Published:Updated:

`இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு நீக்கம்! - பின்னணி என்ன?

லைகா நிறுவனத்துக்கு முதல்பிரின்ட் அடிப்படையில் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தை தயாரித்துத் தருவதாக இயக்குநர் ஷங்கர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு இயக்குநர் சிம்புதேவன் வடிவேலுவிடம் முழுக்கதையையும் சொன்னார்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு

சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் புராணக் கால ஸ்டைலில் ஒரு கோடி ரூபாய்க்கு பிரமாண்டமாக இரண்டு வகை செட்டுகள் போடப்பட்டன. முதலில் வடிவேலு அளவு கொடுத்து அங்கீகரித்த, அரசர் கால உடையை அணிந்துகொண்டு, பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டிருந்தார், இயக்குநர் சிம்புதேவன்.

வடிவேலு செட்டுக்குள் வரும்போது கேமரா சுழன்றது. திடீரென ஷூட்டிங்கை நிறுத்தச் சொன்னவர், `எனக்குக் காஸ்ட்யூம் பிடிக்கவில்லை.இந்தப் பாட்டும் பிடிக்கவில்லை எனக் கூற அதிர்ந்து போனார்கள். ஈவிபி ஸ்டூடியோவை விட்டுக் கிளம்பிய வடிவேலு யாரிடமும், சொல்லாமல் கொள்ளாமல் திடீரென விமானம் ஏறி மதுரைக்குப் பறந்தார். `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்துக்காக மொத்தமாக 70 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருந்த வடிவேலு, 10 நாள்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

24-ம் புலிகேசி பட போஸ்டரில் வடிவேலு
24-ம் புலிகேசி பட போஸ்டரில் வடிவேலு

`இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. தொடர்ந்து வடிவேலுவால் பல சிக்கல்கள் ஏற்பட்டதால், ஷங்கர்,வடிவேலு மீது புகார் கொடுத்தார். இறுதியாக ஷங்கர் தரப்பிடமும், வடிவேலுவிடம் சமாதானம் பேசும் வேலையில் தீவிரமாக இறங்கினார், சீமான். வடிவேலு சம்பளப் பணத்தைக் கூடுதலாக கோடிகளில் கேட்க கொந்தளித்துப் போனார், ஷங்கர்.

இனிமேல் `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் வடிவேலு நடிக்கவே வேண்டாம் என முடிவெடுத்தார். ஷங்கருக்கும் வடிவேலுக்கும் இடையே லைகா நிறுவனம் சமரசம் பேசியது. வடிவேலுவுக்குத் தரவேண்டிய பணத்தை எங்கள் பேனரில் நடிக்கும் படங்களின் வாயிலாக குறைத்துக்கொள்கிறோம் என்று ஷங்கருக்கு வாக்குறுதி கொடுத்தது. இதன்பிறகும், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு நீக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்‌ஷனும் காமெடியும் கலந்த வேறு ஹீரோவிடம் ஷங்கரும் சிம்புதேவனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.