ரஜினி நலமா... மீண்டும் தள்ளிப்போன ‘அண்ணாத்த’ ஷூட்டிங்... காரணம் என்ன?!

சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் 'இஸ்கான்' கோயிலுக்கு அருகில் இருக்கும் கேரள ஹவுஸில்தான் படப்பிடிப்பு நடத்த செட் போடப்பட்டது.
ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் நாளை தொடங்குவதாக இருந்தது. ஆனால், திடீரென இப்போது ஷூட்டிங் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நிலை காரணமாக டிசம்பர் மாதம் நடந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு முன்பாக பட ரிலீஸை திட்டமிட்டிருக்கும் சன் பிக்சர்ஸ் இந்தப்படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் மார்ச்சில் தொடங்க திட்டமிட்டது. சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் 'இஸ்கான்' கோயிலுக்கு அருகில் இருக்கும் கேரள ஹவுஸில்தான் படப்பிடிப்பு நடத்த செட் போடப்பட்டது.
முதலில் மார்ச் 8-ம் தேதி ஷூட்டிங் தொடங்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வாரம் தள்ளி மார்ச் 15 முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இதுதொடர்பாக 'அண்ணாத்த' படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ''கொரோனா பீதி ஓரளவு குறைஞ்சதால மார்ச் இரண்டாவது வாரத்துல ஷூட்டிங்னு முடிவு செஞ்சு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணாங்க. மார்ச் 17-ம் தேதியில இருந்து மூணு நாளைக்கு ரஜினி, நயன்தாரா நடிக்கிற காட்சிகள் இங்க எடுக்குறதா பிளான் இருந்தது.
ஆனா, இப்ப ஷூட்டிங்கை கேன்சல் பண்ணியிருக்காங்க. 'அடுத்த ஷெட்யூல் எப்போன்னு சொல்றோம்'னு மட்டும்தான் படத்தின் யூனிட் தரப்புல இருந்து சொல்லப்பட்டிருக்கு’’ என்கிறார்கள்.
‘அண்ணாத்த’ ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டதற்கு ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவே காரணம் என்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன் திடீரென உடல் நலனில் சிறு பிரச்னை வந்தபோது, ''சரியாகிடுவேன்... ஷூட்டிங் கிளம்பலாம்'' என்றே சொன்னாராம் ரஜினி. ஆனால், தயாரிப்புத்தரப்பில் ரிஸ்க் வேண்டாம் என சொல்லப்பட்டதாம்.
ரஜினியின் குடும்பத்தினரும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் ஷூட்டிங் போவது சரியானதாக இருக்காது எனச்சொல்லியிருக்கிறார்கள்.