Published:Updated:

`நான் சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினா..!' - கல்யாண கதை சொல்லும் ரஜினி #AppExclusive

Rajinikanth and Latha Rajinikanth in Marriage ( Ananda Vikatan Archives - 1981 )

90s கிட்ஸுக்கு ரஜினி கல்யாணத்தப்ப நடந்ததுலாம் தெரியாதே.. அவரே சொல்றார்!

`நான் சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினா..!' - கல்யாண கதை சொல்லும் ரஜினி #AppExclusive

90s கிட்ஸுக்கு ரஜினி கல்யாணத்தப்ப நடந்ததுலாம் தெரியாதே.. அவரே சொல்றார்!

Published:Updated:
Rajinikanth and Latha Rajinikanth in Marriage ( Ananda Vikatan Archives - 1981 )

மாலை 7 மணி. போயஸ் கார்டனில் ரஜினியின் புது வீட்டுக்குப் போயிருந்தபோது, வீட்டில் அவர் மனைவி லதா இல்லை. தாஜ் ஹோட்டலில் நடக்கவிருந்த திருமண வரவேற்புக்கு, தன் கல்லூரித் தோழிகளை அழைக்கச் சென்றிருந்தார். ரஜினி, மாடியில் குளித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

சற்று நேரத்தில் இன்ட்டிமேட்டின் நறுமணம் சுகமாகக் காற்றில் பரவி வந்தது. ரஜினி இறங்கி வந்தார்.

Rajinikanth and Latha Rajinikanth in Marriage
Rajinikanth and Latha Rajinikanth in Marriage
Ananda Vikatan Archives - 1981

‘‘வாங்க... போகலாம்!” என்றபடியே விறுவிறுவென காரில் ஏறினார். வெள்ளை நிற ஃபியட் TMU 5004. சினிமாவில் போவது மாதிரி ஒரே மூச்சில் ரிவர்ஸில் போனார். அலட்சியமாக ஸ்டீயரிங்கை உடைத்தார். மௌபரீஸ் ரோடு சிக்னலின் சிவப்பு விளக்கு, பிரேக் போட்டு நிற்கவைத்தது.

‘‘ ‘ஐ வாஸ் எ கண்டக்டர்’னு நான் சொல்லிக்கிறதே இல்லை...

ஐ யம் எ கண்டக்டர்’னுதான் இன்னிக்கும் நினைச்சுக்கிறேன்” என்றார்.

சிக்னலில் பச்சை விளக்கு.

‘‘இப்போ எனக்கு சொத்து, சுகம், வீடு, வாசல்னு எல்லாம் வந்து சேர்ந்திருக்கு. ஆனா, இந்த மயக்கத்திலே நான் பாஸ்ட்டை மறந்துட நினைக்கலே.  மார்க்கெட் இருக்கிறவரைக்கும்தான் மரியாதைனு எனக்குத் தெரியும். எந்த நேரத்திலேயும் பழைய நிலைமைக்கே போய்விடுவோம்கிறதும் எனக்குப் புரியாம இல்லே.

”மெரினாவில் காந்தி சிலை அருகில் இடது பக்கம் திரும்பி, கடற்கரைச் சாலையில் விரைகிறது 5004.

‘கர்ஜனை’ படத்துக்காகப் பொருட்காட்சி சாலையில் ரஜினிக்கு அன்று படப்பிடிப்பு. ‘‘ராத்திரி நேரத்திலே ஒன்பது மணிக்கு மேல் ஷூட்டிங் இருந்தா, முன்னே மாதிரி கவலையில்லாம வொர்க் பண்ண முடியறதில்லை.

`வீட்ல எனக்காக ஒருத்தி காத்துட்டிருப்பா’ங்கிற நினைப்பு, மனசை உறுத்திட்டே இருக்கு!” என்று உரக்கச் சிரித்தார் ரஜினி.

``அதுக்குன்னு ஆறு மணிக்கு மேலே கால்ஷீட் தரமாட்டேன்னு கண்டிஷன் போடுறது இல்லே. முந்தாநாள்கூட வொர்க் முடிஞ்சு நான் வீட்டுக்குப் போறப்போ, விடியற்காலை மூணு மணி ஆயிடுச்சு. லதா இதுக்கு அட்ஜெஸ்ட் பண்ணிக்குவாங்கனு எனக்குத் தெரியும்!” - பொருட்காட்சி சாலை வாசலில் காரை நிறுத்தி, கீழே இறங்கி ரஜினி ஸ்டைலில் உள்ளே விரைந்தார்.

இரண்டு நிமிடங்களில் ரசிகர் கூட்டம் அரை வட்டமாக வேலி போட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்க, சுறுசுறுப்பாக மேக்கப் ஆரம்பமாகிறது.

Latha Rajinikanth
Latha Rajinikanth
Ananda Vikatan Archives - 1981

‘‘யூ நோ சம்திங்... ஸ்மோக்கிங், டிரிங்க்கிங் ரெண்டையும் நான் இப்போ ரொம்பக் குறைச்சுட்டேன்” என்றார் ரஜினி.

‘‘மேலிடத்து உத்தரவோ..?”

“நோ... நெவர்...” என்றார் அழுத்தமாக.

“என்கிட்டே ஒரு ஹேபிட்... யாராவது ஒரு காரியத்தைச் செய்யாதேனு சொன்னா, அதையே அதிகமாப் பண்ணுவேன். செய்துதான்  ஆகணும்னு கம்ப்பெல் பண்ணினா, நிச்சயம் அதைச் செய்ய மாட்டேன்.”

சமீப நாட்களில் பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்ட தன் திருமணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார் ரஜினி.

‘‘எனக்கு மனைவியா வரப்போறவ இப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசை ரொம்ப நாளா என் மனசில் இருந்தது. ஆனா, மனசிலே இருந்த வடிவத்தை என்னால சரியானபடி விளக்க முடியலே. பல பெண்களோட பழகக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. எல்லோருமே அழகாத்தான் இருந்தாங்க. ஆனா, யாருமே மனசுல நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த பெண்ணைப் பிரதிபலிப்பது மாதிரி இருக்கலே. அதனாலே அவங்ககூட ஒரு நட்புமுறையிலேதான் பழகினேன். யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலே... யாரையும் ஏமாத்தவும் இல்லை.”

‘ஷாட் ரெடி’ என்ற குரல் வரவே, நடிப்பதற்குப் போனார். ‘டேப்’பில் பாடல் ஒலிக்க, மூன்று மொழிகளில் மாதவியோடு காதல்.

‘கட்... ஷாட் ஓ.கே!’ - திருப்தியடைந்த படப்பிடிப்புக் குழு, அடுத்த இடத்துக்குக் கிளம்பியது.

‘‘ஒரு வெள்ளிக்கிழமை... அன்னிக்கு சௌகார் ஜானகி வீட்டிலே ‘தில்லுமுல்லு’ ஷூட்டிங்.  மாடியிலே இருந்த என்கிட்டே எத்திராஜ் காலேஜ்லேருந்து பேட்டிக்காக சில ஸ்டூடன்ட்ஸ் வந்திருப்பதா சொன்னாங்க. ஷாட் முடிஞ்சதும் கீழே போனேன். ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருந்தா. ‘ஐ யம் லதா’னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டா” என்ற ரஜினி, தனக்கு லதாவுடன் நட்பு ஏற்பட்டதைப் பற்றி, அவரோடு பழகிய நாட்களைப் பற்றி, அவரையே மனைவியாக்கிக்கொள்ள முடிவுசெய்ததைப் பற்றிக் கிடுகிடுவெனச் சொன்னார்.‘‘

‘பொல்லாதவன்’ படப்பிடிப்புக்கு மைசூர் போயிருந்தப்போ, ஐ மெட் மை பிரதர். அவர்கிட்டே லதாவைப் பற்றிச் சொன்னேன்... முதல்லே அவருக்கு ஷாக்! ‘அந்தப் பொண்ணு நம்ப காஸ்ட் இல்லேனு சொல்றே. மராத்தியிலே உனக்குக் கிடைக்காத பொண்ணா, மதராஸ்ல கிடைச்சுடப்போவுது?’னு சொன்னார்.

‘நான் சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினா, லதாவை மனைவியாக்கிக்க எனக்கு அனுமதி கொடுங்க’னு சொல்லிட்டு நான் வந்துட்டேன்.”

நெய்வேலி பெவிலியனின் நுழைவாயிலில் விளக்குகள் பிரகாசிக்க, ரஜினிக்கு அழைப்பு வந்தது. கடமையை முடித்துவிட்டு மீண்டும் பேசினார்...

‘‘யெஸ்... என் பிரதர் மதராஸ் வந்தார். லதாவைப் பார்த்தார். ஹி ஸெட் ஓ.கே.” என்ற ரஜினி, பழைய சந்தோஷம் புதுப்பிக்கப்பட மகிழ்ச்சியில் ஒரு 555 பற்றவைத்தார்.

‘‘கல்யாணம்னா உடனே டௌரி, சாப்பாட்டுச் செலவு, தாம்தூம் கலாட்டா. தீஸ் ஐ டோன்ட் லைக். பெண்களைப் பெத்துக்கிட்ட ஒரே காரணத்துக்காக எத்தனை தந்தைங்க ரூயின் (ruin) ஆயிட்டாங்கனு எனக்குத் தெரியும். நல்ல வசதியோட இருக்கிற என்னோட கல்யாணம் எளிமையா நடந்ததைக் கேள்விப்பட்டு, ரெண்டு பேராவது அவங்க வீட்டுக் கல்யாணத்தில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க மாட்டாங்களாங்கிற ஆசைதான் எனக்கு” - ரசிகர்கள் சூழ்ந்துகொள்ள, சிறிது நேரம் ஆட்டோகிராஃப் போட்டுத் தருவதில் பிஸியானார் ரஜினி.

Latha Rajinikanth
Latha Rajinikanth
Ananda Vikatan Archives - 1981

‘‘நான் என்னமோ எல்லாத்தையும் மறைச்சு, திருட்டுத்தனமா தாலி கட்டிட்டேன்னு சில பேர் நினைக்கிறாங்க. இட் இஸ் நாட் ஸோ... நடிக்க வந்த பின் நாங்க பப்ளிக் பிராப்பர்ட்டிதான். பட், எங்களுக்கு பிரைவஸியே கிடையாதா? எங்களுக்குன்னு சில பாலிஸி இருக்கக் கூடாதா? நாங்க இப்படித்தான் இருந்தாகணும்னு சட்டமா? கோயிலுக்குப் போய் கடவுள் சாட்சியா தாலி கட்டணும்னு நான் விரும்பினது தப்பா?” - கொஞ்சம் சீரியஸாகவே பேசினார் ரஜினி.

‘‘அன்னிக்கு பத்திரிகை நண்பர்களை வீட்டுக்கு வரவழைச்சு, இதையேதான் சொன்னேன்.

நானும் லதாவும் மாலை போட்டுக்கிட்டு முன்கூட்டியே எடுத்துவெச்சிருந்த போட்டோவை அவங்ககிட்ட கொடுத்து, ‘நாளைக்கு திருப்பதியிலே என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும், நீங்க இந்த போட்டோவைப் போடுங்க’னு கேட்டுக் கிட்டேன்” என்று சொன்னபோது ரஜினி கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவது மாதிரி தெரிந்தது.

‘‘இப்போ உங்ககிட்டே சொல்றேன்... திருப்பதி கோயில்லே மாலை மாற்றி, தாலி கட்ட நான் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி வெச்சிருந்தேன். அங்கே பத்திரிகைக்காரர்களும் ரசிகர்களுமா வந்து கூட்டம் சேர்ந்துட்டா, என் பெயர் கெட்டுவிடுமோனு அஞ்சினேன். இத்தனை ஏன்? சினிமா ஃபீல்டுல ஒருத்தரைக்கூட நான் இன்வைட் பண்ணலையே. கூட்டம் வேண்டாங்கிறதுக்காக ரெண்டு பேரைக் கூப்பிட்டு நாலு பேரை விட்டுட்டா, நல்லா இருக்காதே.

இதையெல்லாம் கால்குலேட் பண்ணித்தான் பத்திரிகை நண்பர்களிடம், ‘திருப்பதிக்கு கேமராவோட வந்து போட்டோவெல்லாம் எடுக்காதீங்க’னு ரிக்வஸ்ட் பண்ணிக் கேட்டுக்கிட்டேன்.

‘வந்தா..?’னு ஒரு பிரஸ் நண்பர் கேட்டார்.

‘உதைப்பேன்’னு சொன்னேன்.

உடனே இன்னொருத்தர் சொன்னார், ‘அந்த மாதிரி வார்த்தைகளையெல்லாம் யூஸ் பண்ணாதீங்க. அதை நாங்க பப்ளிஷ் செய்துட்டா, பின்னாலே அசிங்கமாப்போயிடும்’னு. அந்த மாதிரி நேருக்கு நேர் தவறைச் சுட்டிக்காட்டினப்போ,  ஐ வாஸ் வெரி ஹேப்பி... உடனே ‘ஸாரி’ சொன்னேன்.

கூடவே, ‘இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு  கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. கேமராவோட யாரையாவது பார்த்துட்டா, உதைக்கிறதைத் தவிர எனக்கு வேற வழி தோணாது’னும் சொன்னேன். பிகாஸ், ஆண்டவனுக்கும் மனசாட்சிக்கும் தவிர, வேறு யாருக்குமே நான் பயப்படறதில்லே. அதோட, நான் ஒண்ணு நினைச்சுட்டேன்னா, அது எனக்கு நடந்தே தீரணும். ப்ளான் பண்ணியிருக்கிறதை மீறி எது நடந்துட்டாலும் அதை என்னாலே தாங்கிக்க முடியறதில்லே.”

Rajinikanth's Interview about his marriage - 1981
Rajinikanth's Interview about his marriage - 1981
Ananda Vikatan Archives - 1981

ரஜினியின் குடும்பத்திலிருந்து சில பேரும், லதா வீட்டினர் சிலரும் திருப்பதி சென்றனர். விடியற்காலை 3:30 மணிக்குக் கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு 4:30-க்கு லதாவின் கழுத்தில் மூன்று முடிச்சு விழுந்திருக்கிறது. உடனே கிளம்பித் திருச்சானூரில் தரிசனத்தை முடித்துக்கொண்டு, காலை 9:30 மணிக்கெல்லாம் சென்னை திரும்பிவிட்டார்கள்.10 மணிக்கெல்லாம் ஏவி.எம்-மில் ‘நெற்றிக்கண்’ செட்டிற்குப் போய் விட்டாராம் ரஜினி.

‘‘நான் அத்தனை சொல்லியும் ரெண்டு மூணு பிரஸ்காரங்க அன்னிக்கு திருப்பதி வந்துட்டாங்க. ஒருத்தர் கழுத்திலே கேமரா வேற தொங்கிட்டிருந்ததைப் பார்த்ததும் எனக்கு கோபம் வந்துடுச்சு.

கன்ட்ரோல் பண்ண முடியாம அடிக்கிறதுக்குப் போயிட்டேன். நல்லவேளை, பக்கத்திலிருந்த சிலர் என்னைத் தடுத்து நிறுத்தினாங்க.

ஒரு போட்டோகிராஃபர் எங்களைத் துரத்திட்டு திருச்சானூர் வரைக்கும் வந்துட்டார். கார்ல உட்கார்ந்துட்டிருந்த என்னிடம் `ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்’னு கேட்டார். ஒரு நிமிஷம் என் மனசு சங்கடப் பட்டது. ‘பாவம்... இவர் ஒருத்தர்தானே. போட்டோ எடுத்துக்கட்டுமே’னு தோணுச்சு. ஆனா, இவர் மட்டும் அன்னிக்கு சாயந்திரமே பத்திரிகையிலே படத்தைப் போட்டுட்டா, அது பார்ஷியலா போயிடும்கிற பயத்திலே அவருக்கும் நான் அனுமதி தரலே.

இதுதான் உண்மையில் நடந்தது. ஆனா, ரசிகர்களை நான் அடிக்கப் போயிட்டதாக சிலபேர் தவறா நியூஸ் போட்டுட்டாங்க. அப்படி எதுவுமே நடக்கலே. திருப்பதிக்கு வந்திருந்த சில ரசிகர்கள் எனக்கு மாலை போடணும்னு ஆசைப்பட்டாங்க. நானும் போட்டுக்கிட்டேன்” என்று திருப்பதி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளிவைத்தார் ரஜினி.

அன்று ‘கர்ஜனை’ முடியும்போது இரவு 11 மணிக்கு மேலாகிவிட்டது. போயஸ் கார்டனை நோக்கி 5004 பறக்க, புது மணத் தம்பதியின் தேனிலவைப் பற்றிப் பேச்சு வர...‘‘ஜூன் மாசம் ஒரு ஷூட்டிங்... கிழக்கு ஆப்பிரிக்கா போறேன். லதா இஸ் ஆல்ஸோ கமிங் வித் மி. அதுதான் எனக்கு ஹனிமூன்.” என்றார் ரஜினி.

Rajinikanth and Latha Rajinikanth
Rajinikanth and Latha Rajinikanth
Ananda Vikatan Archives - 1981

வீட்டில் நுழைந்து மாடிக்குப் போன ரஜினிக்கு, ஓர் இனிமையான அதிர்ச்சி. அடுத்த நாள் விடியற்காலை அவருடைய பெங்களூர் பயணத்துக்காக இரண்டு சூட்கேஸ்களில் துணிகள் ரெடியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. பெட்டியின் மீது இரண்டு விமான டிக்கெட்டுகள்.

‘‘ஓ! இதெல்லாம் லதாவோட வேலையா? நான் காலையிலே எழுந்து பரக்கப்பரக்க பேக் பண்ணுவதுதானே பழக்கம்...” - செல்லமாக லதாவின் கன்னத்தை ரஜினி தட்டிக்கொடுக்க, அவருக்கு ஏக சந்தோஷம்.

‘‘யெஸ்... நாளைக்கு பெங்களூர் போய் என்னோட அப்பாகிட்டே ஆசி வாங்கி வரப்போறோம். அப்படியே என்னோட பழைய கண்டக்டர் நண்பர்களையும் மீட் பண்ணி ரிசப்ஷனுக்கு இன்வைட் பண்ணணும்” என்றார் ரஜினி.

எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ., இறுதி ஆண்டு படிக்கும் லதாவை, ‘ஜில்லு’ எனச் செல்லமாக அழைக்கிறார் ரஜினி. ‘ஜில்லு’வின் இடுப்பில் கொத்துச்சாவி தொங்கிக்கொண்டிருந்தது. அவர் கொஞ்சமாகப் பேசுகிறார். அதையும் மெதுவாகவே பேசுகிறார். நிறையச் சிரிக்கிறார். மே மாதம் தேர்வு முடிந்ததும் வீட்டில் சமையலறைக்குள் பிரவேசிக்கப்போவதாகச் சொன்னார்.ரஜினியைப் பற்றி லதாவின் கருத்து: ‘‘He is a wonderful man!’’

- வீயெஸ்வி, பாலா

(திருமணத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் 22.03.1981 தேதியில் ஆனந்த விகடன் இதழிலிருந்து...)