Published:Updated:

ஷோபா மரணம்; ஹிட்ச்காக்கின் `சைக்கோ';`மூடுபனி' ரகசியங்கள் - டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids

மூடுபனி
News
மூடுபனி

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – மூடுபனி.

நவம்பர் 6, 1980 அன்று ‘மூடுபனி’ வெளியானது. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை முதலில் பார்த்துவிடுவோம்.

இது, இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான 100-வது படம். 1976ல் வெளியான ‘அன்னக்கிளி’யில் அறிமுகமாகிய ராஜா, மிகக் குறுகிய காலத்தில், அதாவது நான்கே ஆண்டுகளில் நூறாவது திரைப்படத்தை எட்டியதை ஓர் அசாதாரணமான சாதனை எனலாம். தனது ‘ராஜ’ வருகையின் மூலம் தமிழ் சினிமாவின் இசையில் ஒரு பிரமாண்டமான ரசனை மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார் ராஜா.

பாலுமகேந்திரா + இளையராஜா எனும் கூட்டணி, ‘மூடுபனி’ திரைப்படத்தில்தான் தொடங்கியது. இந்தப் பயணம், பாலுமகேந்திராவின் கடைசிப் படம் வரை தொடர்ந்தது என்பது விசேஷமான அம்சம். ‘கோகிலா’, ‘அழியாத கோலங்கள்’ என்கிற தனது முதல் இரண்டு திரைப்படங்களில், சலீல் செளத்ரியை இசையமைப்பாளராக உபயோகித்தாலும், மூன்றாவது திரைப்படத்தில் தன் ‘இசைக் காதலனை’ பாலுமகேந்திரா கண்டுகொண்டார்.

பாலுமகேந்திரா, இளையராஜா
பாலுமகேந்திரா, இளையராஜா

பிறகு இளையராஜாவை மட்டுமே தன் திரைப்படங்களில் பயன்படுத்துவதை ஒரு விரதமாகவே மேற்கொண்டார் பாலுமகேந்திரா. ('சந்தியாராகம்' படத்திற்கு மட்டும் இசை, எல்.வைத்யநாதன்). ‘நான் உருவாக்கும் காட்சிகளை அபாரமான இசையாலும் அர்த்தமுள்ள மெளனங்களாலும் நிரப்பியவர் என் ராஜா’ என்று அன்பும் உரிமையுமாக இளையராஜாவைப் பற்றி பல சமயங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்துள்ளார் பாலுமகேந்திரா.

‘திலீப்’ - ‘கீபோர்ட் ப்ரோகிராமர்’
இசை தொடர்பாக, இந்தத் திரைப்படத்தில் உள்ள இன்னொரு சுவாரஸ்யம், ‘மூடுபனி’ திரைப்படத்தில்தான் 13 வயதான ‘திலீப்’ என்கிற இளைஞர் ‘கீபோர்ட் புரோகிராமர்’ ஆக இளையராஜாவின் குழுவில் பணிபுரியத் தொடங்கினார்.
தன் தொழில்நுட்ப அறிவின்மூலம் ராஜாவின் பாடல்களுக்கு புது மெருகையும் நவீன ஒலிக்கோர்வைகளையும் உருவாக்கிய அந்த இளைஞர்தான், பின்னாளில் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று உலக அளவில் அறியப்பட்ட இசைக்கலைஞராக மாறினார்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ராஜாவும் ரஹ்மானும் சந்தித்துக் கொண்ட ஓர் அரிய தருணத்தில், இந்தத் தகவல் மீள்நினைவு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

‘மூடுபனி’, பாலுமகேந்திராவிற்கு ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்த முதல் திரைப்படமாக அமைந்த அதே சமயத்தில், ஷோபாவின் கடைசிப் படமாக அமைந்தது ஒரு பரிதாபமான சோகம். ஆம், இந்தப் படம் வெளியாவதற்கு சுமார் ஏழு மாதங்களுக்கு முன், அதாவது மே 1, 1980 அன்று தூக்குப் போட்டு ஷோபா தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் பெரிய அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. இதற்காக பாலுமகேந்திரா பல சர்ச்சைகளையும் புகார்களையும் அவதூறுகளையும் சட்டப் பிரச்னைகளையும் அந்தச் சமயத்தில் சந்தித்தார்.

‘ஷோபாவின் தற்கொலைக்குக் காரணம் பாலுமகேந்திரா’தான் என்பது போன்ற பரவலான புகார்களைப் பெரும்பாலான ஊடகங்கள் உற்சாகமாக எழுதின. ஷோபாவின் தாயான பிரேமாவே இந்தப் புகாரை முன்வைத்தார். ‘என் மகள் ஷோபா’ என்கிற தலைப்பில் ஒரு வார இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.

‘மூடுபனி’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு
‘மூடுபனி’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு

ஆனால், இந்தப் புகார்களை பாலுமகேந்திரா தன்னுடைய அர்த்தபூர்வமான மெளனத்தால் மட்டுமே பெரும்பாலும் எதிர்கொண்டார். ‘இது எங்களுக்கு இடையே இருந்த அந்தரங்கமான உறவு. இதன் காரணங்களை நாங்கள் மட்டுமே அறிவோம்” என்பதுபோல் மிக அரிய சந்தர்ப்பங்களில் மெலிதான விளக்கம் அளித்தார் பாலுமகேந்திரா.

ஷோபாவிற்கும் தனக்குமான உறவை பாலுமகேந்திரா மறைத்து வைக்க நினைத்ததில்லை. ‘எனக்கு எல்லாமாய் இருந்த என் அன்பு மனைவி அம்மு (ஷோபா) வுக்கு ஆத்ம சமர்ப்பணம் – பாலுமகேந்திரா’ என்றுதான் ‘மூடுபனி’ திரைப்படத்தின் டைட்டில் கார்டு தொடங்கும்.

ஆனால் ஷோபா இறந்தபோது, அவரது வயது 17 எனப்படுகிறது. எனில், மைனராக இருந்த ஒருவரை ‘மனைவி’ என்று பொதுவில் குறிப்பிடும் சட்டப் பிரச்சினையை பாலுமகேந்திரா உணரவில்லையா என்கிற கேள்வியும் எழுகிறது.

சந்திரபாபு இயக்கத்தில் `ஷோபா'!
1966-ல் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் ஷோபா. இதை இயக்கியவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.

ஷோபாவின் இயற்பெயர் மகாலட்சுமி. எனவே, ‘பேபி மகாலட்சுமி’ என்று அப்போது அறியப்பட்டார். இந்தப் பெயருடன் பல தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷோபா, பிறகு பல மலையாளத் திரைப்படங்களிலும் நடித்தார்.

ஷோபா
ஷோபா

ஷோபாவின் தாய் பிரேமாவும் ஒரு மலையாள நடிகைதான். ஏறத்தாழ 50 மலையாளத் திரைப்படங்களுக்கு மேல் பிரேமாவால் துணை நடிகையாக மட்டுமே நடிக்க முடிந்தது. ‘ஹீரோயின்’ ஆவது என்கிற தனது நிறைவேறாத ஆசையை தன் மகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள, பிறகு அவரால் முடிந்தது. சிறந்த நடிகையாக மலையாளத் திரைப்படங்களில் பிரகாசித்த ஷோபா, ‘பசி’ என்கிற தமிழ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மிகச் சிறிய வயதிலேயே ‘சிறந்த நடிகைக்கான’ தேசிய விருதைப் பெற்றார். இதை ஓர் அரிய சாதனை எனலாம்.

‘பக்கத்து வீட்டுப் பெண்’ என்கிற இயல்பான தோற்றத்தையும் மிகையல்லாத யதார்த்தமான நடிப்பையும் கொண்டு தென்னிந்தியத் திரைவானில் மின்னிக்கொண்டிருந்த இந்த நட்சத்திரம், குறுகிய காலத்திலேயே மறைந்துபோனது சினிமா துறைக்கும் அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பு எனலாம். ஷோபாவின் மறைவையொட்டி, அவரது நினைவாக பாலுமகேந்திரா உருவாக்கிய திரைப்படம்தான் ‘மூன்றாம் பிறை’.

‘மூடுபனி’ திரைப்படத்தின் அடுத்த விசேஷமான அம்சத்தைப் பற்றி பார்ப்போம். ‘psychological thriller’ என்னும் வகைமை தமிழ் சினிமாவில் அதுவரை முறையாக முயலப்படாமல் இருந்தது. இந்த மரபை தொடக்கிவைத்த முதல் திரைப்படமாக 1978-ல் வெளிவந்த பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்களைச் சொல்லலாம்’.

அதுவரை அரங்கத்திற்கு உள்ளேயே பெரும்பாலும் சுற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமா, கேமராவை அசலான கிராமப்புறங்களில் உலா வர வைத்து, ஒரு புதிய மரபை உருவாக்கியவர் பாரதிராஜா. அவர் இயக்கிய முதல் இரண்டு கிராமத்து திரைப்படங்களான 'பதினாறு வயதினிலே' மற்றும் 'கிழக்கே போகும் ரயில்' ஆகிய இரண்டுமே சூப்பர் ஹிட் திரைப்படங்கள். சற்று யோசித்துப்பாருங்கள்... அவர் நினைத்திருந்தால் தனது திரைப்பயணத்தை பாதுகாப்பாக கிராமத்துப் படங்களை உருவாக்குவதிலேயே எடுத்துச் சென்றிருக்கலாம். தமிழ் சினிமாவில் ஒருவர் தான் பெற்ற பெயரை நிலைநிறுத்துவது என்பது மிகச் சிரமமான விஷயம்.

பாலுமகேந்திரா
பாலுமகேந்திரா

ஆனால், இந்த மரபையும் துணிச்சலுடன் உடைத்தார் பாரதிராஜா. தனது மூன்றாவது திரைப்படத்தை சென்னை நகரின் பின்னணியில் ‘psychological thriller’ ஆக எடுக்கும் முடிவென்பது மிக அசாதாரணமான விஷயம். அதை வெற்றிகரமாக சாதித்துக் காட்டினார் பாரதிராஜா.

ஏறத்தாழ பாலுமகேந்திரா செய்ததும் இதைத்தான். 'கோகிலா', 'அழியாத கோலங்கள்' என்று இரண்டு மெல்லுணர்வு திரைப்படங்களை இயக்கிவிட்டு, மூன்றாவது திரைப்படத்தில் உளவியல் சார்ந்த ஒரு திரில்லரை பாலுமகேந்திரா முயன்றதை துணிச்சலான சாதனை எனலாம்.

‘மூடுபனி’ திரைப்படத்தின் கதை என்ன என்பதை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் தந்தை, அதன் காரணமாக தன் தாயைக் கொடுமைப்படுத்துவதை அன்றாடம் பார்த்து வளர்ந்த ஒரு சிறுவனுக்கு ‘பாலியல் தொழிலாளிகள்’ என்றாலே வெறுப்பும் ஆத்திரமும் வருகிறது. எனவே, வளர்ந்து இளைஞனான அவன், (பிரதாப் போத்தன்) அவர்களைக் கடத்திக்கொண்டு போய் கொல்கிறான். இந்தத் தொடர் கொலைகளால் நகரம் பரபரப்பாகிறது.

பிறகு, அந்த இளைஞன் ஷோபாவைப் பார்க்கிறான். அவளின் களங்கமற்ற முகமும் தோற்றமும் அவனுக்கு வெகுவாகப் பிடித்து விடுகிறது. தன் தாயின் மாற்றுப் பிரதியாக ஷோபாவைப் பார்க்கிறான். அவளிடம் சென்று திருமணத்திற்கான கோரிக்கையை வைக்கிறான். ஆனால் ஷோபா ஏற்கெனவே ஒருவரை காதலித்துக்கொண்டிருப்பதால் நாகரிகமாக மறுக்கிறாள்.

மூடுபனி
மூடுபனி
ஓவியம்: ஷண்முகவேல்

ஷோபாவை மறக்க முடியாத அந்த இளைஞன், அவளை கடத்திக் கொண்டு போய் ஒரு பங்களாவில் சிறை வைக்கிறான். குறிப்பிட்ட காலத்திற்கு தன்னோடு தங்கச் சொல்லி வற்புறுத்துகிறான். அந்த குறிப்பிட்ட காலத்தில் தன்னுடைய நல்லியல்புகளைப் பார்த்து தன் மீது அவளுக்கு காதல் வந்துவிடும் என்று பைத்தியக்காரத்தனமாக நம்புகிறான்.

பிறகு என்னவானது என்பதை இயல்பு கலையாத பரபரப்புடன் விவரித்திருந்தார் பாலுமகேந்திரா.

பலரும் கருதிக்கொண்டிருப்பது போல் ‘மூடுபனி’ திரைப்படம் ‘ஹிட்ச்காக்கின்’ சைக்கோ படத்தின் நகல் அல்ல. இறுதியில் தாயின் எலும்புக்கூடு ஒன்றை பிரதாப் பாதுகாத்துவைத்திருக்கும் காட்சி ஒன்று வரும். அதை வைத்து இது ‘சைக்கோ’வின் நகல் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.

ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’ திரைப்படத்தினால் பாதிப்பு மற்றும் தூண்டுதல் அடையாத இயக்குநர்களே உலகத்தில் இருக்க முடியாது. எப்படி 'சிவப்பு ரோஜாக்கள்', தமிழின் முதல் ‘psychological thriller’ திரைப்படமாக இருந்ததோ, அதுபோல் உலக அளவில் இந்த வகைமையில் பல வருடங்களுக்கு முன்பே திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கியவராக ஹிட்ச்காக் என்கிற மேதையைச் சொல்ல வேண்டும். அந்த வகையில் ‘சைக்கோ’ ஒரு முக்கியமான திரைப்படம்.

ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’
ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’

‘மூடுபனி’ திரைப்படத்தை ஹிட்ச்காக்கிற்கு தாம் செலுத்திய மரியாதை என்பது போல் பாலுமகேந்திராவும் ஒரு பதிவில் சொல்லியிருந்தார். இளம் வயதில் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குற்றங்களின் ஊற்றுக்கண்களாகப் பிறகு மாறுகின்றன என்கிற கோட்பாட்டை இவ்வகையான திரைப்படங்கள் கச்சிதமாகப் பிரதிபலித்தன.

ஆனால் ‘மூடுபனி’ திரைப்படத்தின் பெரும்பான்மையான பகுதி, 1965ல் வெளியான ‘The Collector’ என்கிற ஆங்கிலத் திரைப்படத்தின் அழுத்தமான சாயலைக் கொண்டிருந்தது. ஒரிஜினலில் வரும் பல சம்பவங்கள், வசனங்கள், திருப்பங்கள் அச்சு அசலாக அப்படியே ‘மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

John Fowles என்கிற பிரிட்டிஷ் நாவலாசிரியர், இதே தலைப்பில் 1963ல் எழுதிய நாவலையொட்டி மேற்குறிப்பிட்ட திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. திரைக்கதையிலும் தொழில்நுட்ப அளவிலும் ‘The Collector’ 'மூடுபனி’யை விடவும் பல மடங்கு நேர்த்தியான திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.

ப்ரெட்டி என்கிற இளைஞன், மிராண்டா என்கிற இளம்பெண்ணைக் கடத்தும் காட்சியிலேயே படம் தொடங்கும். சூதாட்டத்தின் மூலம் தான் அடைந்த பெரும் பணத்தில் ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு பங்களாவை வாங்கும் இளைஞன், அதன் பக்கத்தில் உள்ள பாதாள அறைக்குள் மிராண்டாவை அடைத்துவைக்கிறான். பிறகு, இருவருக்கும் நிகழும் உரையாடல்களும் சம்பவங்களும், உணர்ச்சி மோதல்களும்தான் முழுத் திரைப்படமே. ஆனால், ஒரு துளிகூட சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

மிராண்டாவை அவன் நீண்ட காலமாகப் பின்தொடர்ந்து வருவது முதலிலேயே சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்வையாளர்களுக்கு உணர்த்தப்பட்டுவிடும். அவளுக்குப் பிடித்த நிறம், புத்தகம் என்று பல விஷயங்களை அறிந்துகொள்ளும் அவன், அவை தொடர்பானவற்றை பாதாள அறைக்குள் அடுக்கி வைத்திருப்பான். வலுக்கட்டாயமாக அவளை அங்கு தங்க வைப்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் தன்மீது அவளுக்கு அன்பு வந்துவிடும் என்று நம்புவான். Stockholm syndrome உத்தி. அவளைத் தொட முயற்சி செய்யாமல் கண்ணியமிக்கவனாக நடந்துகொள்வான்.

1965-ல் வெளியான ‘The Collector’
1965-ல் வெளியான ‘The Collector’

ஆனால் ‘The Collector’ படத்தின் இறுதியில், ‘நீதி வெல்லும்’ என்கிற சம்பிரதாயமான முடிவிற்கு மாறான முறையில் நிறைவுறும். இதை தமிழ்ப் பார்வையாளர்கள் நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ப்ரெட்டியாக நடித்த Terence Stamp மற்றும் மிராண்டாவாக நடித்த Samantha Eggar ஆகிய இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். பல விருதுகளைப் பெற்ற இந்தத் திரைப்படத்தை William Wyler அற்புதமாக இயக்கியிருந்தார்.

ப்ரெட்டி, பட்டாம்பூச்சிகளை சேகரிப்பவனாக இருப்பான். (Entomologist). பட்டாம்பூச்சிகளை தேடிப்பிடித்துக் கொன்று அவற்றை பாடம் செய்து வைத்திருப்பான். ஒரு குறிப்பிட்ட காட்சியில், அவனுடைய சேகரிப்புகளைப் படத்தில் பார்க்கும் போது அத்தனை பிரமிப்பாக இருக்கும். அவனுடைய சேகரிப்புகளில் ஒன்றாக நாயகி மாறுவதுபோல படத்தின் உள்ளடக்கம் அமைந்திருக்கும்.

ஆனால், “மூடுபனி’ திரைப்படத்தின் மூலக்கதை என்று பிரபல தமிழ் எழுத்தாளரான ராஜேந்திரகுமாருக்கு டைட்டிலில் கிரெடிட் தந்திருப்பார் பாலுமகேந்திரா. ராஜேந்திரகுமார் எழுதிய ‘இதுவும் ஒரு விடுதலைதான்’ என்கிற க்ரைம் நாவல்தான், திரைப்படமாக ஆக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாலுமகேந்திரா தமிழின் உன்னதமான இயக்குநர் என்றாலும், 15 வருடங்களுக்கு முன்பு வெளியான ஓர் ஆங்கிலப்படத்தின் தூண்டுதலில் ஒரு தமிழ் திரைப்படத்தை உருவாக்கும்போது, அசலுக்கு இணையாகவோ அல்லது அதையும் தாண்டியதாகவோ உருவாக்காமல் தமிழ் ரசிகர்களுக்காக பல அநாவசியமான காட்சிகளைக் கூடுதலாக இணைத்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. இது மட்டுமல்லாமல் காட்சிகளின் இணைப்பிலும் தொடர்ச்சியிலும் ஓர் ஒழுங்குமுறை இல்லாமல் சில இடங்களில் கன்னாபின்னாவென்று இறைந்து கிடக்கிறது. ஒரு பாடல் காட்சி இரவின் பின்னணியில் நிகழும்போது அதன் தொடர்ச்சியில் பகல் வந்துவிடுகிறது. இப்படியாக சில குறைபாடுகள் இருந்தாலும் அந்த காலகட்டத்தின் பின்னணியில் 'மூடுபனி’ ஒரு கவனிக்கத்தகுந்த திரைப்படமாக இருந்தது.

மூடுபனி
மூடுபனி

1980-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதியன்று வெளியான ‘மூடுபனி’, அதன் வித்தியாசமான உள்ளடக்கம், சிறந்த இசை, ஒளிப்பதிவு, நடிப்பு போன்வற்றால் பார்வையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது. அப்போது வெளியாகியிருந்த ‘நிழல்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற முக்கியமான படங்களோடு போட்டியிட வேண்டியிருந்தாலும், பல அரங்குகளில் ‘மூடுபனி’ வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

உளப்பாதிப்பு உள்ள இளைஞனாக பிரதாப் போத்தன் அருமையாக நடித்திருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதே போன்ற பல பாத்திரங்களில் பிறகு அவர் நடிக்க வேண்டியிருந்தது. (வறுமையின் நிறம் சிவப்பிலும் இதே மாதிரியான eccentric பாத்திரம்). தமிழ் சினிமாவில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றுவிட்டால், அதே போன்ற பாத்திரங்களைத் தந்தே சாகடித்துவிடுவார்கள். புத்திசாலியான நடிகர்கள் இதிலிருந்து தப்பிப் பிழைத்துவிடுவார்கள்.

ஷோபாவை பிரமாதமான அழகி என்று சொல்லிவிட முடியாது. சினிமாவிற்கேற்ற கவர்ச்சிகரமான முகவெட்டோ, நிறமோ, உடல் அமைப்போ இல்லாதவர். எலும்பு துருத்திய கன்னங்களும் ஒல்லியான உடலும் என்று சராசரியான பெண்ணைப் போல் இருப்பார். அது ஒருவகையில் அவரது பலமாக இருந்தது. மிக இயல்பான தோற்றத்தைக் கொண்ட அவர், சில கோணங்களில் ஒப்பனையில்லாமலேயே பேரழகியாகத் தெரிந்தார். அதிலும் பாலுமகேந்திராவின் கேமரா வழியாக அவரது அழகு மேலதிகமாக மிளிர்ந்ததை பல திரைப்படங்களில் காண முடிந்தது. இதை ‘மூடுபனி’யிலும் பல காட்சிகளில் உணர முடியும்.

பிரதாப் போத்தன்
பிரதாப் போத்தன்

பிரதாப்பால் கடத்தப்பட்டிருக்கும் காட்சிகளில், அந்தப் பதட்டத்தையும் தவிப்பையும் அருமையான முகபாவங்களின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் ஷோபா.

பாலுமகேந்திரா முதலில் இயக்கிய கன்னடத் திரைப்படமான ‘கோகிலா’வில் அறிமுகமானவர் மோகன். (ஆம், பின்னாளில் மைக் மோகன்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரபலமான நடிகர்). அவர், 'மூடுபனி'யில் சிறிய பாத்திரத்தில் வந்து போவார். டைட்டிலில் அவரது பெயர் ‘கோகிலா மோகன்’ என்றே வரும்.

இதில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை ஏற்றிருந்தவர், என்.விஸ்வநாதன் என்கிற நடிகர். இவரது நடை, உடை, பாவனை அனைத்திலும் ஐரோப்பிய பாணி தூக்கலாக இருக்கும். இதிலும் அப்படியே. ஆனால், இப்படியொரு மெத்தனமான இன்ஸ்பெக்டரை எந்தவொரு திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. புகைபிடிக்கும் பைப்பை கடித்தபடியே "டோண்ட் வொர்ரி.. எப்படியும் கண்டுபிடிச்சுடலாம்” என்று சொல்லிக்கொண்டே இருப்பாரே தவிர, பெரிதாக எதையும் செய்ய மாட்டார். இவரது மகனாகவும், ஷோபாவின் காதலனாகவும் நடிகர் பானுச்சந்தர் ஓரமாக வந்து போவார்.

பாலுமகேந்திராவின் அற்புதமான ஒளிப்பதிவு போன்ற விசேஷமான அம்சங்கள் தவிர இந்தத் திரைப்படத்தின் இன்னொரு பிரதான பலமாக இளையராஜாவின் இசையைச் சொல்ல வேண்டும். சில குறிப்பிட்ட இயக்குநர்களுடன் இணையும்போது, ராஜாவின் ஹார்மோனியத்திற்கு கூடுதல் உற்சாகம் வந்துவிடும் போல. இந்த மாயாஜாலம் பாலுமகேந்திராவின் படங்களிலும் உத்தரவாதமாக தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது.

‘என் இனிய பொன் நிலாவே’ என்கிற ‘மூடுபனி’ திரைப்படத்தின் பாடலை காலம் உள்ளளவும் எவரும் மறக்க முடியாது. ‘மூடுபனி’ திரைப்படம் என்றாலே நம் மனத்தில் உடனே நினைவிற்கு வரும் பாடலாக இது கல்வெட்டு போல் அமைந்துவிட்டது. ஜேசுதாஸ், மிக அருமையான மெலடியாக ஒருவகையான துள்ளலுடன் இதைப் பாடியிருப்பார். கிடார் பயிலும் இளைஞர்களின் பாலபாடமாக இந்தப் பாடல் பிறகு மாறியது.

படத்தின் தொடக்கக் காட்சியில் வரும் ‘பருவ காலங்களின்’ பாடலும் கேட்பதற்கே ஜில்லென்று புத்துணர்ச்சியைத் தருவதாக இருக்கும். ‘மாண்டேஜ்’ எனப்படும் உத்தியை பாடல்காட்சிகளில் மிகத்திறமையாக முதன் முதலில் பயன்படுத்தியவர் என்று பாலுமகேந்திராவைத்தான் சொல்ல முடியும். இந்தப் பாடலும் அப்படியொரு பாணியில் காதலர்களின் உற்சாகமான மனநிலையை வெளிப்படுத்துவதுபோல் படமாக்கப்பட்டிருக்கும். மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி, இந்தப் பாடலை அருமையாகப் பாடியிருந்தார்கள்.

கங்கை அமரனை ஒரு சிறந்த பாடலாசிரியராக நாம் பெரிதாக நினைவில் கொள்வதில்லை. இந்த இரு பாடல்களையும் மிகச் சிறப்பாக எழுதியவர் அவர்தான்.

இது தவிர, ‘Sing Swing’ என்கிற அட்டகாசமான இசையுடன்கூடிய ஆங்கிலப் பாடலும் இதில் உண்டு. இளையராஜாவின் ஆஸ்தான பியானிஸ்ட்டான விஜிமானுவல் எழுதிய இந்தப் பாடலை கல்யாண் மிக ஸ்டைலாகப் பாடியிருந்தார். டிஸ்கோ இசையின் தாக்கம் இந்தப் பாடலில் ஆதிக்கம் செலுத்தியது. தாயின் அன்பை உருக்கத்துடன் வெளிப்படுத்தும் ‘ஆசை ராஜா’ என்னும் குறும்பாடலை உமா ரமணன் பாடியிருந்தார்.

பின்னணி இசையிலும் தன் அபாரமான திறமையைக் கொட்டியிருந்தார் ராஜா. பரபரப்பான காட்சிகளில் அட்டகாசமாக ஒலிக்கும் இசை அதன் பரபரப்பைக் கூட்டியது என்றால், அவசியமான இடங்களில் திகிலுடன்கூடிய மெளனத்தையும் கொண்டிருந்தது.

மூடுபனி
மூடுபனி

இன்னமும் கூட, ‘psychological thriller’ என்னும் வகைமையில் தமிழ் சினிமா நகர வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. இளம் வயதில் ஏற்படும் துர்சம்பவங்களால் மனப்பாதிப்பு ஏற்படுபவர்களை கொடூரமான குற்றவாளிகளாகக் காண்பிக்கும் தவற்றை பல தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் இன்னமும் செய்து கொண்டேயிருக்கிறார்கள். ‘சைக்கோ’ திரைப்படத்தில், தீயவனாக தொடர்ந்து காண்பிக்கப்படும் ஒருவனின் சித்திரத்தை கிளைமாக்ஸில் அப்படியே மாற்றியமைத்து விடுவார் ஹிட்ச்காக். அவன் மீது ஒருவகையான அனுதாபமும் பார்வையாளர்களுக்கு உருவாகும்படியாக அந்த மாற்றம் இருக்கும்.

`மூடுபனி’ திரைப்படமும் இந்த அவசியமான தொனியைக் கொண்டிருந்தது. இது சார்ந்த நுண்ணுணர்வும் சமூகப் பொறுப்பும் பாலுமகேந்திராவிற்கு இருந்தது. அந்த வகையில் ‘மூடுபனி’ எண்பதுகளில் வெளிவந்த, இன்றைக்கும்கூட மிக முக்கியமான திரைப்படமாகக் கருதப்படவேண்டியது எனலாம்.

`மூடுபனி’ திரைப்படத்தை முதலில் பார்த்த அனுபவம் அல்லது இந்தப் படம் குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.