Published:Updated:

ஜெ.வாக ரம்யா கிருஷ்ணன்; சசிகலா கதாபாத்திரம் இல்லாத ஜெ.வின் பயோபிக்!

jayalalitha web series
jayalalitha web series

`குயின்' வெப் சீரிஸின் படப்பிடிப்பு இரண்டு யூனிட்டாகச் செயல்பட்டு வருகிறது. ஜெ கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்குகிறார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்படமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. முதலில் இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தார். இவர் ஏற்கெனவே வரலட்சுமி சரத்குமார் நடித்த `சக்தி' படத்தை டைரக்‌ஷன் செய்தவர்.

அடுத்ததாக இயக்குநர் விஜய், ஜெயலலிதாவின் வாழ்க்கையை `தலைவி’ என்கிற பெயரில் படமாக்கப் போவதாக அறிவித்தார். இதில் ஜெ.வாக கங்கணா நடிக்கிறார் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

அடுத்து மும்பையில் உள்ள ஒரு பெரிய ஃபைனான்ஸியர் சென்னைக்கு வந்து, `நீங்கள் ஜெ மேடம் வாழ்க்கையைத் திரைப்படமாக இயக்கித் தரவேண்டும்; அந்தப் படத்துக்கு எத்தனை கோடிகள் பட்ஜெட் செலவானாலும் பரவாயில்லை' என்று பாரதிராஜாவிடம் கேட்டனர். முதலில் சம்மதம் சொன்னவர். அதன்பிறகு, `எம்.ஜி.ஆர், கருணாநிதியைத் தவிர்த்துவிட்டு ஜெ வாழ்க்கையைப் படமாக்க முடியாது. ஜெ- தோற்றம் உள்ள நடிகையை செலக்ட் செய்துவிடலாம். எம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜி போன்ற தோற்றம் உள்ளவர்களை கண்டுபிடித்து நடிக்கவைப்பது எளிதான காரியமல்ல’ என்று ஜெ பயோபிக் எடுப்பதைத் தவிர்த்துவிட்டார், பாரதிராஜா.

தற்போது சத்தம் இல்லாமல் ஜெயலலிதா வாழ்க்கையை வெப் சீரிஸாக இயக்கி வருகிறார், இயக்குநர் கெளதம் மேனன்.

ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க-வில் கொள்கை பரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல்வராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி படத்துக்கு `குயின்' என்று பெயர் சூட்டி இருக்கிறார். ஜெ பயோபிக்கில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ஏற்கெனவே `படையப்பா' படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்து பரபரப்பை உண்டாக்கிய ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். இவரின் ஒருநாள் கால்ஷீட்டுக்கு 10 லட்சம் சம்பளமாம்.

Ramya Krishnan
Ramya Krishnan

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த `இவன் வேற மாதிரி' படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா, சோபன்பாபு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

`குயின்' வெப் சீரிஸின் படப்பிடிப்பு இரண்டு யூனிட்டாகச் செயல்பட்டு வருகிறது. ஜெ கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் காட்சிகளை எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, கெளதம் மேனன் இயக்குகிறார். இன்னொரு பக்கம் சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் `விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவில் `கிடாரி' பிரசாத் முருகேசன் டைரக்‌ஷன் செய்கிறார்.

``கெளதம் மேனன் சொன்னா நூறாவது மாடியில இருந்துகூடக் குதிப்பேன்!" - நடிகரானது குறித்து மகிழ் திருமேனி

ஜெ நடிகையாக இருந்தபோது போயஸ் கார்டன் வேதா இல்லம் பழைய மாடலில் இருந்தது. இப்போது நவீனமயமாக இருப்பதால் அதேபோன்று பழைமை மாறாத தோற்றம் கொண்ட பங்களா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள கார்டனில் இருக்கிறது. ஜெ இளமைத் தோற்றமுடன் நடிக்கும் காட்சிகளை ஏ.வி.எம் கார்டன் பங்களாவில் படமாக்கி இருக்கிறார்கள்.

Indrajith
Indrajith

ஜெயலலிதாவின் சினிமா வாழ்விலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, திருப்புமுனை உண்டாக்கியவர் எம்.ஜி.ஆர். அவரின் கதாபாத்திரத்தை மலையாள நடிகர் பிருதிவிராஜின் சகோதரர் இந்திரஜித் நடித்து இருக்கிறார். முக்கியமாக சசிகலா கதாபாத்திரம் இந்த பயோபிக்கில் இல்லையாம். ஜெயலலிதாவின் பயோபிக், மொத்தம் ஆறுமணி நேரம் ஓடக்கூடிய வெப் சீரிஸாகப் படமாக்கி உள்ளனர். விரைவில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `குயின்' வெப் சீரிஸ் மக்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு