Published:Updated:

இந்திய சினிமாவை இமயத்தில் ஏற்றிய அப்பச்சி!

ஏவி.மெய்யப்ப செட்டியார் ( Photo: Vikatan )

திறன்மிக்க பல கலைஞர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு தந்த அப்பச்சி, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாள் இன்று.

இந்திய சினிமாவை இமயத்தில் ஏற்றிய அப்பச்சி!

திறன்மிக்க பல கலைஞர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு தந்த அப்பச்சி, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாள் இன்று.

Published:Updated:
ஏவி.மெய்யப்ப செட்டியார் ( Photo: Vikatan )
திரையின் வெளிச்சத்தில் ஒளிரும் அந்த மூன்றெழுத்தும், அதன் பின்னணியில் ஒலிக்கும் இசையும் தரத்தின் சான்று. வன்முறையற்ற, ஆபாசமற்ற, எல்லோரும் பார்க்கத் தகுந்த திரைப்படம் என்பதன் ஐ.எஸ்.ஐ முத்திரை அது. தமிழ் திரையுலகுக்கு தொழில்நுட்ப ரீதியாகவும் கலாபூர்வமாகவும் உயரிய அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது அந்த மூன்றெழுத்து. தமிழ் உள்ளவரை, கலை உள்ளவரை காலத்தின் உயிர்ப்பாய் நிலைத்திருக்கும் அந்த மூன்றெழுத்து... AVM.

திறன்மிக்க பல கலைஞர்களை, எழுத்தாளர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு தந்த அப்பச்சி, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் பிறந்தநாள் இன்று. பல்லாண்டுகள் கடந்தும், இன்றும் திரையுலகச் சின்னமாகச் செயல்படும் ஏவி.எம் நிறுவனத்தின் வேர். அவரது வாழ்க்கை சாகசங்களால் நிரம்பியது. இழப்புகளுக்கு உடைந்து போகாமல், கனவுகளைச் சிதறவிடாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து அடுத்து அடுத்தென்ற அவரது நகர்வுகள், ஒரு மாபெரும் இயக்கமாக ஏவி.எம் நிறுவனத்தை வளர்த்தெடுத்தன.

செட்டி நாட்டின் மையமான காரைக்குடியில் 1907 ஜூலை 28-ம் தேதி பிறந்தார் அப்பச்சி. அப்பா பெயர் ஆவிச்சி செட்டியார். அம்மா பெயர், லட்சுமி ஆச்சி. 9-ம் வகுப்பு வரையே படித்த மெய்யப்பனுக்கு, ஆங்கிலத்தில் பேசுவது கனவாக இருந்தது. சுயமாக ஆங்கிலச் செய்தித்தாள்களை வாங்கிப் படித்து அகராதிகளில் பொருள்தேடிப் படித்தார். அந்த தீவிரம்தான், உலகம் முழுவதும் வெற்றியாளராக சுற்றி வரவும், ஜெர்மானியர்களோடு வணிகம் செய்யவும் காரணமாக இருந்தது.

ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை
ஏவி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை

சிறு வயதிலேயே வணிகத்தில் தீவிர ஆர்வம் இருந்தது மெய்யப்பனுக்கு. அப்பா நடத்திய கடையில் அவருக்கு உதவியாக இருந்து வணிக நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். 22 வயதில் ஃபோர்டு கார் கம்பெனியின் முகவரானார். ஒரு கட்டத்தில் சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 1932 செப்டம்பரில் `சரஸ்வதி ஸ்டோர் ரெக்கார்டிங் கம்பெனி' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கர்நாடக சங்கீத உரிமைகளைப் பெற்று இசைத்தட்டுகளை வெளியிட்டார். அந்த முயற்சி வெற்றிதேடித்தர படிப்படியாகத் திரைத்துறையில் தீவிரமானார்.

அக்காலகட்டத்தில் இந்திய திரையுலகின் மையமாக இருந்தது கொல்கத்தா. தென்னிந்தியாவில் திரைப்படம் எடுப்பதற்குரிய ஸ்டூடியோவோ, வசதிகளோ இல்லை. நண்பர்களோடு சேர்ந்து கொல்கத்தா சென்று அல்லி அர்ஜுனா, ரத்னாவளி, நந்தகுமார் போன்ற திரைப்படங்களை எடுத்தார். ஆனால், அந்தத் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. பெரும் இழப்பு ஏற்பட்டது. ஆனாலும், முடங்கவில்லை ஏவி.எம்.

தோல்விக்கான காரணங்களை அலசினார்.

`செலவு, மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. நம்மூரில் போதிய வசதியிருந்தால் முதலீட்டைக் குறைக்கலாம்...'

அந்த சிந்தனை, நாமே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன என்ற முடிவில் வந்து நின்றது. செயலில் இறங்கினார். 1940-ல், சென்னை, விஜயநகர பேலஸில் பிரகதி ஸ்டுடியோவைத் தொடங்கினார். பூகைலாஷ், திருவள்ளுவர் போன்ற படங்களைத் தயாரித்தார். சபாபதி என்ற படத்தை அவரே இயக்கினார். அந்தப் படத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி மனம் திறந்து பாராட்டினார்.

திரைக்கலைக்கு ஏதுமொழி... தமிழைக் கடந்து கன்னடத்துக்குப் பயணமானார் ஏவி.எம். வசந்தசேனா, அரிச்சந்திரா என அவர் எடுத்த கன்னடப் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. அந்தப் படங்களைத் தமிழில் டப் செய்து வெளியிட்டார். திரையுலகில், ஒருமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு டப் செய்தது அதுதான் முதல்முறை. இந்தியாவே இந்த முயற்சியை வியந்து பார்த்தது. திரை மொழியும், தொழில்நுட்பமும் மெய்யப்பனுக்கு கைவந்த கலையாக இருந்தது. கலைஞர்களை கச்சிதமாகப் பயன்படுத்தி திறனை வெளிக்கொண்டு வந்தார். படங்கள் அடுத்தடுத்து வெற்றிக்கொடி நாட்ட, கலைஞர்களுக்கும் தனி அடையாளம் கிடைத்தது.

AVM Studios
AVM Studios
Melanie M | Wikimedia Commons | CC BY

சென்னை வடபழனியில் சுற்றும் ஏவி.எம் உலக உருண்டை சென்னைக்கு அடையாளமாக இருக்கிறது. ஆனாலும், ஏவி.எம் நிறுவனம் முதலில் இயங்கத் தொடங்கியது காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை ரஸ்தாவில். ஜமீன்தார் நாடகக் கொட்டகை `ஏவி.எம் ஸ்டுடியோ' ஆனது. கீற்றுக்கொட்டகையில் தொடங்கிய ஏவி.எம் ஸ்டுடியோதான் இன்று பெருமரமாக விரிந்து நிற்கிறது.

ஏவி.எம்மின் முதல் தயாரிப்பு நாம் இருவர். அந்தப் படத்தில் பாரதியாரை பாடலாசிரியராக்கினார் மெய்யப்பன். பாரதியார் பாடல்களின் உரிமையை வைத்திருந்த ஜெய்சிங் லால் கே.மேதா என்பவரிடம் 10,000 ரூபாய் கொடுத்து பெற்று மெய்யப்பன், படத்தில் பயன்படுத்தினார். `ஆடுவோமே... பள்ளு பாடுவோமே', `வெற்றி எட்டுத்திக்கும் என கொட்டுமுரசே' போன்ற பாரதியாரின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கத் தொடங்கின.

முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாரதியார் பாடல்களை அரசுடமையாக மாற்ற விரும்பினார். அவற்றின் உரிமையை வைத்திருந்த மெய்யப்பனை அணுகி, `எவ்வளவு பணம் வேண்டும்' என்று கேட்க, `பாரதி இந்தத் தேசத்தின் சொத்து... 1 ரூபாய்கூட வேண்டாம்' என்று மொத்தமாக அள்ளிக் கொடுத்தார் மெய்யப்பன்.

பல தொழில்நுட்பங்களைத் திரையில் அறிமுகப்படுத்தினார் மெய்யப்பன். கிராபிக்ஸ் பற்றி எவரும் சிந்தித்திராத காலகட்டத்தில் `வேதாள உலகம்' படத்தில் மந்திர, தந்திரக் காட்சிகளெல்லாம் கேமராவைப் பயன்படுத்தியே எடுத்துக்காட்டி மிரள வைத்தார். எங்கிருந்தோ ஒரு தட்டு நகர்ந்து வர, அதில் பலகாரங்கள் படிப்படியாக வந்து அமர, தானே நகர்ந்து வந்து சுற்றி நிற்கும் தட்டு ரசிகர்களைக் குதூகலிக்க வைத்தது. இந்தப் படத்தையும் ஏவி.எம்மே இயக்கினார். பாடல்களே இல்லாமல், `அந்த நாள்' படத்தை எடுத்து திரும்பிப் பார்க்க வைத்தார். அந்தப் படத்தைப் பார்த்துதான் சினிமா எடுக்க வேணடும் என்ற ஆசை வந்தது என்று கூறியிருக்கிறார் மணிரத்னம்.

ஏவி.மெய்யப்ப செட்டியார்
ஏவி.மெய்யப்ப செட்டியார்
Photo: Vikatan

பிறகு சகல வசதிகளுடன் சென்னையில் ஏவி.எம் ஸ்டுடியோவை உருவாக்கினார் மெய்யப்பன். `வாழ்க்கை', அங்கிருந்து வெளிவந்த முதல் திரைப்படம். ப.நீலகண்டனின் கதை வசனத்தில், இதையும் மெய்யப்பனே இயக்கினார். `ஓர் இரவு' திரைப்படம் பல புதுமைகளைக் கொண்டு வந்தது. ஒரே இரவில் கதை வசனம் எழுதித்தந்தார் அண்ணா. பாரதிதாசனின், `துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா' என்ற பாடல் இப்போதும் இதயத்தைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறது. பிறகு, பி.ஏ.பெருமாளோடு இணைந்து மெய்யப்பன் தயாரித்த `பராசக்தி' வரலாறானாது.

1956-ல் எடுத்த `குலதெய்வம்' பெண்கள் மறுமணம் பற்றிப் பேசியது. இந்தப் படத்தின் வசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் வசனகர்த்தா பெயர் இல்லை. வசனம் பரபரப்பாகப் பேசப்பட்டதும் இரண்டாவது வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் `மாறன்' என்று போட்டார்கள். எந்த மாறன் என அடையாளக் குழப்பம் ஏற்பட, அதன்பின் அடிக்கப்பட்ட சுவரொட்டிகளில் `வசனம் - முரசொலி மாறன்' என்று போடப்பட்டது. `மாறன்', `முரசொலி மாறனா'னது அந்தக் கணத்தில்தான். 1933-ல் ஏவி.எம்முக்குத் திருமணமானது. மனைவி, ராஜேஸ்வரி. தன் மனைவியை சிறந்த மதியூகி என்று கூறியிருக்கிறார் ஏவி.எம். வெளியூர் சென்றால் உடன் ராஜேஸ்வரியும் வர வேண்டும் என்று விரும்புவார். கண்டிப்பாக பச்சை புடவை கட்டி வர வேண்டும் என்பது சென்டிமென்ட்.

திரைக்கலைக்காக ஏராளமான விருதுகளையும் அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் பெற்றிருக்கிறார் ஏவி.எம். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா என ஐந்து முதல்வர்கள் ஏவி.எம்மோடு பணிபுரிந்திருக்கிறார்கள். பழனிச்சாமியாக இருந்தவரை `காக்கும் கரங்கள்' படத்தில் சிவகுமாராக்கி அறிமுகம் செய்தார் ஏவி.எம்.

தன் வெற்றிக்குப் பின்னணியாக இருந்த தொழிலாளர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார் ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அருகிலேயே குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். பலருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகத் தன் அப்பா பெயரில் பள்ளியும் தொடங்கினார். எப்போதும் எவரும் அணுகும் வகையில் இறுதி வரை வாழ்ந்தார்.

ஏவி.எம்மால் சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

``175 படங்கள்... 75 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் ஸ்டூடியோ... நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. இன்று ஏவி.எம் நிறுவனம் பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. என் சினிமா ஆர்வத்தைக் கண்டு தந்தை ராம சுப்பையா ஏவி.எம்மிடம் என்னை அழைத்துச் சென்றார். அப்போது நான் கண்ணதாசன் நடத்திய `தென்றல்' பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். அதைப்பற்றிக் கேட்ட ஏவி.எம், ``நீ பத்திரிகையில எடிட்டிங் பிரிவுல வேலை செஞ்சிருக்கே... சினிமா பத்தி கத்துக்க மிகச்சிறந்த இடம் எடிட்டிங் பிரிவுதான். அங்கே போ..." என்று அனுப்பி வைத்தார். 5 ஆண்டுகள் எடிட்டிங்கில் இருந்தேன். ஏவி.எம்மின் மகன் குமரனும் என்கூட எடிட்டிங் பிரிவில் டிரையினியாக இருந்தார். `களத்தூர் கண்ணம்மா' படம் எடுத்தபோது, என்னை உதவி இயக்குநராக அழைத்தார் குமரன். ஆனால் எடிட்டராக இருந்த சூர்யா என்னை அனுப்ப மறுத்தார். ஆனால், ஏவி.எம் தலையிட்டு `முத்துராமனை அனுப்பு' என்றார். அங்கிருந்துதான் என் திரைப்பயணம் தீவிரமானது.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
ஏ.வி.மெய்யப்ப செட்டியார்
Photo: Vikatan

ஏவி.எம் கடுமையான உழைப்பாளி. இரவு, பகல் ஸ்டூடியோவிலேயே இருப்பார். கேட்டால், `எனக்குப் பிடித்த விஷயம் இது. அதனால் இருக்கிறேன்' என்பார். தவறுகளை நுட்பமாகக் கண்டுபிடிப்பார். குறை பொறுக்கவே மாட்டார். கடுமையாகக் கண்டிப்பார். நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுவார். நேரத்தை அவரளவுக்கு திட்டமிட முடியாது. காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலான வேலைகளை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொள்வார். ஒவ்வொரு வேலையாக முடிய முடிய சீட்டில் அழித்துக்கொண்டு வருவார். ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்க மாட்டார். அவரது வழிகாட்டுதல்தான் எங்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கையைத் தந்தது. இது ஏவி.எம்முக்கு 113 வது பிறந்தநாள். காலம் இருக்கும்வரை அவர் நிலைத்திருப்பார்..." என்று நெகிழ்கிறார் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்.

தான் நேசித்த கலையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, மிகவும் நேர்மையாக வாழ்ந்த ஏவி.எம் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். அருகில் வந்து மகன் சரவணன் நிற்க, ``அதோ ஒரு லைட் வீணா எரியுது பார்... அணை" என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். யாருடைய பொருளாகினும் வீணாகக் கூடாது. அந்தப் பொறுப்புணர்வுதான் ஏவி.எம்மின் வெற்றி.

1979 ஆகஸ்ட் 12 அன்று அந்தப் பெருவிளக்கு அணைந்தது. ஆனால், அந்த விளக்கு எழுப்பிய வெளிச்சம் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்!