Published:Updated:

ரஜினி ஹேர்ஸ்டைல் மெயின்டெயின் பண்ண 50 ரூபாய்!

ரஜினி சாதிக்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி சாதிக்

ஒவ்வொரு தேர்தலின்போதும், பிரசாரத்துக்கு என்னை அரசியல் கட்சிகளிலிருந்து கூப்பிடுவாங்க. ரஜினி வேடத்தில் பிரசாரம் பண்ணச் சொன்னாங்க.

காரைக்காலில் அச்சு அசலாக ரஜினியின் நடை உடை பாவனை களால் பொதுமக்களைக் கவர்ந்து, பிரபலமாகியிருக்கிறார் ரஜினி சாதிக் என்கிற ரஜினி ரசிகர்!

‘கை கொடுக்கும் கை’ படத்தில் பார்வைச்சவால் உள்ள பெண்ணை மணம் முடிப்பவராக ரஜினி நடித்ததைப் பார்த்து மாற்றுத் திறனாளியான ஜெகபர் நாச்சியார் என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார்.

“எங்க தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா ராணுவ வீரர். 1980-ல் நான் சிறுவனாக இருக்கிறபோது பாட்டியின் இடுப்பில் அமர்ந்து சென்று `பில்லா’ படத்தைப் பார்த்தேன். அன்றுமுதல் ரஜினி ரசிகராகிவிட்டேன். ரஜினி கெட்டப்பில் தோன்றி ரஜினியைப் போலவே நடந்துகொள்வது எனக்கும் சந்தோஷம், மக்களுக்கும் சந்தோஷம்!

ரஜினி ஹேர்ஸ்டைல் மெயின்டெயின் பண்ண 50 ரூபாய்!

ஒவ்வொரு தேர்தலின்போதும், பிரசாரத்துக்கு என்னை அரசியல் கட்சிகளிலிருந்து கூப்பிடுவாங்க. ரஜினி வேடத்தில் பிரசாரம் பண்ணச் சொன்னாங்க. பணம் எவ்வளவு கேட்டாலும் தாரேன் னாங்க. ஆனா ‘என் தலைவன் தமிழக முதல்வராகிற தேர்தல் வரும். அப்போது நான் பிரசாரம் செய்வேன்’னு சொல்லி மறுத் திட்டேன். நீங்கவேணா பாருங்க. இறைவனும் இயற்கையும் என் தலைவனை நிச்சயமா முதல்வர் நாற்காலியில் அமர்த்தும். ‘நான் அவராக வாழ்வது எவ்வளவு கஷ்டம்’ என்பதையும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், இதிலிருந்து இனி என்னால் விடுபடவே முடியாது. இறுதிவரை நான் ரஜினி ரசிகனாகவே வாழ விரும்புகிறேன்.

ஹோட்டல் தொழிலாளியாக வேலை பார்த்தேன். என்னையும் என் மனைவி மக்களையும் வறுமையோடு, கொரோனாவும் முடக்கியது. ரஜினி என்கிற மந்திர சக்திதான் என்னை இன்று வரை தெம்பாக நடமாட விட்டிருக்கு. ஏதோ என் மனைவிக்கு மாற்றுத் திறனாளிக்கான பென்ஷன் வருது. தலைவர்போல் ஹேர் ஸ்டைலைப் பராமரிக்க ரெண்டு நாளுக்கு ஒரு தடவ ரூ.50 செலவழிக்க வேண்டி யிருக்கு” என்று சிரிக்கிறார்.

“மகள் டாக்டருக்குப் படிக்கணும்னு சொல்லுது. மகனும் பெரிய படிப்புக்கு ஆசைப்படுறான். அவுங்க ஆசையை நிறைவேற்ற என்னிடம் சக்தியில்லை. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளுக்கு என்னையும், என் நிலைமையும் நல்லா தெரியும். தெய்வமாகவே என் தலைவரை நேசிச்சு வாழுறேன். 2017-ல் தலைவ ரோட போட்டோ எடுக்கும்போது, கண்ணாடியை அவர் ஸ்டைலில் சுத்திப் போட்டேன். மறுபடியும் அதேபோல் செய்யச் சொல்லி என்னையே உற்றுப் பார்த்துச் சிரித்தார். அந்த ஒரு நிமிஷம் நான் வானத்துல பறந்திட்டு இருக்கிற மாதிரி சந்தோஷம். என் தலைவருக்கு ஒரு அபார சக்தியிருக்கு. அந்த சக்தி மூலமா அவரே, என்னோட கஷ்டத்தைப் புரிந்துகொண்டு என்னை அழைக்கும் காலம் வரும்” என்று ரஜினிமீது நம்பிக்கை வைத்துச் சொல்கிறார் சாதிக்.