Published:Updated:

"வடிவேலுக்கு `நேசமணி'னு பேரு வெச்சது யாரு தெரியுமா?" சுவாரஸ்யம் பகிரும் `கிருஷ்ணமூர்த்தி' ரமேஷ் கண்ணா!

சமூக வலைதளங்களில் இன்று டிரெண்ட்டில் இருக்கும் 'நேசமணி' கேரக்டர் குறித்து ரமேஷ் கண்ணாவிடம் பேசியதிலிருந்து...

ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

'ப்ரண்ட்ஸ்' படத்தில் நடிகர் வடிவேலு நடித்த நேசமணி கேரக்டர் இந்தியா முழுக்க டிரெண்டாகிக்கொண்டிருக்கிறது. மலையாள இயக்குநர் சித்திக் எடுத்திருந்த இந்தப் படத்தில் விஜய், சூர்யா, தேவயாணி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். சமூக வலைதளங்களில் இன்று டிரெண்ட்டில் இருக்கும் 'நேசமணி' கேரக்டர் குறித்து ரமேஷ் கண்ணாவிடம் பேசினேன்.

ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

''இரவுலிருந்து என்னை யாரும் தூங்கவிடல. நான் ஏதோ நேசமணியை கொலை பண்ணிட்ட மாதிரி எல்லாரும் எனக்கு போன் பண்ணிட்டு இருக்காங்க. 'நேசமணியோட' நிலைமைக்காக இயக்குநர் சித்திக் சாரைதான் கைது பண்ணனும். அவர் சொன்னதைதான் நான் பண்ணுனேன். '' என்று படத்தில் வரும் கிருஷ்ணமூர்த்தியாகவே பேசுகிறார் நடிகர் ரமேஷ் கண்ணா.

"சமூக வலைதளங்களில் 'நேசமணி' டிரெண்டாகிட்டு இருக்கிற விஷயம் தெரிஞ்சவுடனே சித்திக் சாரை போனில் கூப்பிட்டேன். 'பிக் பிர்தர்' படத்தோட ஷூட்டிங்யில் பிஸியா இருக்கிறனால அவர் என்னோட போனை எடுக்கல. வீட்டுல இருக்கிற என்னோட பசங்க ரெண்டு பேரும் இந்த டிரெண்ட் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. நேசமணியோட நிலைமைக்குக் கவலை தெரிவிக்கிற விதமா கிருஷ்ணமூர்த்தியை உள்ளே தள்ளனும்னு சொல்லிட்டு இருக்காங்க. என்னோட சித்தப்பா நேசமணி என்னை படாதபாடுபடுத்தியிருக்கார். நான் தூங்கிட்டு இருக்கிறப்போ எட்டி உதைச்சு இருக்கார். அப்போ யாரும் கிருஷ்ணமூர்த்திகாக சப்போர்ட் பண்ணல. அப்புறம் என்னோட நண்பர்கள் சந்துரு, அர்விந்துக்கு சாப்பாடு மட்டும்தான் போடுவேன். சம்பளம் கிடையாதுனு சொன்னார். அப்போதும் யாரும் கேட்கல. அவர் மேலே எனக்குக் கோபம் இருந்தது. இருந்தும் அவர் மேலே நான் சுத்தியலை வேணும்னு தூக்கிப் போடல''னு கிருஷ்ணமூர்த்தியா பதில் சொன்ன நடிகர் ரமேஷ் கண்ணா 'ப்ரண்ட்ஸ்' படத்தின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நேசமணி
நேசமணி

"'ப்ரண்ட்ஸ்' படம் மலையாளப் படத்தோட ரீமேக். ஜெயராம், முகேஷ், ஶ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிச்சிருந்தாங்க. ஶ்ரீனிவாசன் கேரக்டர் தமிழில் நான் பண்ணினேன். நான் நடிச்ச 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தை பார்த்துதான் சித்திக் சார் என்னை இந்தப் படத்துகாக கமிட் பண்ணுனார். முதலில் இந்தப் படத்துல நடிக்க யோசிச்சேன். சரிதா மேடம் போன்பண்ணி, ' ப்ரண்ட்ஸ் படம் எடுக்கப் போறாங்க. நீங்க அதுல நடிக்கணும்'னு கேட்டாங்க. உடனே ஓகே சொல்லிட்டேன். படத்தோட ரீ ரெக்கார்டிங்போது இளையராஜா சார், 'மலையாளத்துல ஶ்ரீனிவாசன் நல்ல நடிச்சிருப்பார். இவரோட கேரக்டர் யார் பண்ண போறார்னு ரொம்ப கவலைப்பட்டேன். ரமேஷ் கண்ணா நல்லா நடிச்சிட்டார், நல்ல தேர்வு'னு சொன்னார். இதுதான் இந்தப் படத்துக்காக எனக்கு கிடைச்ச முதல் பாராட்டு.

முதலில் இந்தப் படத்துல நடிக்க நான், சூர்யா, விஜய், ஜோதிகா, சுவலட்சுமிதான் கமிட் ஆனோம். போட்டோ ஷூட்டெல்லாம் நடந்தது. அப்புறம் ஏதோ காரணங்களால் இது நடக்கமா போக தேவயாணி மேடம் நடிச்சாங்க. விஜய், சூர்யா ரெண்டு பேரும் வயசுல சின்னவங்களா இருந்தாலும் இந்தப் படத்துல எப்படி ப்ரண்ட்ஸா ஒண்ணா ஜாலியா பேசிட்டு இருந்தோமோ அதே மாதிரிதான் செட்லயும் இருந்தோம்.

வடிவேலு
வடிவேலு

இந்தப் படத்துல நடிச்சப்போ நானும் வடிவேலும் காமெடி பண்ற மாதிரியே பண்ண மாட்டோம். யதார்த்தமா நடிச்சிட்டு போயிருவோம். ஆனா, விஜய், சூர்யா ரெண்டு பேரும் எங்களுடைய காமெடி பார்த்துட்டு சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சிருவாங்க. இதனாலேயே நிறைய டேக் போயிருக்கு. தமிழில் இந்தப் படத்துக்கு வசனம் எழுத்தாளர் கோகுல் கிருஷ்ணன் எழுதியிருந்தார். அவர்தான் வடிவேலுக்கு 'நேசமணி'னு பேர் வச்சார். இன்னைக்கு இந்தப் பேர் இவ்வளவு ஃபேமஸ் ஆகும்னு அன்னைக்கு செட்ல இருந்த நாங்க யாரும் எதிர்பார்க்கல. இப்போகூட சித்திக் சார் நினைத்தால் எங்க எல்லாரையும் வச்சு 'ப்ரண்ட்ஸ் 2' எடுக்கலாம்" என்று சந்தோஷமாக முடித்தார் ரமேஷ் கண்ணா.

#நேசமணி ட்ரெண்ட்டிங்
#நேசமணி ட்ரெண்ட்டிங்