Election bannerElection banner
Published:Updated:

"அரசியலில் குதித்தால், பாயும் புலியாக நுழைவேன்!" - ரஜினி நேர்காணல் @ 1987 #VikatanVintage

ரஜினி
ரஜினி

அரசியல் சூழ்நிலை, நிர்வாகப் பணிகள், திட்டங்கள் என்று நீட்டிக்கொண்டே போக வேண்டாம். ஒரே வார்த்தையில், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களுடைய அறியாமையை முழுமையாகத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

- சுதாங்கன், ஜூனியர் விகடன் 18.3.87

சென்ற வாரம், செய்திகளில் ரஜினிகாந்த் பெயர் சற்று அதிகமாகவே அடிபட்டது. 'தயாரிப்பாளர் மயிலை குருபாதத்தைத் தாக்கினார் ரஜினிகாந்த். அவர் மீது போலீஸார் மூன்று வழக்குகள் தொடர்ந்திருக்கிறார்கள்...' என்றும், 'ராஜேஷ்கண்ணா, பிரேம்நசீரைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தும் இந்திரா காங்கிரஸில் சேருகிறார்' என்றும் தொடர்ந்து ரஜினியைப்பற்றிய செய்திகள்!

தொலைபேசியில் ரஜினியுடன் தொடர்புகொண்டபோது, சந்திக்க சம்மதித்தார். அந்தப் பேட்டியில்...

''நீங்கள் இ.காங்கிரஸில் சேர்ந்துவிட்டீர்கள்... ஒரு தயாரிப்பாளரைத் தாக்கியதால், உங்கள் மீது போலீஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறது எனச் செய்திகள்... காங்கிரஸில் சேர்ந்த துணிச்சலுடன் 'கோதா'வில் இறங்கிவிட்டீர்களா?''

(தன் ஸ்டைல் சிரிப்புடன்) ''நான் காங்கிரஸில் சேர்ந்துவிட்டேனா? யார் உங்களுக்குச் சொன்னது? நீங்கள் சொல்வது எனக்கே புது நியூஸ்! நான் அரசியலில் குதிப்பதாக இருந்தால், இவ்வளவு ரகசியமாகச் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் அரசியலில் குதித்தால், பாயும் புலியைப்போல - with a very big Bang - தான் நுழைவேன். ஆனால், அதற்கு இப்போது எந்தத் தேவையுமே ஏற்படவில்லை. தயாரிப்பாளரைத் தாக்கிய விஷயம் தொழிலில் இருக்கிற தனிப்பட்ட விவகாரம். அதைப்பற்றி நான் இப்போது கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சொல்வேன். நானாக யார் வம்புக்கும் போக மாட்டேன். வந்த வம்பை விடவும் மாட்டேன்!''

''ராஜேஷ்கண்ணா, பிரேம்நசீர் போன்றவர்கள் ஏற்கெனவே காங்கிரஸில் சேர்ந்து மேற்கு வங்காளம், கேரளா தேர்தல் பிரசாரத்துக்குப் போய்விட்டார்கள். அதைப்போல உங்களையும் மேலிடத்து பிரஷர் மூலம் கட்சியில் சேரவைத்து, வருங்காலத் தேர்தலுக்கு உங்களைப் பயன்படுத்தினால்..?''

''என்னை எந்த பிரஷரும், மிரட்டலும் பணியவைக்க முடியாது. நான் யார் பின்னாலும் போகவும் மாட்டேன்.''

''பணம் சேர்ந்த பிறகு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயந்துதானே ஆகவேண்டும்?''

''நேர்மையான முறையில் பணம் சம்பாதிக்கத் தெரிந்த எனக்கு, அதை நேர்மையாகக் காப்பாற்றவும் தெரியும். அதனால், எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.''

"அரசியலில் குதித்தால், பாயும் புலியாக நுழைவேன்!" - ரஜினி நேர்காணல் @ 1987 #VikatanVintage

''அரசியலில் குதிக்க மாட்டேன் என்கிறீர்கள். உங்களுக்கு என்று ஏராளமான ரசிகர் மன்றங்கள்... அவர்களுக்காகத் தினமும் காலையில் வீட்டு வாசலில் நீங்கள் தரும் தரிசனம்... நன்கொடை... ஏழைகளுக்காகப் பாடுபடுவதை உசத்திக்காட்டும் படக் காட்சிகள்... இவை எல்லாம் எதற்காக?''

''ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரசிகர் மன்றங்கள் எல்லாம், ரசிகர்கள் அவர்களாகவே உருவாக்கிக்கொள்வது. மன்றங்களை நான் ஆதரிப்பதும் இல்லை; தடுப்பதும் இல்லை. நான் வேண்டாம் என்று சொன்னாலும், அவர்கள் அதைச் செய்யத்தான் போகிறார்கள். அப்படி மன்றம் அமைத்து என்னிடம் வருபவர்களிடம், 'உங்கள் சொந்த வேலையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். குடும்பத்தை நன்கு கவனியுங்கள்' என்று ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து சொல்லி வருகிறேன். காலையில் ரசிகர்களை சந்திக்கிறேன். கடவுள், தன் பக்தன் முன் தோன்றி அருள்பாலிக்கிற நினைப்பில் இதை நான் செய்வது இல்லை... பல ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்களில் இருந்து என்னை ஆவலோடு பார்க்க வருகிறார்கள். அந்த அன்புக்குக் கட்டுப்பட்டுத்தான் காலையில் அவர்களைப் பார்க்கிறேன். உதவி, நன்கொடை என்று சொன்னீர்கள். இது வசதி உள்ளவன், இல்லாதவனுக்குக் கொடுக்கிற மிகச் சாதாரண சிந்தனைதான். படத்தில் ஏழைகளைக் காப்பாற்றுவது மசாலா சினிமாவின் ஃபார்முலா. அது ஒரு வகையான ஹீரோயிஸம். ஸோ, நீங்கள் சொன்ன இந்தக் காரியங்களுக்கு எந்தவித மோட்டிவும் கிடையாது.''

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

''தமிழகத்தில் இப்போது நிலவுகிற அரசியல் சூழ்நிலை, நிர்வாகப் பணிகள், திட்டங்களைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும்? தற்போதைய நாட்டு நிலைமையைப்பற்றி உங்கள் கருத்து என்ன?''

''அரசியல் சூழ்நிலை, நிர்வாகப் பணிகள், திட்டங்கள் என்று நீட்டிக்கொண்டே போக வேண்டாம். ஒரே வார்த்தையில், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களுடைய அறியாமையை முழுமையாகத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பு முறையே ஏமாற்று வித்தை. பிரிட்டிஷ் காலத்து அணுகுமுறை. எல்லாருக்கும் உணவு, உடை, வீடு, சமத்துவம், சகோதரத்துவம் என்று எழுத்தில்தான் இருக்கிறது. நடைமுறைக்கு உதவாத அந்த எழுத்துக்குப் பெயர் அரசியல் சட்டம். அதைப்போய் புனிதம் என்று வேறு சொல்றோம். வேடிக்கைதான். ஒருவேளைச் சோற்றுக்கு வழி இல்லாதவன்கூட தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை வரவேண்டும். ஒரு ஏழை தேர்தலில் நிற்க முடியுமா? ஒரு எம்.எல்.ஏ., சட்டசபையில் நுழைய வேண்டுமானால், ஐந்து லட்ச ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். அவ்வளவு செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்றவரின் பொது வாழ்வில், நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? ஒரு சாதாரண பியூன் வேலைக்கு ஆள் எடுக்கும்போதுகூட அவரது கல்வித் தகுதி என்ன என்று கேட்கிறோம். நம்மை ஆளப்போகிறவர்களுடைய தகுதியைப்பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. அதனால்தான், பதவிக்கு வருகிறவர்கள் நம் வாழ்க்கைத் தரத்தைப்பற்றி கவலைப்படுவது இல்லை.''

''ஏழை - பணக்காரன் என்று பேசுகிறீர்கள். ஆனால், சினிமாவில் நீங்கள் ஒப்புக்கொள்வது பெரிய பேனர் படங்கள் மட்டுமே. இதனால் ரஜினி என்கிற ஆக்ஷன் ஹீரோதான் நிற்கிறார். நடிகர் ரஜினி காணாமல் போய்விட்டார். பெரிய தயாரிப்பாளர்களின் பிரஷருக்கு நீங்கள் கட்டுப்படுவதால், நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறதே?''

''இதில் பிரஷருக்கே இடம் இல்லை. என் படம் சில லட்சம் ரூபாய் பிசினஸான சமயத்தில் நல்ல ரோலில் நடித்தேன். இப்போது என் படங்கள் பல லட்ச ரூபாய்க்கு மேல் பிசினஸாகிறது. அத்தனை விலைகொடுத்துப் படம் வாங்கும் விநியோகஸ்தர்கள் மூணு சண்டை, நாலு பாட்டு, அஞ்சு டான்ஸ் கொண்ட பிரமாண்டமான படத்தை எதிர்பார்க்கிறார்கள். 'ஆறிலிருந்து அறுபது வரை', 'எங்கேயோ கேட்ட குரல்' படங்கள் எல்லாம் செட்டுக்குள்ளேயே எடுத்துவிடலாம். அந்தப் படங்களுக்கு பிரமாண்டமான தயாரிப்பு தேவை இல்லை. அடிப்படையில் நான் 'ஆக்ஷன் ஹீரோ', விநியோகஸ்தர்களுடைய நடிகன். அவர்களைத் திருப்திபடுத்தினால்தான் நான் நிற்க முடியும், பெரிய பேனர்கள் பிரமாண்டமாகத் தயாரிப்பார்கள். சில படங்கள் வெற்றியையும், சில தோல்வியையும் அடைகின்றன. வருங்காலத்தில் இதற்கும் ப்ளான் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்.''

ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

நான் தனியாக இருந்தே பழகிவிட்டவன். நடிகர் சங்கத் தேர்தலில் கலந்துகொள்ளவில்லையே தவிர, நடிகர்களுக்காக, சங்கத்துக்காக எந்த ஒத்துழைப்பையும் நிச்சயம் கொடுப்பேன்.

''ஆரம்ப காலத்தில் இஷ்டம்போல கட்டுப்பாடே இல்லாமல் இருந்தீர்கள். பிறகு 'ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் தீவிரமானீர்கள். இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், மனைவியோடு வாழ்க்கை நடத்தப்போவதில்லை என்றும் செய்தி வந்தது. திடீரென்று, கிறிஸ்வ மதத்தின் மீது ஈடுபாடு வந்து, அதனால் வேளச்சேரியில் உள்ள உங்கள் வீட்டை 'சகோதரர்' தினகரனுக்கு வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். உங்கள் மனநிலையில் ஏன் இத்தனைக் குழப்பம்.?''

''அது குழப்பம் இல்லை. எனக்கு என்றைக்கும் மன சஞ்சலமே கிடையாது. நான் மதவாதி அல்ல. ஆன்மிகவாதி. ஆன்மிக ஈடுபாடு உள்ளவன் முதலில் தன்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வான்.

அந்த முயற்சியின்போது நடக்கும் நிகழ்ச்சிகள்தான் நீங்கள் சொன்னது. என்னை கிறிஸ்துவன், இந்து என்று பிரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மதப் பிரிவினைகள் தந்த தீமைகளுக்குச் சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. மதத்தால்தான் இந்தியா - பாகிஸ்தான் என்ற பிரிவே வந்து, இப்போதும் முட்டிக்கொண்டு நிற்கிறோம். அதே மத வெறிதான் இன்று பஞ்சாபில் பூதாகாரமாகக் கிளம்பி நாட்டுக்கே பிரச்னையாகி உள்ளது. இதற்குப் பிறகும் மதக் கூட்டுக்குள் புகுந்துகொள்ள வேண்டுமா?''

''சமீப காலங்களில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரில் இருந்து பல சினிமா நடிகர்கள், தமிழ் நடிகர்களைத்தான் உற்சாகப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். அப்படிப் பார்த்தால், நீங்களே தமிழ் நடிகர் இல்லையே..?''

‘‘Language is a very poor torm of communication...மொழி ஒரு தொடர்பு சாதனம்.. அவ்வளவுதான்... எனக்கு மனிதன்தான் முக்கியம். அவனால் ஏற்பட்ட மொழி, அந்த மொழியினால் ஏற்பட்ட பிரிவுகள், பிரிவுகளில் பிறந்த மாநிலங்கள் இதில் எல்லாம் எனக்கு ஈடுபாடே கிடையாது. முதலில் நான் மனிதன். பிறகுதான் இந்தியன் என்று சொல்வேன். அப்படியே பார்த்தாலும், என்னை யாருமே குற்றம் சொல்ல முடியாது. நான் வேற்று மொழிக்காரனாக இருந்தாலும், என்னை வாழவைக்கின்ற மொழியைக் கற்றுக்கொண்டு பேசுகிறவன். வீரமாமுனிவர்கூட அயல்நாட்டுக்காரர்தான். அவர் தமிழ் கற்றுக்கொண்டதும், தமிழகம் அவரை ஏற்கவில்லையா?''

''மற்ற நடிகர்களோடு ஒட்டாமல் தனித்து நிற்கிறீர்கள். நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்ட நடிகர் சங்கத் தேர்தலில்கூட நீங்கள் கலந்துகொள்ளவில்லை. 'மற்றவர்களைவிட நான் ஒரு படி மேல்' என்ற நினைப்பிலா... இல்லை...''

''அந்த நினைப்பு நிச்சயம் கிடையாது. அது என்னோடு நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். நான் தனியாக இருந்தே பழகிவிட்டவன். நடிகர் சங்கத் தேர்தலில் கலந்துகொள்ளவில்லையே தவிர, நடிகர்களுக்காக, சங்கத்துக்காக எந்த ஒத்துழைப்பையும் நிச்சயம் கொடுப்பேன். நடிகர்கள் நல்வாழ்வுக்கான முயற்சிகளில் நிச்சயம் என் பங்கு இருக்கும்.''

''பம்பாய் சேரி மக்களுக்காக நடிகை ஷபனா ஆஸ்மி பம்பாயில் ஊர்வலம் போனார். அதே மாதிரி தமிழ் மக்கள் பிரச்னைகளுக்காக நீங்கள் பேரணி நடந்துவீர்களா?''

''காலம் என்னை எப்படிக் கட்டாயப்படுத்துமோ எனக்குத் தெரியாது.''

''நீங்கள் திட்டமே போடாமல் காலக் கட்டாயத்துக்குக் காத்திருப்பேன் என்று சொல்வது நியாயமா?''

''நான் திட்டமே போடவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?''

''ஆர்.எம்.வீரப்பனின் எதிர்காலத் திட்டங்களுக்கு நீங்கள் முழு ஆதரவு தரப் போவதாகச் சொல்லப்படுகிறதே?''

''அது முற்றிலும் கற்பனை. பொய்யான வதந்தி. எங்கள் இருவருக்குமே தயாரிப்பாளர் - நடிகர் உறவுதான்.''

''உங்களை மிகவும் கவர்ந்த தலைவர் யார்?''

''நம் ஊரில் யாருமே இல்லை. சிங்கப்பூர் பிரதமர் லீ க்வான் யூ தான் என்னைக் கவர்ந்தார். தொடர்ந்து பல வருஷங்களாக மக்கள் தலைவராக இருப்பவர் அவர்தான்.''

''நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். காரணம் இல்லாமலா உங்களை அரசியலோடு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார்கள்?''

''நான் அமிதாப்பச்சனின் நண்பன். அதனால் இருக்கலாம். அத்துடன் ஒரு சினிமா விழா மேடையில் நான் நிறையப் பேசினேன். விழாவுக்கு வந்த ஷெரீப் ஏவி.எம்.சரவணன், 'ரஜினி நிறையப் பேசக் கத்துக்கிட்டார். அவர் அரசியலுக்குப் போயிடக் கூடாது'' என்று சொன்னார். இதனால் எல்லாம்கூட என்னை அரசியலோடு ஈடுபடுத்திப் பேசி இருக்கலாம்.''

''இன்னும் எத்தனை காலம் நடிப்பீர்கள்?''

''மக்கள் என்னை 'போ, போ'னு சொல்ற வரை சினிமாவில் ஒட்டிக்கொண்டு இருக்க மாட்டேன்... போதுமா?!''

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு