Published:Updated:

``பெண்ணின் உடைதான் பிரச்னையா? வன்புணர்வு குற்றவாளிகளிடம் பிரச்னை இல்லையா?"- இயக்குநர் ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்
ரம்யா நம்பீசன்

நடிகை ரம்யா நம்பீசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குறும்படம், `Unhide'. பெண்களை மையமாகவைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து இவரிடம் பேசினோம்.

``நான் நடிச்சிட்டிருக்கிற சினிமா மேல எப்பவுமே பெரிய மரியாதை இருக்கும். இதன் மேல இருக்கிற காதலினால்தான் இந்தத் துறைக்குள்ள வந்து ஜெயிச்சிட்டிருக்கோம். ஒவ்வொரு காட்சிக்கும் பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுறாங்கன்னு தெரியும். பொதுவெளியில நிறைய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுறாங்க. பெண்கள் மட்டும் கிடையாது குழந்தைகளும் ஆண்களும்கூட. மிருகம்கூட இப்படியெல்லாம் நடந்துக்காது. இந்த உலகத்துல வாழ்றதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு."

unhide
unhide

``இந்த நிலையில தினமும் நியூஸையும், பேப்பரையும் பார்க்கிறப்போ பெண்கள் பாதிக்கப்படுறது அப்பட்டமா தெரியும். சமீபத்துல நடந்த ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணம்கூட, `பெண்களுக்கு ஏன் இப்படி நடக்குது'னு கேள்வி கேட்க வைக்குது. `இப்படி ஏன் டிரெஸ் பண்ற, நைட் எதுக்காக வெளியில போறீங்க'ன்னு எல்லோரும் பெண்களைத்தான் குறை சொல்றாங்க, கேள்வி கேட்குறாங்க. ஹைதராபாத் மருத்துவர் மரண செய்தி வந்தப்பகூட இப்படிதான் கேள்வி கேட்டாங்க. இதைக் கேட்கும்போது ரொம்ப மனவருத்தமா இருக்கு. பெண்களுடைய நடவடிக்கைதான் பிரச்னையா, வன்புணர்வு பண்றவங்ககிட்ட எந்தப் பிரச்னையும் இல்லையா... அவங்களோட பார்வை தப்பு இல்லையா? இதுக்கெல்லாம் நாம என்ன பண்ணலாம்னு தோணுச்சு. அம்மா, அப்பா, சிஸ்டர், பிரதர்னு எந்த உறவா இருந்தாலும் அதைச் சரியா கையாளணும். நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கணும். ஆண், பெண் வேறுபாடு இல்லாம மனிதர்களா மதிக்கப்படணும். என்னை மனுஷியா பார்த்தாலே போதும்னு சொல்லத் தோணுச்சு."

``இப்படி ஒரு கதைக்கரு எனக்குள்ள யோசனையா வந்தப்பவே பத்ரி வெங்கடேசன்கிட்ட சொன்னேன் `சூப்பர் ரம்யா... இதை நீங்களே டைரக்ட் பண்ணுங்க. அப்போதான் உங்க உணர்வுகளை சரியா பதிவுபண்ண முடியும்'னு சொன்னார். ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்ச பிறகு, தமிழ் தெரிஞ்ச ஒருத்தர் வசனம் எழுதினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பத்ரியே எனக்காக வசனம் எழுதிக் கொடுத்தார். அவரோட வசனங்கள் அழுத்தமானதா இருந்தது. சரியான கேள்விகளால பன்ச் பண்ணதுனுகூட சொல்லலாம். ரொம்பவும் எனக்காக வொர்க் பண்ணிக் கொடுத்தார். வாய்ஸ் ஓவர் இருக்கணும்னு எனக்குள்ள இருந்த கற்பனையை அப்படியே ஒளிப்பதிவுக்குள்ள கொண்டு வந்துட்டேன்."

``பெண்ணின் உடைதான் பிரச்னையா? வன்புணர்வு குற்றவாளிகளிடம் பிரச்னை இல்லையா?"- இயக்குநர் ரம்யா நம்பீசன்

``தமிழ்லதான் படத்தை ஷூட் பண்ணேன். மலையாளம் பேசுறவங்களுக்கு தமிழ் தெரியும்கிறதால, எனக்கு சுலபமா போயிடுச்சு. இங்கிலீஷ் சப்-டைட்டிலும் வரும். நீன் சுன்னானு ஒரு மலையாள ஒளிப்பதிவாளர் இதுல பணியாற்றியிருக்கார். `தில்லுக்கு துட்டு2' படத்தோட ஹீரோயின் ஸ்ரிதா ஷிவதாஸும் என்னோட சேர்ந்து இதுல நடிச்சிருக்காங்க. ரெண்டு நாள்ல இதோட ஷூட்டை முடிச்சிட்டோம். `Ramya Nambeesan Encore'னு ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பிச்சிருக்கேன். இது மூலமா என்னோட ஐடியாக்களை, க்ரியேட்டிவிட்டியை ரசிகர்களுக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்னோட இயக்கத்துல உருவாகியிருக்கிற இதை, முதல்ல ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். இதுக்காக, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உதவி பண்ணாங்க. படத்தைப் பார்த்துட்டு அவங்களும் நல்ல கமென்ட்ஸ் கொடுத்தாங்க. எனக்கு சந்தோஷமா இருந்தது."

``எனக்குப் பிடிச்ச பிளாட்ஃபார்ம் மூலமா இதைக் கொண்டு வந்ததுல எனக்கு சந்தோஷம். நடிகை, பாடகியைத் தொடர்ந்து என்னோட பெயருக்கு முன்னால `இயக்குநர்'னு இருக்கிறதைப் பார்க்கிறப்ப பெருமையா இருக்கு. இதுக்காக நிறைய கள ஆய்வு நடத்தணும், புத்தகங்கள் படிக்கணும். இதே மாதிரி ஒரு முழு நீளப் படம் எடுக்கணும்னு ஆசையா இருக்கு. வேலைக்குப் போற நிறைய பெண்களும் இப்போ Me too பிரச்னையைப் பத்தி பேசுறது ஆரோக்கியமான விஷயம். தனக்கு நடந்த அநீதியை தைரியமா வெளியில சொல்ற ஒவ்வொரு பெண்ணையும் நான் மதிக்கிறேன். இதனால, சமூகத்தின் மேல இருக்கிற நம்பிக்கையும் அதிகமாகுது. கதையை முடிக்கும்போது, `Live and let live`முடிச்சிருப்பேன். இதை எல்லாம் ஃபாலோ பண்ணாலே நல்லா இருக்கும்'' என்கிறார் ரம்யா நம்பீசன்.

அடுத்த கட்டுரைக்கு