Published:Updated:

`புதுமையான புரட்சிகரமான முயற்சி’ - பார்த்திபனைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

ஒவ்வொரு படத்தில் தனித்துவத்தைக்காட்டும் பார்த்திபன், இந்தப் படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

rajinikanth
rajinikanth

`ஒத்த செருப்பு’, இயக்குநர் பார்த்திபனின் புதியபடம். `கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தைத்தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் படம் இது. இதற்கிடையில் அவர் பல்வேறு படங்களில் நடித்தாலும், மீண்டும் டைரக்ஷனுக்குத் திரும்பியுள்ளார். `ஒத்த செருப்பு’ படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. காரணம், இதில் அடுக்கிக்கொண்டே போகும் அளவுக்கு கதாபாத்திரங்கள் இல்லை.

rajinikanth
rajinikanth

சொல்லப்போனால், கதாபாத்திரங்களே இல்லை. `பார்த்திபன்’ மட்டுமே படத்தில் நடித்துள்ளார். ஒரே கதாபாத்திரத்தைச் சுற்றியே படம் நகரும் என ஏற்கெனவே அவர் தெரிவித்திருந்தார். படத்தின் டிரெய்லரிலும் இது பிரதிபலித்தது. படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பும் செய்துள்ளனர்.

பார்த்திபனின் `பயாஸ்கோப் ஃபிலீம் ப்ரேமர்ஸ்’ நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் புதிய முயற்சிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்தும் பார்த்திபனுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தைக் காட்டும் பார்த்திபன், இந்தப் படத்தின் மூலம் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.

R.Parthiban
R.Parthiban

இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கேமரா, எடிட்டிங், பேக்ரவுண்ட் மியூசிக், பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள்!’’ என்று புகழ்ந்துள்ளார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், `உச்ச மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார். படம் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.