Published:Updated:

`மாஸ்டர்', `வலிமை' விட, `புதுப்பேட்டை 2', `ஆயிரத்தில் ஒருவன் 2'வை மனம் எதிர்பார்ப்பது ஏன் தெரியுமா?

பாட்ஷா
பாட்ஷா

`காதலர் தினம்' படத்தில் குணால் சொல்லும் அவருடைய ஃப்ளாஷ்பேக்கில் எங்கே குணால் இறந்துவிடுவாரோ என அலறும் மணிவண்ணன்களின் நிலை நமக்கு இல்லை. அதற்குப் பதில் அந்தப் படத்தின் க்ளைமாக்ஸையே கண்ணீர் இல்லாமல் கடப்பதற்கு நம் மனம் தயாராகிவிட்டது.

தோட்டா தன்னை நோக்கி பாய்ந்து வருகையில், கட் பண்ணி ஃப்ளாஷ்பேக் போவதுபோல ஒட்டுமொத்த உலகமும் இப்போது ஃப்ளாஷ்பேக் மோடில் இருக்கிறது. கொரோனா பாதிப்பால் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் மனித மனங்கள், தான் அந்தக் காலத்தில் படித்த ராஜேஷ்குமாரையும் பிடித்த சக்திமானையும் தேடி அலைகிறது. `ராமாயணம்' ஆரம்பித்து `லொள்ளு சபா' வரை, தொலைக்காட்சிகளும் அதற்கேற்றாற்போல் நாஸ்டால்ஜி உணர்வுக்கு அப்பளம், பாயசத்தோடு விருந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் மனம் ஏன் இப்படி நாஸ்டால்ஜி விஷயங்களுள் கரைந்துபோகிறது என்பதற்கு காரணம் உண்மையில் தோட்டா அல்ல. வேறென்ன? விரிவாக பார்ப்போம்...

ப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ்

எண்ணற்ற டிவி சேனல்கள். அதை விளம்பரங்கள் இன்றி பார்த்திட அப்ளிகேஷன்கள். திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் நிரம்பி வழியும் OTT ப்ளாட்ஃபாரம்கள். ஆன்-லைன் பாடல்கள் மற்றும் கேமிங் சர்வீஸ்கள் என ஒருநாளைக்கு புது விஷயங்கள் அத்தனை வெளியாகின்றன. நாளுக்கு நாள் இவை அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், நம் மனம் முந்தைய காலத்து க்ளாஸிக்களையே தேடுகிறது. 90'களில் வந்த `ப்ரண்ட்ஸ்' சிட்காம் சீரியல், இன்றும் நெட்ஃப்ளிக்ஸ் டிரெண்டிங்கில் இருக்கிறது. `லயன் கிங்', `டாய் ஸ்டோரி 4', `ஸ்டார் வார்ஸ் : எபிஸோட் 9' படங்கள்தான் வசூல் ரீதியாக ஹிட் அடிக்கின்றன. நாமும் `மாஸ்டர்', `வலிமை'யைவிட `ஆயிரத்தில் ஒருவன்', `புதுப்பேட்டை'யின் இரண்டாம் பாகங்களுக்குதான் அதிகம் காத்திருக்கிறோம்.

இப்படி நாம் பழைய விஷயங்களை விரும்புவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதற்காரணம் பாதுகாப்பு உணர்வு. இன்றைய காலத்து படைப்புகளில் பிரதிபலிக்கும் தற்கால சமூகத்தின் சிக்கல்களும், நம்பிக்கையின்மையும், அதன் வேகமும் ஒருவித பயத்தை நமக்குக் கொடுக்கின்றன. ஆனால், பழைய விஷயங்கள் நமக்கு பழக்கப்பட்டவை. அதில் இருக்கும் அதிர்ச்சிகளும் நமக்கு பழகிவிட்டது. அங்கு அச்சவுணர்வுக்கு இடமே இல்லை. `காதலர் தினம்' படத்தில் குணால் சொல்லும் அவருடைய ஃப்ளாஷ்பேக்கில் எங்கே குணால் இறந்துவிடுவாரோ என அலறும் மணிவண்ணன்களின் நிலை நமக்கு இல்லை. அதற்கு பதில் அந்தப் படத்தின் க்ளைமாக்ஸையே கண்ணீர் இல்லாமல் கடப்பதற்கு நம் மனம் தயாராகிவிட்டது. வீண் துன்பங்கள் இல்லாத நிலை, நமக்கு மகிழ்ச்சியையும் பாதுகாப்பான உணர்வையும் கொடுக்கிறது.

காதலர் தினம்
காதலர் தினம்

அன்று வேறு ஆப்ஷன் இல்லாமல் `வயலும் வாழ்வும்'கூட வாயில் ஈ நுழையும் அளவுக்குப் பார்த்தோம். இன்று, நமக்கு ஆப்ஷன்கள் அதிமாகிவிட்டன. ஆப்ஷன்களுக்குள் மூழ்கி, மூச்சு திணறுமளவுக்கு சிக்கித் தவிக்கிறோம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் நமக்கு குழப்பமும் பயமும்தான் மிஞ்சுகின்றன. மல்டி குஸன் ரெஸ்டாரன்டினுள் நுழைந்து, 20 பக்க மெனுவையும் படித்துவிட்டு, எதைச் சாப்பிடுவதென குழப்பமாகி, ஒரு சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் பண்ணும் கதைதான். ஏனென்றால், நமக்கு சிக்கன் ரைஸின் ருசி ஏற்கெனவே தெரியும். அதை நாம் தேர்ந்தெடுப்பதில், ரிஸ்க் அவ்வளவாக இல்லை.

அதேபோல், பழைய விஷயங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது என்பது, நம் வளர்ச்சியை நாமே கணக்கிட முடிகிறது. அன்று ஆச்சர்யமாகப் பார்த்த, `அதிசய பிறவி' படம், இன்று நமக்கு சிரிப்பு ஏற்படுத்துகிறது. அன்று `சொல்லாமலே' லிவிங்ஸ்டனைப் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள்தான், இன்று காதலுக்காக எவனாவது `நாக்கை அறுத்துக்குவானா' என நொந்துகொள்கிறோம். இதற்குப் பின்னால், `நான் வளர்கிறேனே மம்மி' என்றொரு சந்தோஷ உணர்வு இருக்கிறது. இதுவும் ஒரு காரணம்!

மை டியர் பூதம்
மை டியர் பூதம்

இவை புது கம்யூனிட்டிகள் உருவாகவும் வழிவகுக்கிறது. `கவுண்டமணியைவிட எனக்கு லூஸ் மோகன்களையே பிடிக்கிறது' என யாரேனும் போஸ்ட் போட்டால், `எனக்கும் லூஸ் மோகன்தான் ரொம்பப் பிடிக்கும். அவரை மாதிரியே ஒருகாலத்தில் மிமிக்ரி செய்வேன். ஹாங்...' எனப் பலரும் கமென்ட் போடுகிறார்கள்.`சகலக பூம்பூம்' ரசிகர்கள் ஒருபக்கம், `பூம்பூம் சகலக' ரசிகர்கள் இன்னொரு பக்கம் எனக் கூட்டமாக இணைகிறார்கள். `தர்பார்' படம் ரிலீஸ் சமயத்தில், `மை டியர் பூதம் கௌரி ரசிகர் மன்றம்' சார்பாக, நிவேதா தாமஸுக்கு பாராட்டு மீம்கள் வருகின்றன. நான் அந்த விஷயங்களை எவ்வளவு ரசித்துப் பார்த்தேன் எனச் சக ரசிகனிடம் விவரிப்பதைவிட வேறென்ன சந்தோஷம் கிட்டப்போகிறது ஒரு உரையாடலில்.

ஒரு படத்தை இரண்டாவது முறை பார்க்கும்போதும், ஒரு புத்தகத்தை இரண்டாவது முறை படிக்கும்போதும் அது பற்றி இன்னொரு பார்வை பிறக்கும். இன்னும் ஆழமாக அவற்றை நாம் புரிந்துகொள்வோம். இவ்வளவுநாள் கழித்து இப்போதுதான், `பகவதி' படமும் `ஊர்க்காவலன்' படமும் ஒரே கதை எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். `படையப்பா'வின் `சுத்தி சுத்தி வந்தீக' பாடலும், `இந்தியன்' படத்தின் `பச்சை கிளிகள் தோளோடு' பாடலும் ஒரே ட்யூன் என்பதையும் இப்போதுதான் கேட்டுணர்ந்து அதிர்ச்சியடைகிறார்கள். ஏன், `கில்லி' படத்தில் பொதிந்திருக்கும் சாதிய அரசியல்' என ஒரு கமர்ஷியல் படத்தை வைத்து காத்திரமான கட்டுரை எழுதும் அளவுக்கு நமக்கு தகவல்கள் கிட்டும். அது அந்தப் படைப்பு தாண்டிய, வேறொரு சுவாரஸ்யத்தை தரவல்லது. இதுவும் நாஸ்டாலஜியை நோக்கி நாம், ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம்,

சக்திமான்
சக்திமான்

தான் விரும்பிய நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கும் பார்வையாளர்கள், மனிதர்கள் பலருடன் இணைந்து ஒற்றுமையான சமூகமாக வாழ விரும்புகின்றனர். தங்களை பற்றிய நல்ல புரிதல் உடையவர்களாக இருக்கின்றனர். தங்களின் மேலும், தங்களின் கனவுகள் மேலும் பெரும் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். மறுஒளிபரப்புகளை ரசிப்பதும், நாஸ்டால்ஜியில் மூழ்குவதும் கடந்த காலத்தைப் பற்றியது அல்ல, நம் வருங்காலத்தைப் பற்றியது என நான் சொல்லவில்லை. பெரிய அறிஞர்களும் ஆய்வாளர்களும், அறிக்கைகளும் சொல்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு