசையமைப்பாளன் ஆன நேரத்திலேயே நான் மூகாம்பிகை பக்தன். அம்மாவிடம் எனக்கொரு ஞானகுரு வேண்டும் என்று பிரார்த்திக்க,‘ ஸ்ரீ ரமணருடைய சிறிய நூலைப் படிக்கும்படி வாய்ந்தது. அவர் அமர்ந்த என் இதயத்தில், வேறு ஒரு குருவுக்கு இடமில்லாது போய்விட்டது.
இருந்தாலும் ராமகிருஷ்ண பரமஹம்சர், ஷீரடி சாயிபாபா, வள்ளலார், ஸ்ரீ ரமணர் போன்ற பெரிய மகான்கள் இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே இருப்பேன்.
இந்தத் தேடுதலில் கோடிஸ்வரசாமிகளும் மாயி அம்மாவும் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பதாக எனக்குப் பட்டது. நான் சந்தித்த - சந்திக்காத - மற்றவர்கள் குறைவு என்று அர்த்தமில்லை.
இவர்களைச் சுற்றி சுவர்களோ தடைகளோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இவர்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கப் போனார்களோ... தெரியாது.
நான் எந்த வேண்டுதல்களோடும் போகவில்லை. அப்படியே வேண்டியிருந்தாலும் இறையருள் வேண்டுமென்றுதான் வேண்டியிருப்பேன். இவர்கள் உடல் என்ற சட்டையைக் கழற்றிவிட்டு போனபின் எனக்குக் கஷ்டமாகிப் போனது.
துறவறம் பூண்ட சாமிகளிடத்திலும் போலித்துறவிகள் இருக்கிறார்கள் என்று வள்ளுவர் எச்சரிக்கை செய்து அதிகாரமே - குறளில் எழுதியிருக்கிறார். அவர்களின் பந்தாவே தனி. பூஜை, புனஸ்காரம், அஸ்ரமம், யோக, ஞான பாடங்களுக்கு என்று பதினான்கு நாட்கள் பிரசங்கமும் கட்டணப் பணமும் தீர்த்துவிடும் என்றால், உண்மையிலேயே இவர்கள் மகான்கள்தான்!
குரு என்ற இடத்துக்குத் தகுதியில்லாது வெளிவேஷம் போடும் சாமியார்களை வணங்கினால், வணங்குபவர்கள் செய்த புண்ணியம், வணக்கத்தை வாங்கும் ஆசாமிக்குப் போகும். பதிலாக வணக்கம் வாங்கிய ஆசாமி சேர்த்து வைத்த பாவம், வணங்கிய வரை வந்து சேரும். ஆகவே, வணக்கம் ஜாக்கிரதை!

தண்ணீரோடு பால் கலந்தாலும் பாலோடு தண்ணீர் கலந்தாலும் தண்ணீருக்குத்தான் பால் என்ற மதிப்பும் மரியாதையும், பால், நீரோடு சேர்ந்தால் பரவாயில்லை. கள்ளிப்பாலோடு சேர்ந்தால்...?
உங்களுக்குத் தெரியுமா...?
சென்னையிலேயே நெரிசல் மிக்க சாலைகளில் எத்தனை ஞானிகள் உலவுகிறார்கள் என்று...?
எனக்குத் தெரியும்!
அவர்களைச் சென்று வணங்க, நமது அகந்தை இடம்கொடுக்காது.
இங்கே நீங்கள் காணும் படம், ஒரு ஞானபுருஷருடையது. அவர் யாரென்றும் எங்கிருக்கிறார் என்றும் சொல்லமாட்டேன். படம் எடுக்கவிடாது என்னைத் தடுத்த அவர் இப்படிப்பட்டவர்தான் என்று யாரால் சொல்ல இயலும்...?
- பார்வை தொடரும்
- பொன்.சந்திரமோகன்/இளையராஜா
(12.09.1999 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)