Published:Updated:

``பாஸ்போர்ட்டை பறிகொடுத்த ரஜினி மருமகன்...”- லண்டன் விமான நிலையத்தில் நடந்தது என்ன?

தூதரக அதிகாரிகள் வந்து இருவரிமும் விசாரித்தபோதுதான் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி மகள், மருமகன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

Soundarya - Vishakan
Soundarya - Vishakan

சூப்பர் ஸ்டாரின் மருமகனாக இருந்தாலும், அந்நிய நாட்டில் பையைப் பறிகொடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் தவித்தால் என்ன நடக்கும் என்பதை நேரடியாக அனுபவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்தின் மருமகன் விசாகன்.

Soundarya - Vishakan
Soundarya - Vishakan

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. கோவையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருக்கும் சௌந்தர்யாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.

விசாகன், வெளிநாட்டில் தொழில் செய்துவருகிறார். சௌந்தர்யா தமிழ்த் திரைப்படத் துறையில் சில பணிகளை மேற்கொண்டுவருகிறார். தொழில் நிமித்தமாக விசாகன் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சௌந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகருக்குச் சுற்றுலா செல்ல முடிவுசெய்தார்கள். அதற்காக சென்னையிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் லண்டன் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். பிசினஸ் கிளாஸ் வகுப்பில் கணவன் மனைவி இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டு தம்பதியர் பயணம் மேற்கொண்டனர். சென்னையிலிருந்து கிளம்பிய விமானம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை அடைந்துள்ளது.

Heathrow Airport
Heathrow Airport

விமானத்திலிருந்து விசாகன், தன் மனைவி சௌந்தர்யாவுடன் இறங்கி விமான நிலையத்துக்குள் வந்துள்ளார். எமிரேட்ஸ் சேவை மையத்தில் வந்து தனது பாஸ்போர்ட் பேக்கை விசாகன் எடுக்க முயன்றபோது, பாஸ்போர்ட் பிரிப்கேஷ் காணாமல் போனதுகண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர், எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்ததும், அவர்கள் வந்த விமானத்தில் தேடியுள்ளார்கள்.

விமானத்திலும் அந்தப் பை இல்லை. பாஸ்போர்ட் மட்டுமல்லாமல், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் அந்தப் பையில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஸ்போர்ட் இல்லாமல் விமான நிலையத்தைவிட்டு விசாகன் - சௌந்தர்யா இருவரும் வெளியேற முடியாத நிலையில் விமான நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்கள். அவர்களும் புகாரைப் பதிவு செய்துகொண்டு விமான நிலையத்தில் உள்ள ஓய்வறையில் இருவரையும் தங்க வைத்துவிட்டார்கள். இந்தத் தகவல் உடனடியாக இந்தியத் தூதரகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajini- Vishakan - Soundarya
Rajini- Vishakan - Soundarya

தூதரக அதிகாரிகள் வந்து இருவரிமும் விசாரித்தபோதுதான் விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள், மருமகன் என்பதையறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதன்பின், துரிதமாகச் செயல்பட்டுள்ளனர் இந்தியத் தூதரக அதிகாரிகள். உடனடியாக டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு விமான நிலையத்தில் என்ட்ரி போடப்பட்டு இருவரும் வெளியே வந்துள்ளார்கள். தன் மகள் லண்டன் விமான நிலையத்தில் சிக்கிய தகவல் ரஜினிக்குத் தெரிந்து, அவரும் தனக்கு வேண்டிய நண்பர்களை லண்டனில் தொடர்புகொண்டு சொன்னதால், லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தில் இரண்டு மணிநேரம் கடும் பரபரப்பு நிலவியதாகத் தகவல்கள் கூறுகின்றன. விசாகன் அளித்த புகாரை அடிப்படையாக வைத்து அவருடைய கைப்பையைத் திருடியவர் யார் என்று சிசிடிவி கேமரா மூலம் ஆராய்ந்துவருகிறது லண்டன் காவல்துறை.