Published:Updated:

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது... சராசரி தோற்றம், பிழையான தமிழ், சுமார் நடிப்பு... ஆனால்?!

எதையும் ஒளிக்காமல் அப்படியே சொல்லி விடும் நேர்மைதான் ரஜினியின் பலங்களுள் ஒன்று. பல சமயங்களில் இதுவே பலவீனமாகவும் மாறியிருக்கிறது.

இந்தியச் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது ‘தாதாசாகேப் பால்கே விருது’. இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, 2019-ம் ஆண்டிற்காக ரஜினிகாந்த்திற்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலசந்தர். ஒருவகையில் ஜெமினி எல்.வி.பிரசாத்தையும் இந்த வரிசையில் இணைத்துக் கொள்ளலாம்.

ரஜினிகாந்த் அடைந்திருக்கும் இந்த அங்கிகாரம் வரவேற்கத்தக்கது. முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியது.

ரஜினி
ரஜினி

ஒரு காலகட்டத்தில் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பவர்கள்தான் சினிமாவில் நாயகர்களாக ஜொலிக்க முடியும் என்கிற எழுதப்படாத விதி இருந்தது. தியாகராஜ பாகவதர் முதல் கமல்ஹாசன்வரை இதுதான் வழக்கம். நிறம் இல்லையென்றால் சிவாஜி கணேசனைப் போல அசாதாரணமான நடிப்புத் திறமையுள்ளவர்கள்தான் இந்தத் தடையைத் தாண்டி வர முடியும்.

இந்த நெடுங்கால மரபையும் தடையையும் உடைத்துக் கொண்டு வந்தவர்தான் ரஜினி. கறுப்பு நிறம், எளிமையான சராசரி தோற்றம், பிழையான தமிழ் உச்சரிப்பு, சுமாரான நடிப்பு போன்றவைதான் ரஜினியின் துவக்க கால அடையாளங்களாக இருந்தன. ஆனால் இவற்றைத் தன்னுடைய தனித்தன்மையான உடல்மொழியால், ஸ்டைலால் தாண்டி வந்தார் ரஜினி. ஏதோ பாலசந்தரின் கண்ணில் பட்ட அதிர்ஷ்டம் என்று அவரது வளர்ச்சியை சுருக்கிப் பார்க்க முடியாத அளவிற்கு ஒரு காலகட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார்.

பிழையான உச்சரிப்பு, வேகமான நடை, அசைவு… என்று எவையெல்லாம் துவக்க காலத்தில் அவரது பலவீனங்களாகவும், கேலியாகவும் பார்க்கப்பட்டதோ அதுவே பிற்காலத்தில் அவரது பலமாகவும் பிரத்யேகமான அடையாளமாகவும் மாறிப் போனது. அவரது ஸ்டைல் பாணியை அவர் செய்தால் மட்டுமே அது எடுபடும். வேறு எவராலும் நகல் எடுக்க முடியாத பாணி அது.
ரஜினி
ரஜினி

தன்னுடைய கடுமையான உழைப்பாலும், வித்தியாசமான உடல்மொழி அசைவுகளாலும் துள்ளலான நடிப்பாலும் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்து ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் உயரிய சிம்மாசனத்தில் நெடுங்காலமாக அமர்ந்திருக்கிறார் ரஜினி. 'அவருக்குப் பின் நான்தான்’ என்று வேறு சில நடிகர்கள் குரல் கொடுத்தாலும் அல்லது அந்த அந்தஸ்திற்கு உள்ளூற ஆசைப்பட்டாலும் இன்னமும் கூட அந்த நாற்காலி அவருடையதுதான். ‘சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினியை மட்டுமே குறிக்கக்கூடியது என்பது இன்றைய சின்னக்குழந்தைக்கு கூடத் தெரியும்.

"ஒரு புலி வளப்பமாக இருந்தால் அது இருக்கும் ஒட்டுமொத்த காடே வளமாக இருக்கிறது என்று பொருள்" என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். புலி புஷ்டியாக இருக்கிறது என்றால் அது நிறைய மான்களை வேட்டையாடி உண்டு கொழுத்திருக்கிறது என்று பொருள். அங்கு நிறைய மான்கள் இருக்கிறது என்றால் அவை மேய்வதற்கான புற்களின் வளர்ச்சி அந்த இடத்தில் நன்றாக இருக்கிறதென்று பொருள். எனில் அங்கு நிலவளம் அபரிதமாக இருக்கிறதென்று பொருள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையே எந்தவொரு துறைக்கும் பொருத்திப் பார்க்கலாம். முன்னணி நடிகர்களின் மசாலா திரைப்படங்கள் ஒரே மாதிரியான பாணியில் அமைந்து சலிப்பூட்டுகிறது என்கிற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் முன்னணி நடிகர்களின் வணிக மதிப்பு உச்சத்தில் பறக்க பறக்கத்தான் கூடவே சினிமாத் துறை சார்ந்த அனைத்துப் பிரிவுகளும் வளர்ச்சி பெற முடியும். உயிர்வாழ முடியும்.

ஓர் உதாரணத்திற்கு சொன்னால், ஒரு திரையரங்கில் குறிப்பிட்ட காட்சியில் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் ஹவுஸ்ஃபுல் ஆகிறது என்றால் அங்கு கேன்டீன் வைத்திருப்பவர், டீக்கடைக்காரர் உள்பட பலர் மகிழ்ச்சியடைவார்கள். அந்த லாபம் அவர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக அமையும். இது ஒரு சிறிய உதாரணம்தான். இப்படி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சினிமாத்துறையை நம்பியிருக்கின்றன.

Rajini
Rajini

இந்த விஷயத்தை ரஜினி நன்கு புரிந்து வைத்திருந்தார். தான் நடிக்கின்ற திரைப்படத்தினால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மிகுந்த லாபம் அடைய வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்திருக்கிறார். ஏனெனில் அப்போதுதான் அந்தத் தயாரிப்பாளரால் தொடர்ந்து இயங்க முடியும்; மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்க முடியும் என்பது ரஜினியின் எண்ணமாக இருந்திருக்கும். இதன் மூலம் சினிமாத்துறை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க ரஜினியும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

"நீ நடித்த திரைப்படத்திலேயே உனக்குப் பிடித்த படம் எது?" – இப்படியொரு கேள்வியை ரஜினியிடம் ஒரு மேடையில் கேட்டார் கே.பாலசந்தர். சில நொடிகள் கூட தயங்காமல் ‘முள்ளும் மலரும்’ என்று பளிச்சென்று பதில் சொன்னார் ரஜினி. "கேள்வி கேட்பவர் தன் குருநாதர் ஆயிற்றே... அவருடைய படத்திலிருந்தே ஒன்றைச் சொல்லி விடலாம்..." என்று ரஜினி மழுப்பவில்லை. எதையும் ஒளிக்காமல் அப்படியே சொல்லி விடும் நேர்மைதான் ரஜினியின் பலங்களுள் ஒன்று. பல சமயங்களில் இதுவே பலவீனமாகவும் மாறியிருக்கிறது.

‘முள்ளும் மலரும்’, ‘அவள் அப்படித்தான்’ ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற சிறந்த திரைப்படங்களில் நடிப்பதைத்தான் ரஜினியின் மனம் விரும்பியிருக்கும். ஆன்மீக விஷயங்களில் மீதுள்ள நாட்டம் வேறு கூடவே இருந்தது. ஆனால் அவர் அமர்ந்திருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ எனும் நாற்காலி மிக அரிதானது. அதற்காக அவர் கடந்து வந்த பாதை என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. எனவே, சினிமாவின் இருப்பிற்காக தனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் இருந்தாலும் அரைமனதுடன் வெகுசன மசாலாத் திரைப்படங்களில் நடித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற்காலத்தில் தன்னுடைய வயதுக்கேற்ற பாத்திரங்களில் ‘கபாலி’, ‘காலா’ போன்ற திரைப்படங்களில் நடித்து ‘இளம் நடிகைகளுடன் டூயட் பாடுபவர்’ என்று தம் மீதிருந்த நெடுங்கால விமர்சனத்தை ஓரளவிற்கு துடைக்க முயன்றார் ரஜினி.
காலா
காலா
சட்டென்று இறங்காத தன்னுடைய வணிக மதிப்பின் மூலம் சினிமாத் துறையின் வளர்ச்சிக்கு நெடுங்காலமாக உறுதுணையாக இருந்தவர் என்கிற வகையில் இந்த விருது அவருக்கு கிடைத்திருப்பதை வாழ்த்தி வரவேற்கலாம். அதேசமயம் ரஜினி சினிமாத்துறைக்கு செய்யாதது என்கிற பட்டியலும் நீளமாகவே இருக்கிறது.

இப்போது இதன் எதிர்திசையில் உள்ள விஷயங்களைப் பார்ப்போம். சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து நல்ல திரைப்படங்களை உருவாக்குபவர் என்கிற மதிப்பு கமல்ஹாசனின் மீது இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் ஒருபுறம் வெகுசன இயக்குநர்களாக இருந்தாலும் நல்ல சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் உருவாவதற்கு இன்னொரு புறம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் அவ்வகையான முயற்சிகளை ரஜினி பெரிதாக செய்ததில்லை. தனக்குப் புகழையும் செல்வத்தையும் மக்கள் அபிமானத்தையும் வாரி வழங்கிய சினிமாத்துறைக்கு சில நல்ல திரைப்படங்களை தயாரித்து வழங்குவதின் மூலம் அதன் ரசனை மாற்றத்திற்கு சிறுதுளியாகவாவது ரஜினி காரணமாக இருந்திருக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு