Published:Updated:

" 'தி தி பியார் தி' படத்துல ஏன் கிளாமரா நடிச்சேன்னா..." - ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங் ( ஜீவாகரன் .தி )

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் `என்.ஜி.கே' படம் குறித்தும் தன் பிற திரைப்படங்கள் குறித்தும் பேசியிருக்கிறார், நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக சேர்ந்து நடிப்பவர் நடிகை ரகுல் ப்ரீத்திசிங். 'தடையற்ற தாக்க' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் ஹிட் அடித்தது. கார்த்தியுடன் தொடர்ந்து 'தேவ்' படத்தில் நடித்தவர் தற்போது செல்வராக இயக்கியிருக்கும் 'என்.ஜி.கே' படத்தில் நடித்திருக்கிறார். படம் குறித்து ரகுல் அளித்த பேட்டி.

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்
ஜீவாகரன் தி

``கண் இமையைக்கூட அசைக்காம ஒரு ஷாட்ல நடிச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்?"

``ஆமா, இந்த ஷாட்ல நடிச்சது ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஷாட் ரெடியாகுறதுக்கு முன்னாடி பலமுறை கண் இமையை அசைச்சுப் பார்த்துப்பேன். டேக் சொல்லிட்டா, கண்ணை அசைக்காம நிற்பேன். பத்து வரிக்கு வசனம் இருந்தாலும், கண் இமையை அசைக்காமப் பேசணும். நான் மட்டுமல்லாம, சாய் பல்லவி, சூர்யா எல்லோரும் இந்த ஷாட்ல அப்படித்தான் நடிச்சோம். ஃபைனல் டேக் ஓகே ஆனதுக்குப் பிறகு, மானிட்டரைப் பார்க்கிறப்போ, அந்தக் காட்சி ரொம்ப நல்லா வந்திருந்தது. அதைப் பார்க்கிறப்போதான், அந்தக் காட்சியோட முக்கியம் புரிஞ்சது."

" 'தி தி பியார் தி' படத்துல ஏன் கிளாமரா நடிச்சேன்னா..." - ரகுல் ப்ரீத் சிங்

"செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா காம்போ ரசிகர்களுக்கு எப்போவுமே ஸ்பெஷல். உங்களுக்கு எப்படியிருந்தது?"

``ரொம்ப நல்லாயிருந்தது. இந்தப் படத்துல அதிகமா பாடல் இல்லை. `அன்பே பேரன்பே' பாட்டு என்னோட ஃபேவரைட். ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு இதுன்னு நினைக்கிறேன்."

"செல்வராகவன் படங்களில் லாங் ஷாட்ஸ் இருக்கும். உங்களுக்கு அப்படி ஏதாவது இருந்ததா?"

``ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போதும் கிளாப் போர்டு இருக்காது. அதனால, நாம எவ்வளவு டேக் போறோம்ங்கிறது தெரியாது. செல்வராகவன் சாரோட ஷூட்டிங் ஸ்டைல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இதுவரைக்கும் அப்படி ஒரு ஷூட்டிங்கை வேற எங்கேயும் பார்த்திருக்க முடியாது. ஒரு ஷாட்டுக்கு என்ன ரியாக்‌ஷன், எங்கே நிற்கணும், எவ்வளவு பேசணும், மூச்சு எப்படி விடணும்ங்கிறதைக்கூட தெளிவா சொல்லித் தருவார். நாம ஒரு காட்சியில நடிக்கிறப்போ, மனசு முழுக்க அந்தச் சிந்தனையிலேயே இருக்கும். லாங் ஷாட்ஸ்ல நடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, அதையும் ரசிச்சுப் பண்ண வைப்பார்."

"சூர்யாவுடன் நடித்த அனுபவம்?"

"செல்வா சார் படமாச்சே இது! நானும், சூர்யா சாரும் ரொம்ப ரிலாக்ஸா நடிச்சோம்னே சொல்லலாம். செல்வா சார் டைரக்‌ஷன், சூர்யா சார்கூட ஆக்டிங்... ஆனா, தினமும் ஷூட்டிங் முடிச்சுட்டு வீட்டுக்குப் போகும்போது, மனசும் உடம்பும் ரொம்ப ரிலாக்ஸா இருக்கும். ரெண்டுபேருமே நம்ம கவனம் முழுக்க நடிப்புல மட்டுமே இருக்கிற மாதிரி பார்த்துப்பாங்க."

"படத்துக்காக என்னென்ன ஹோம்வொர்க்ஸ் பண்ணீங்க?"

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை. செல்வா சார் சொன்னதைச் செஞ்சேன். ஏன்னா, நான் ஏதாச்சும் பிரிபேர் பண்ணிட்டு வர, செல்வா சார் ஷூட்டிங்ல மொத்தமா மாத்திட்டா என்ன பண்றது... அதனால, தினமும் எந்த முன்னேற்பாடும் இல்லாமதான் ஷூட்டிங் போயிட்டு வந்தேன்."

"சாய் பல்லவிகூட நடிச்ச அனுபவம்?"

"எங்க ரெண்டுபேருக்கும் வேற வேற ட்ராக்ல சீன்ஸ் இருக்கும். அவங்க நல்ல நடிகைன்னு எல்லோருக்கும் தெரியும். செல்வா சார் படத்துல எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். நந்தகோபாலன் குமரன் அரசியலுக்குப் போறார். அவருடைய வாழ்க்கையில சந்திக்கிற ரெண்டு பெண்கள் அதுக்கு எந்தளவுக்கு உறுதுணையா இருக்காங்க. இதுதான் படத்தோட களம். மத்ததைப் படம் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க."

"தமிழ், தெலுங்கு, இந்தி... மூணு மொழிகள்ல நடிக்கிறீங்க. கதையை எப்படித் தேர்ந்தெடுப்பீங்க?"

"நிறைய இயக்குநர்கள், நடிகர்கள்கூட படம் பண்றேன். எப்போதுமே முழுக் கதையையும் கேட்பேன். அதுல என் கேரக்டர் எந்தளவுக்கு அழுத்தமா இருக்குனு பார்ப்பேன். எனக்குக் கொஞ்சம் பிடிக்கலைன்னாலும், அந்தப் படத்துல கமிட் ஆகமாட்டேன். இந்தியில் நான் நடிச்ச `தி தி பியார் தி'யில கிளாமர் ரோல் பண்ணியிருக்கேன். ஏன்னா, அந்தப் படத்துல எனக்கு ஸ்கோப் அதிகம். மொத்தம் மூணு கேரக்டர்களைச் சுத்திதான் படம் நகரும். தவிர, அது ஒரு சூப்பர் கேரக்டர். கிளாமர் இருக்கோ இல்லையோ... நல்ல கதைகள்தான் என் சாய்ஸ்!" 

அடுத்த கட்டுரைக்கு