`வீடு தெய்வீகமாக இருக்கு..!' - கலைஞானத்தை நெகிழவைத்த ரஜினி
தன்னைத் திரையுலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு, சொன்னபடியே வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த்.

சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை `பைரவி' படம் மூலம் ஹீரோவாக்கியவர், கலைஞானம். இவருக்கு தமிழ்த் திரைக்கலைஞர்கள் சார்பில் சமீபத்தில் பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது. பாரதிராஜா ஒருங்கிணைத்திருந்த அந்த விழாவில் ரஜினி கலந்துகொண்டார். அவர் பேசுகையில், `கலைஞானத்துக்கு வீடு வாங்கித் தர இருக்கிறேன்' என்று ரஜினி பேசியிருந்தார்.

இதையடுத்து, அவருக்கு வீடு பார்க்கும் வேலைகள் தீவிரமாக நடந்துவந்தன. இயக்குநர் பாக்யராஜ் அந்தப் பணிகளைச் செய்துவந்தார். இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் 1,320 சதுர அடி பரப்பில் 3 படுக்கையறைகளுடன் கூடிய வீடு ஒன்று பார்க்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, வீட்டுக்கான மற்ற வேலைகள் முடிந்திருந்த நிலையில், `ரஜினி வீட்டுக்கு வந்து குத்துவிளக்கேற்றி வைத்தால் நன்றாக இருக்கும்' என்று கலைஞானம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கலைஞானம் குடும்பத்தினரிடம் பேசினோம். ``தர்பார் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிக்கு, கலைஞானத்தின் விருப்பம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, நேற்றிரவு அவர் வீட்டிலிருந்து போன் வந்தது. அதில், `காலை 10.30 மணிக்கு, ரஜினி உங்கள் வீட்டுக்கு வருவார்' என்று தகவல் சொன்னார்கள்.

சொன்னபடியே, காலை 10.30 மணியளவில் விருகம்பாக்கம் வீட்டுக்கு ரஜினி வந்தார். அவரை பொன்னாடை போர்த்தி கலைஞானம் வரவேற்றார். பின்னர், வீட்டின் பூஜையறைக்குச் சென்று குத்துவிளக்கேற்றிய ரஜினி, பாபா படம் ஒன்றை பரிசளித்தார். பின்னர், எங்கள் குடும்பத்தினரை ரஜினிக்கு அறிமுகப்படுத்தி, அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டோம். வீட்டை சுற்றிப்பார்த்த ரஜினி,`வீடு தெய்வீகமாக இருக்கு' என்றார். குத்துவிளக்கேற்றிய ரஜினிக்கு, இனிப்புகள் கொடுத்தோம்'' என்றனர்.